32 ஆண்டுகளாக சமூகப் பணி...

இன்றைய கணினி உலகிலும் தனது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்துக்கு வலுசேர்த்து வருகிறார் திருச்சியைச் சேர்ந்த என். ராமகிருஷ்ணன் (69).

என். ராமகிருஷ்ணன்

Updated On :

இன்றைய கணினி உலகிலும் தனது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்துக்கு வலுசேர்த்து வருகிறார் திருச்சியைச் சேர்ந்த என். ராமகிருஷ்ணன் (69). திருமணம் செய்துகொள்ளாமல், தனது வாழ்நாளையே மக்களுக்காக அர்ப்பணித்துள்ளார்.

1958-ஆம் ஆண்டு முசிறிக்கு அருகிலுள்ள அய்யம்பாளையத்தில் பிறந்த ராமகிருஷ்ணன், இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிது காலம் பத்திரிகையாளராக இருந்தவர். அகில இந்திய வானொலியில் 1995-ஆம் ஆண்டு முதல் 2023 வரை தொழில்நுட்பப் பணியாளராகப் பணியாற்றினார்.

வானொலியில் பணியில் சேர்ந்த காலம் முதல் தனது வாழ்வை முழுமையாக மக்கள் பணிக்கு அர்ப்பணித்துக்கொண்டார். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இவரைக் காணாதவர்கள் இருக்க முடியாது. ஆட்சியரகத்துக்கு வரும் கிராம மக்களுக்கு மனுக்கள் எழுதித் தரும் சேவகராக 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார்.

தனது நேர்த்தியான கையெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மனுக்களை எழுதி, பொதுநலக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு அதிகாரிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்புகிறார். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக இலவசமாக அவர் வழங்கிவரும் இந்த உதவி, எண்ணற்ற மக்கள் தங்களது பிரச்னைகளை முறையான எழுத்து வடிவில் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப் பெரிதும் உதவியுள்ளது.

கையால் எழுதப்பட்ட தனது மனுக்களை நகலெடுப்பதற்காகத் தினமும் தனது சொந்தப் பணத்திலிருந்து சுமார் ரூ.300 செலவழிக்கிறார். குறைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான தனது அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகவே இந்தச் செலவைக் கருதுகிறார்.

உய்யக்கொண்டான் கால்வாயைப் பலப்படுத்தியதிலும் இவரது பங்களிப்பு உண்டு. பாரம்பரியப் பாதுகாப்பு தொடங்கி மக்களின் அன்றாடப் பிரச்னைகள் வரை இவரது எழுத்துகள் ஆயிரக்கணக்கான மனுக்களாக அரசு அலுவலகங்களைச் சென்றடைந்துள்ளன.

ஒரு பிரச்னை குறித்து அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதுவதிலேயே இவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. ஒரு மனுவின் காரணமாகச் சமூகத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படும்போது அளவற்ற மகிழ்ச்சி அடைகிறார்.

திருச்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மன்றக் கட்டடத்தின் ஒரு பகுதியை அருங்காட்சியகமாக மாற்றியதிலும் இவரது எழுத்துப் பங்களிப்பு உள்ளது. புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பிரத்யேக சாய்வுப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தவரும் இவரே.

பொது உள்கட்டமைப்பு மற்றும் பாரம்பரியப் பாதுகாப்புக்கு அப்பாற்பட்டு, பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகக்கூடிய பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்காகவே இவரது பணி அமைந்துள்ளது. பல ஆண்டுகளாகக் குடிமைப் பிரச்னைகள் முதல் ஓய்வூதியக் கோரிக்கைகள் வரை எண்ணற்ற மக்கள் தங்களது குறைகளைத் தீர்த்துக்கொள்ள ராமகிருஷ்ணனை நாடி வருகின்றனர்.

தீவிர எம்.ஜி.ஆர். ரசிகரான இவர், 2004-ஆம் ஆண்டு முதல் 'எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம்' என்ற பெயரில் மனுக்களைச் சமர்ப்பிக்கத் தொடங்கினார். ஓர் அமைப்பின் பெயரில் செயல்படுவது தனது முயற்சிகளுக்கு அதிக நம்பகத்தன்மையை அளிக்கும் என்று அரசு அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் பரிந்துரைத்ததால் இந்த முடிவை எடுத்தார்.

தனது சமூகப் பணி குறித்து ராமகிருஷ்ணன் கூறுகையில்:

'ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியையாவது சமூகத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 200 மனுக்களைத் தாக்கல் செய்கிறேன். 1995 முதல் இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட மனுக்களைப் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளேன்.

எல்லா மனுக்களும் எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை. ஒரு மனு நிராகரிக்கப்பட்டாலும், அது அடுத்த முயற்சியை மேற்கொள்வதற்கு எனக்கு ஊக்கமளிக்கிறது.

ஒரு பிரச்னை குறித்து அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதுவதிலேயே எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. ஒரு மனுவின் காரணமாகச் சமூகத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பரியது.

மனுவில் குறிப்பிடப்படும் காரணத்தைப் போலவே, அதன் மொழிநடையும் முக்கியமானது. தெளிவாகவும், கண்ணியமாகவும், நம்பகத்தன்மையுடனும் எழுதப்பட்ட ஒரு மனு, அதிகாரியின் கவனத்தை ஈர்க்க அதிக வாய்ப்புள்ளது. ஒரு மனு எழுதப்பட்டிருக்கும் விதமே ஓர் அதிகாரியை அதைப் படிக்கத் தூண்டும்.

பிரச்னைகள் அதிகாரிகளைச் சென்றடையும் விதத்தைச் சமூக ஊடகங்கள் நிச்சயமாக மேம்படுத்தியுள்ளன. இருப்பினும், முறையாக வார்த்தைகள் கோர்க்கப்பட்ட ஒரு மனுவுக்கும் அதற்கெனத் தனி மதிப்பு உண்டு.இவரைப் பொருத்தவரை, பேனா என்பது வெறும் எழுதும் கருவி மட்டுமல்ல; ஓர் ஆயுதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.