காற்றின் மொழி
தலைமுறைகளை இணைத்து, முதியோரின் அனுபவத்தை சமூகத்தின் புதிய சக்தியாக மாற்றுவதற்கு தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட ஆழ்வார்குறிச்சியில் இயங்கிவரும் வாமா அறக்கட்டளை முயன்றுவருகிறது.
தலைமுறைகளை இணைத்து, முதியோரின் அனுபவத்தை சமூகத்தின் புதிய சக்தியாக மாற்றுவதற்கு தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட ஆழ்வார்குறிச்சியில் இயங்கிவரும் வாமா அறக்கட்டளை முயன்றுவருகிறது.
இதுகுறித்து அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முத்துகுமாரசாமி கூறியது:
'2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாமா அறக்கட்டளை, முதியோர் பராமரிப்பை வெறும் சேவையாகப் பார்க்கவில்லை. முதியோர் சமூகத்தின் சுமை அல்ல. அவர்கள் சமூகத்தின் அறிவு, அனுபவம், மனிதவளச் செல்வம் என்ற பார்வையுடன் பயணத்தைத் தொடங்கியது.
கரோனா காலத்தில் பல மாதங்கள் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர். குறிப்பாக, தினக்கூலி வேலை, வயல்வெளிப் பணிகள், வீட்டு வேலைகள் போன்றவற்றை நம்பி வாழ்ந்த முதியோருக்கு வேலை இல்லாமல் போனது. வருமானம் இல்லை. வெளியில் செல்ல முடியவில்லை. சிலருக்கு ஒரு வேளை உணவுக்கே சிரமம் ஏற்பட்டது. அந்தத் தேவையை உணர்ந்த வாமா அறக்கட்டளை, ஆரம்பத்தில் சுமார் 18 முதியோருக்கு மதிய உணவை வழங்கத் தொடங்கியது. இன்று சுமார் 42 முதியோருக்கான தொடர்ச்சியான உணவுப் பாதுகாப்பு முயற்சியாக வளர்ந்துள்ளது. சிலர் மையத்துக்கு வந்து உணவைச் சாப்பிடுகிறார்கள். நடமாட முடியாத சில முதியோருக்கு உணவு அவர்களின் வீட்டின் வாசலுக்கே கொண்டு செல்லப்படுகிறது.
வயது முதிரும்போது உடல்நலப் பிரச்னைகள் வருவது இயல்பானது. அதேசமயம் தனிமை, பேசுவதற்காக ஒருவர் இல்லாமை, சமூகத்திலிருந்து விலகும் உணர்வு ஆகியவை முதியோர்களுக்கு பெரிய சவால்களாக மாறுகின்றன. முதியவர்களின் வேதனையை உணர்ந்த வாமா அறக்கட்டளை 'சங்கமம்' என்ற பெயரில் வாரம்தோறும் முதியோர்கள் சந்திப்பை ஏற்படுத்தி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.
முதியோர் நலப் பராமரிப்பு, வீட்டிலேயே உணவையும் மருந்தையும் வழங்குதல் போன்ற முயற்சிகளுடன், முதியோரின் சமூக மற்றும் மனநலத் தேவைகளுக்கும் வாமா அறக்கட்டளை முக்கியத்துவம் அளித்து வருகிறது.
'காற்றின் மொழி' என்ற திட்டத்தின்படி, முதியோர்களுடன் மெய்நிகர் வழியாக உரையாடவும், அவர்களின் குரலைக் கேட்கவும், அவர்களுடன் நேரத்தைப் பகிரவும் வாமா அறக்கட்டளை முயற்சி செய்து வருகிறது. அதாவது, வாமா அறக்கட்டளையின் கணினிப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள், பயிற்சிக் கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக, தினமும் கூடுதலாக 30 நிமிடங்களை முதியோருக்காக வழங்குகிறார்கள். கணினி வகுப்பு முடிந்ததும், 30 நிமிடங்கள் அவர்கள் முதியோருடன் பேசுகிறார்கள். அவர்களின் கதைகளை அறிகிறார்கள். சில நேரங்களில் பழைய நினைவுகள் பகிரப்படுகின்றன; சில நேரங்களில் புதிய தலைமுறையின் உலகம் அறிமுகமாகிறது'' என்கிறார் முத்துகுமாரசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

