தொண்டியன்ன இவள் நலனே...

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. "நல்ல குறுந்தொகை' என்ற சிறப்பைப் பெற்ற நூல். குறுந்தொகையில் காணப்படும் நெய்தல் திணையில் அமைந்த புலவர் அம்மூவனார் இயற்றிய பாடல் ஒன்று, தலைவன், தலைவியோடு களவொழுக்
Published on
Updated on
2 min read

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. "நல்ல குறுந்தொகை' என்ற சிறப்பைப் பெற்ற நூல். குறுந்தொகையில் காணப்படும் நெய்தல் திணையில் அமைந்த புலவர் அம்மூவனார் இயற்றிய பாடல் ஒன்று, தலைவன், தலைவியோடு களவொழுக்கத்தில் ஈடுபட்டு அவளைப் பிரிய நினைக்கும்போது, தோழி தலைவனைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இதற்கு, இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி கூறியதாக இதன் துறை அமைந்துள்ளது.

கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலத்தில், தலைவிக்கு மட்டுமல்லாது அங்குள்ள புன்னை மரத்துக்கும் "விண்மீனைக் கண்டது போன்று மென்மையான அரும்புகள் மலர்ந்துள்ள முடம்பட்டு முதிர்ந்த புன்னை மரத்தின் கரிய கிளையில் புட்கள் மிகுதியாகத் தங்கியிருக்கும் அத்தகைய மென்மையான நிலமாகிய கடற்கரைக்குத் தலைவனே'' என்று உவமை கூறப்பட்டுள்ளது.

தலைவியைப் பிரிந்து செல்ல நினைக்கும் தலைவனைப் பார்த்து, "நெய்தல் பூவையொத்த மையுண்ட கண்கள் வருந்தி அழ, இவளைப் பிரிந்து நீ சென்றால் அது மிகப்பெரும் செயலாகும்' என்று தோழி கூறுகிறாள்.

ஏனெனில், களவொழுக்கத்தில் ஈடுபடும் தலைவனும் தலைவியும் பிரிதலை கனவிலும் எண்ணிப்பார்க்க மாட்டார்கள். பிரிதல் என்பதே நரகம் என்று சொல்லும்படி அக்காலத்தில் தலைவன் - தலைவியருக்குத் துன்பம் தந்திருக்கிறது. அத்தகைய நரக வேதனையை தலைவிக்குக் கொடுத்துவிடாதே என்ற பொருள்பட, தோழி வலியுறுத்திக் கூறுகிறாள்.

மேலும், ""கீழ் காற்றால், கடலின் அலைகளால் உடைக்கப்படும் மணல் மேட்டில் கிடக்கும் பழைய படகின் அழிவைப்போக்கும் புதுவலைப் பரதவர்கள், உயர்ந்த மணலை உடைய அடைகரையில் வந்து கிடக்கும் சுறாமீன் கூட்டத்தை அங்குள்ள அனைத்துப் பரதவர்களுக்கும் பகிர்ந்தளிப்பர். அத்தகைய வளமிக்க தொண்டி என்னும் பட்டினத்தை ஒத்த இவளது அழகு அழியாமல் இவளுக்கே உரித்தாகுமாறு இவளையும் உன்னுடன் அழைத்துப் போ. இல்லையெனில் உனைப் பிரிந்த ஏக்கத்தில் இவளழகு கெட்டுவிடும்'' என்றும் தலைவிக்காகப் பரிந்துரைக்கிறாள்.

புலவர் அம்மூவனார் இக்கருத்தைக் கூறுகையில், அழகான உவமையைக் கையாண்டுள்ளார். அதாவது, தலைவியின் அழகுக்கு சிறுசிறு உவமைகள் கூறாமல், தொண்டி என்னும் ஊரின் மொத்த அழகையும் உவமிக்கிறார். இதன்மூலம் தலைவியின் அன்பு யாராலும் அளவிட முடியாத அளவு மிகப் பரந்துபட்டது என்பதை நுட்பமாகவும் மிக அழகாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற உவமைகள் சங்கப் பாடல்களுக்கே உரிய சிறப்புகளாகும்.

மேலும், இப்பாடலில் உள்ளுறையாகப் பதிக்கப்படுவது, வளமிக்க பரதவர்கள் எந்த முயற்சியுமின்றி தாமே வரும் சுறாமீன்களைத் தாங்களும் சுவைத்து, பிறருக்கும் பிரித்துக் கொடுப்பதுபோல் தலைவன் செயல் உள்ளது. தலைவியைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளாமல், சுலபமாக வந்து மீண்டும் மீண்டும் களவொழுக்கத்தில் ஈடுபட்டுக் காணாமல் போகிறான். இதனால், தலைவியைக் கண்டோர் காமுறுவதும், தூற்றுவதும் என தலைவியின் வேதனையைத் தலைவன் புரிந்து கொள்ளாததும் நல்லதல்ல என்ற பொருள்பட மிக அழகாக இப்பாடலை அமைத்துள்ளார். உவமை நயமும், உள்ளுறையுமாக, தலைவனுக்கு அறிவுறுத்தும் பாங்கில் அமைந்த அப்பாடல் இதுதான்.

""வான்கடல் பரப்பில் தூவதற்கு எதிரிய

மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த

முடவுமுதிர் புன்னை தடவுநிலை மாச்சினைப்

புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப

நெய்தல் உன்கண் பைதல் கலுழப்

பிரிதல் எண்ணினை யாயின் நன்றும்

அரிது துற்றனையால் பெரும் உரிதினில்

கொண்டாங்குப் பெயர்தல் கொண்டலொடு

குரூ உத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்

பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்

மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி

மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்

வளங்கெழு தொண்டி யன்ன இவள் நலனே!''

(குறு.நெய்தல்-பா10)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com