மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: நல்திறம் படராக் கொற்கை வேந்தே!

கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள். அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள்தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த
மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: நல்திறம் படராக் கொற்கை வேந்தே!

கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள். அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள்தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்? அதற்கு என்னதான் ஆதாரம்?

லப்பதிகாரம் "மாணிக்கத்தை'ப் போற்றுகிறது. பட்டினப்பாக்கத்திலும், மருவூர்ப்பாக்கத்திலும் மணிகளைத் துளையிடுவோர், மணி வேலைகளைச் செய்வோர் இருந்ததையும் செப்புகிறது சிலப்பதிகாரம். (இந்திரவிழவூரெடுத்த காதை) மன்னனைப் பார்த்து முறையிட வந்த கண்ணகி,

"நல்திறம்படராக் கொற்கை வேந்தே,

என்காற் பொற்சிலம்பு மணியுடையரியே'

(வழக்குரைகாதை-66-67)

என்கிறாள்.

பாண்டிய மன்னனை, "மதுரை வேந்தே!' என்று கண்ணகி சொல்லவில்லை. கொற்கையில் விளையும் முத்து உனது உடைமையாக இருக்கும் செருக்கினால்தானே, நீ கண்மூடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறாய் என்று இடித்துக் கூறும் பாவனையில் பேசியவள் கண்ணகி. காரணம், "என் காற்பொற் சிலம்பின் உள்ளே உள்ள பரல்கள் மாணிக்கங்கள் தெரியுமா உனக்கு?' என்றாள். வழக்காட வந்த கண்ணகி, அரசன் முன் வைக்கிற வாதமே இது ஒன்றுதான்.

முத்தைக் காட்டிலும் மதிப்புமிக்க மாணிக்கங்களைப் பரல்களாகக் கொண்ட சிலம்பு பெருவணிகக் குடும்பத்தினராகிய எங்களைத் தவிர அரசனான உன்னிடம் கூட இருக்கமுடியாது என்ற குலச்செருக்கோடு கூடிய வாதம் கண்ணகியுடையது.

கொற்கை முத்துக்கள், பாண்டிய மன்னனின் ஏகபோக வாணிப உடைமையாக இருந்த காலம். எனவே, "புகார்' நகர வணிகர்கள் கொற்கை முத்துக்களை வாங்கவோ, அயல் நாட்டினருக்கு விற்கவோ முயலவில்லை. (புகார் நகர வணிகர்கள் வேறு முத்துக்களை வாங்கி, விற்ற செய்தி சிலப்பதிகாரத்தில் உண்டு).

கோவலன் கொலை செய்யப்பட்டபின் கோவலன் கையிலிருந்த சிலம்பு பாண்டியனிடம் வந்துவிட்டது. இப்போது பாண்டிய மன்னனிடம் இரண்டு வகைச் சிலம்புகள் இருக்கின்றன. இந்த நிலையில், கண்ணகி ஒற்றைச் சிலம்போடு வருகிறாள். இதனைக் கண்டதும், "வையைக்கோன் கண்டளவே தோற்றான்' (வழக்குரைகாதை வெண்பா). ஆம்; பாண்டிய மன்னனின் நாடி தளர்ந்து விடுகிறது. எனினும் நம்பிக்கையோடு, "யாம் உடைச்சிலம்பு முத்துடை அரியே' என்கிறான்.

கண்ணகி காற் சிலம்பை உடைத்தாள். "கொன்றச் சிலம்பைக் கொணர்க' என்று உத்தரவிட்ட மன்னனின் வாயிலே போய் கண்ணகி காற்சிலம்பின் மாணிக்கம் தெறித்து விழுந்தது. மாதர்குல மாணிக்கம் மகத்தான வெற்றிபெற்றாள்.

வேழநாடு-மாணிக்கம்-வணிக வர்க்கம்; பாண்டியநாடு-முத்து-மன்னர் வர்க்கம். கண்ணகி தம் நாட்டின் சிறப்பை நன்கறிந்திருந்த நிலையில், பாண்டிய மன்னரது சிலம்பில் முத்துக்கள்தான் இருக்கும் என்ற நம்பிக்கையிலே வாதாடினாள், வென்றாள். அதனால்தான், வழக்குரை காதையில் முன்னரே வாயிற் காவலனும் "கொற்கை வேந்தே' என்கிறான். கண்ணகியும் கொற்கை வேந்தே என்கிறாள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com