மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!: கம்பனுக்கு முன்பே அகவற்பாவில் ராமாயணம்!

கம்பனுக்கு முன்பு தமிழில் ராமாயணம் பற்றிய விரிவான நூல் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அன்று. ஏனெனில் பாரதமும், ராமாயணமும் பாரதத்தில் பேசப்பட்ட தொல்பழங்கதைகள் ஆகும். சங்ககால நூல்களுக்குக் கடவுள் வாழ

கம்பனுக்கு முன்பு தமிழில் ராமாயணம் பற்றிய விரிவான நூல் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அன்று. ஏனெனில் பாரதமும், ராமாயணமும் பாரதத்தில் பேசப்பட்ட தொல்பழங்கதைகள் ஆகும்.

சங்ககால நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பெருந்தேவனார் என்பர். இவர் கி.பி.5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்படுகிறார். இவர் எழுதிய பாரதத்திலிருந்து சில பாடல்கள் நச்சினார்க்கினியரின், தொல்காப்பியப் புறத்திணை உரையிலிருந்து தெரியவந்துள்ளன. இவை அகவற்பாவில் அமைந்தனவாகும்.

சங்க காலத்தில் "மறக்காப்பியம்' இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி. இம்மறக் காப்பியமானது கதை சொல்லுகிற பாங்கில் அமைந்திருக்க வேண்டும் என்பது தகடூர் யாத்திரை போன்ற நூல்களால் தெளிவாகிறது. இவ்வாறு சொல்லப்படுகிற கதை உரை மரபைப் பின்பற்றி, ராமாயண, மகாபாரதக் கதைகள் தமிழில் முதல் முறையாகப் பாடப்பட்டன என்று பேராசிரியர் து.சீனிச்சாமி குறிப்பிடுகிறார். மேலும், தகடூர் யாத்திரையைத் "தென்னாட்டுப் பாரதம்' என்று பேராசிரியர் சு. வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

சங்ககால யாப்பு முறையை நுணுகி ஆராயும்போது, அந்த யாப்பு முறையில் வாய்மொழிக் கூறுகள் படிப்படியாக வளர்ச்சிபெற்று, செவ்வியல் நிலையை அடைந்திருப்பதைக் காணமுடியும்.

சங்ககாலத்துக்குச் சற்றுமுன் வரை, மறவியல் காப்பியக் கதைகள் வாய்மொழிக் கூறுகளை உள்ளடக்கியனவாக இருந்துள்ளன. இவை வாய்ப்பாட்டுத் தன்மைகளுடன் பொது அவைகளில் பாடப்பட்டிருக்க வேண்டும் என்பது அறிஞர் கருத்தாகும். ஏனெனில், இத்தகைய வாய்மொழி மரபுகள் சிலம்பு, மேகலை, பெருங்கதை ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன. இத்தகைய வாய்மொழிக் கூறுகள் அமைந்த தகடூர் யாத்திரை என்ற கதைபொதி பாடலின் காலம் கி.பி.6-ஆம் நூற்றாண்டு என அறுதியிடப்படுகிறது.

இந்தக் காலகட்டத்திலேயே ராமாயண, மகாபாரத நூல்களும் அகவற்பாவில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ராமாயணக் கதையைச் சைனர்களும் எழுதியுள்ளனர். இந்நூல் சைன ராமாயணம் என அழைக்கப்படுகிறது. எனினும் சைன, பெüத்த வருகைக்கு முன்பே தமிழ்நாட்டில் வைதிகநெறி  காலூன்றிவிட்டது என்பது வரலாற்று உண்மை. இவ்வைதிக நெறிச் சடங்குகளில் பாரதம், ராமாயணம் கூறல் என்பது புழக்கத்தில் இருந்த ஒன்றாகும். இக்கதை அப்பழங்கால மரபுப்படி அகவற்பாவில் பாடப்பட்டிருக்க வேண்டும் என்பதையே "ஆசிரியமாலை' என்ற தொகுப்பின் மூலமும், நச்சினார்க்கினியர் உரையின் வாயிலாகவும் நாம் அறிகிறோம்.

பாரதம் பாடிய பெருந்தேவனாரின் பாடலுக்கும் அகவற்பாவில் அமைந்த பழைய ராமாயணத்துக்கும் நெருங்கிய ஒற்றுமையைக் காண முடிகிறது. எனவே, இவை இரண்டும் சமகாலத்தவை என்று துணிய இடமுண்டு.

பழைய ராமாயணத்தில் அமைந்த மூன்றாம் பாடல் வருமாறு:

""மேலது வானத்து மூவா நகரும்

கீழது நகர் நாடும் புடையன

திசைகாப்பாளர் தேயக் குறும்பும்

கொள்ளை சாற்றிக் கவர்ந்து முன்தந்த

பல்வேறு விழுநிதி யெல்லாம் அவ்வழிக்

கண்ணுதல் வானவன் காதலன் இருந்த

குன்றேத்து தடக்கை அனைத்தும் தொழிலுறத்

தோலாத் துப்பின் தாழ்நிலை வாழ்க்கை

வலம்படு மள்ளற்கு வீசி, இலங்கையில்

வாடா நொச்சி வகுத்தனன்

மாலை வெண்குடை அரக்கர் கோவே''

இப்பாடலில், ராமாயணம் தமிழ்ப் புறத்திணை மரபில் பாடப்பட்டுள்ளதைக் காணவேண்டும். இப்பாடலில் ராவணன், நொச்சி சூடி இலங்கையில் மதில் காத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராவணன் மூவுலக நாயகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ""கண்ணுதல் வானவன் காதலன்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அவன் சிவனைப் போற்றியவன் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாடலின் யாப்பு நடையை நுணுக்கமாக ஆராயும்போது, கதை கூறுதலுக்குப் பயன்பட்ட அகவற்பாவானது, மிகச் செறிவாகக் கதையை உள்ளடக்கிய செவ்வியல் தன்மையைத் தழுவி மாற்றம் பெற்றுவிட்டதைப் பார்க்க முடிகிறது.

இவற்றை வைத்து ஆராயும்போது, பழைய ராமாயணம், பாரதம், தகடூர் யாத்திரை போன்ற பாடல்கள் கம்பனுக்கு முற்பட்ட காலத்தில் சங்க யாப்பு முறையைத் தழுவி கதை உரைத்தலுக்கு அதே அகவற்பாவைப் பயன்படுத்திப் பாடப்பட்டவை என்பது உறுதியாகிறது. இதற்குப் பின்னால், பக்தி எழுச்சிக்காலத்தில் காப்பிய ஒளியை உலகுக்கு ஈந்த கம்பர், அப்போது நிலவிய விருத்தப்பாவை எடுத்துக் கொள்கிறார்.

முன்னுள்ளவற்றை ஈர்த்துப் பயன்படுத்திக்கொள்ளும் இயல்பு படைத்த கம்பர், உணர்ச்சி ஆளுமைகளைக் கொடுக்க இவ்விருத்தப்பாவைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே யாப்பிலக்கண வரலாறு காட்டும் உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com