
எல் நினோ: அச்சம் தேவையில்லை
'பசிபிக் பெருங்கடலில் தற்போது ஒரு வலுவான 'எல் நினோ' நிலை உருவாகியுள்ளது.
'பசிபிக் பெருங்கடலில் தற்போது ஒரு வலுவான 'எல் நினோ' நிலை உருவாகியுள்ளது. 2027-ஆம் ஆண்டில் எல் நினோ தாக்கத்தால் தமிழ்நாட்டின் வெப்பநிலை, வெப்ப அழுத்தம் ஆகியவற்றில் இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? அதிக வெப்பமானதாக இருக்குமா? வெப்ப அலைகள் அடிக்கடி நிகழக்கூடுமா?
இப்போது துல்லியமாகச் சொல்ல இயலாவிட்டாலும், எல் நினோ ஒரு முக்கிய வானிலை காரணியாகத் தொடரும். இதற்காகப் பதற்றம் அடையத் தேவையில்லை. ஆனால், இதை எதிர்கொள்ளவும் கையாளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்' என்கிறார் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் முனைவர் வி.ஆர். துரை.
எல் நினோ தாக்கம் குறித்து எழும் பொதுவான சந்தேகங்களுக்கு அவர் அளித்த விளக்கங்கள்:
எல் நினோ என்றால் என்ன?
மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாக உயர்வதும், அதனுடன் தொடர்புடைய வளிமண்டலக் காற்று சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களுமே 'எல் நினோ' ஆகும். இது இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வானிலை அமைப்புகளைப் பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான வானிலை நிகழ்வு. இதன் தாக்கம் ஒவ்வொரு பகுதிக்கும், பருவகாலத்துக்கேற்ப மாறுபடுகிறது.
எல் நினோவின் தற்போதைய நிலை என்ன?
2026-ஆம் ஆண்டில் தற்போதைய எல் நினோ நிகழ்வு கணிசமாக வலுவடைந்துள்ளது. 'நினோ-3.4' பகுதியின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடு, 2026 மே-ஜூலை மாதங்களில் சுமார் +1.5 டிகிரி செல்சியஸாக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் 2.0 டிகிரி செல்சியஸை எட்டியது; அதனை தொடர்ந்து ஜூலை மாத இறுதியிலும், ஆகஸ்ட் மாத மத்தியிலும் வாராந்திர மதிப்புகள் சுமார் +2.2 டிகிரி செல்சியஸ் முதல் +2.6 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தன. இந்த நிகழ்வு மேலும் வலுவடைந்து, நிகழாண்டின் இறுதியில் மிக அதிக தீவிரத்தை அடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2027-ஆம் ஆண்டு வரை நீடிக்குமா?
இந்திய பருவமழைத் திட்டத்தின் காலநிலை மதிப்பீடுகளின்படி, எல் நினோ நிகழ்வு
2027-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. உலக வானிலை ஆய்வு அமைப்பின் தகவலின்படி, பிப்ரவரி 2027 வரை நீடிப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இந்தக் காலகட்டம் முழுவதும் அதன் தீவிரம் ஒரே சீராக இருக்கும் என்று இதற்குப் பொருளல்ல.
தமிழ்நாட்டில் வெப்பமான சூழல் நிலவுமா?
இல்லை. தீவிரமான எல் நினோ நிகழ்வு சில காலகட்டங்களில் வெப்பமான சூழல் நிலவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். ஆனால், அதற்காக ஆண்டு முழுவதும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பம் நிலவும் என்று அர்த்தமல்ல.
உண்மையான வெப்பநிலை நிலவரமானது இந்தியப் பெருங்கடல் இருமுனைத் தன்மை, மேடன்-ஜூலியன் அலைவு, வளிமண்டலச் சுழற்சி, மேகமூட்டம், மழைப்பொழிவு மற்றும் பிற பிராந்தியக் காரணிகளைச் சார்ந்தும் அமையும். எனவே, எல் நினோவை மாத வாரியான நேரடி வானிலை முன்னறிவிப்பாகக் கருதாமல், ஒரு முக்கியமான காலநிலை அறிகுறியாகவே கருத வேண்டும்.
'எல் நினோ' வலுவிழ்ந்த பிறகும் வெப்பத்தை அதிகரிக்கும் தாக்கம் தொடரக் கூடுமா?
ஆம். பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை மாறுபாடு குறையத் தொடங்கும்போது, வளிமண்டலம் மற்றும் பெருங்கடல் அமைப்பு உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதில்லை. எனவே, 'எல் நினோ'வுடன் தொடர்புடைய சில காலநிலை தாக்கங்கள் அதன் உச்சகட்ட நிலைக்குப் பிறகும் தொடரக் கூடும்.
தமிழகத்தைப் பொருத்தவரை, 2027-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறித்துக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதே வேளையில், இதன் உண்மையான கால அளவு மற்றும் தீவிரம் ஆகியவை அடுத்தடுத்த கண்காணிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகளைப் பொருத்தே அமையும்.
தமிழ்நாட்டில் அதிக வெப்ப அலைகளை தானாகவே ஏற்படுத்துமா?
தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட வெப்ப அலையை பல மாதங்களுக்கு முன்பே கணிக்க எல் நினோவை மட்டும் பயன்படுத்த முடியாது. எல் நினோவின் பின்னணி, காலநிலையை மாற்றக்கூடும். சில பகுதிகளில் வெப்பமான நிலைமைகள் ஏற்படுத்தக்கூடும் . ஆனால், ஒரு தனிப்பட்ட வெப்ப அலையானது உண்மையான வெப்பநிலை, ஈரப்பதம், காற்று, மேகமூட்டம், மழைப்பொழிவு, வெப்பமான நிலைமைகள் நீடிப்பது மற்றும் உள்ளூர் மற்றும் பிராந்திய சுழற்சி ஆகியவற்றைப் பொருத்தது.
சென்னை அதிக வெப்ப அழுத்தத்தை அனுபவிக்கக் கூடுமா?
நீண்டகால வெப்ப காலங்களில் சென்னை மற்றும் பிற நகர்ப்புறங்களுக்கு சிறப்புக் கவனம் தேவை. சாலைகள், கட்டடங்கள், பிற நகர்ப்புற மேற்பரப்புகள் வெப்பத்தை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும். இரவுகளும் வெப்பமாக இருக்கும்போது, பகல்நேர வெப்பத்திலிருந்து மீண்டு வர மனித உடலுக்குக் குறைந்த வாய்ப்பே கிடைக்கிறது. எனவே, சென்னையில் வெப்பத் தயார்நிலையைப் பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவுநேர வெப்பநிலை இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
2027-இல் வெப்பமான சூழல் எவ்வளவு காலம் நீடிக்கக்கூடும்?
இது குறித்துத் துல்லியமான முடிவுத் தேதியைக் குறிப்பிடுவது தற்போதைய நிலையில் மிக முன்கூட்டியதாக இருக்கும். 2027-ஆண்டின் முதல் பாதியில், குறிப்பாக இயல்பாகவே வெப்பம் அதிகமாக இருக்கும் மார்ச் முதல் மே வரையிலான மாதங்களில், வெப்பமான சூழல் நிலவுவதற்கான வாய்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.
எல் நினோ குறித்து மக்கள் கவலைப்பட வேண்டுமா?
பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இருப்பினும், எல் நினோ என்பது முன்கூட்டியே தயாராவதற்கான ஒரு முக்கியமான அறிகுறியாகும். எல் நினோ தானாகவே தொடர்ச்சியான கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் என்று கருதுவதற்குப் பதிலாக, சமீபத்திய பருவகால, நீண்ட கால முன்னறிவிப்புகளைக் கண்காணிப்பதிலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாவட்ட அளவிலான எச்சரிக்கைகளைப் பின்பற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




