சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!: "முகம்' என்ற சொல் தமிழ்ச் சொல்லா?

"முகம்' தமிழ்ச் சொல்லே! அல்லது வடசொல்லா? இலக்கிய விவாதத்தில், "முகம் வடசொல்லே' என்று கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது தவறு. பரிதிமாற் கலைஞர் தம் "தனித்தமிழ்' இயக்கத்தின் வழிகாட்டி எனலாம். ஏனெனில், "சூரி

Published On :28 டிசம்பர் 2023, 9:58 pm IST

"முகம்' தமிழ்ச் சொல்லே! அல்லது வடசொல்லா?

இலக்கிய விவாதத்தில், "முகம் வடசொல்லே' என்று கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது தவறு. பரிதிமாற் கலைஞர் தம் "தனித்தமிழ்' இயக்கத்தின் வழிகாட்டி எனலாம். ஏனெனில், "சூரிய நாராயண சாஸ்திரியார்' என்ற தன்னுடைய வடமொழிப் பெயரைத் தமிழில் மாற்றி அமைத்துக்கொண்டவர். எனினும், "மொழி' என்பதை அவரின் "தமிழ் வரலாறு' என்னும் நூலில் ஒரு சில இடங்களில் "பாஷை' என்றே குறிப்பிடுகிறார். காரணம் சொல்லாராய்ச்சி தொடங்கிய காலம். எனவே, அவர் "முகம்' வடசொல் எனக் கூறியிருப்பினும் அஃது உண்மை அன்று.

ஏனெனில், அக்கால கட்டத்தில் வடசொற்கள் எனக் கூறப்பட்டவை எல்லாம் இக்கால சொல்லாய்வில் பாவாணர் போன்றவர்களால் அவை தமிழ்ச் சொற்களாகச் சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான "முகம்' என்ற சொல்லும் தமிழ்ச் சொல்லே.

வடமொழியில் "முஹ' என்ற ஒரு சொல்லைக்கொண்டே முகம், வாய் எனப் பொருள் கொள்வர். என்றாலும், "முஹ' என்ற சொல்லுக்கு வேரும் இல்லை மூலமும் இல்லை. தமிழ் "முகம்' காட்ட வடமொழி "முஹ' ஆனது.

முகம் தமிழ்ச்சொல் என்பதற்கான வேர் மூலங்கள்:

உல்-மூலம். உல்-முல் என ஆகும். முல் (முன்) முன்னோக்கிச் செல்லல்-வளர்தல் - கருத்து வேர்.

முல்-முன்-முளு-முழு-முகு-முக-முகம் என வரும்.

முல்-முலை-முன்னோக்கி எழுந்த மார்பு.

முள்-முளை-முன்னோக்கி (மேல்நோக்கி) வித்து முளைத்த வெளிப்பாடு.

முள்-முட்டு-மொட்டு-பூவின் முன்னோக்கிய நிலை-அரும்பு.

முன்-முளு-முகு-முகை-அரும்பு.

முகு-முகம்-தலையின் (முன்னோக்கிய) முன்புறம்.

எனவே, "உல்' என்ற மூலத்தில் "முல்' என்ற வேரில் தோன்றியது "முகம்' என்னும் தமிழ்ச் சொல்.

முகம் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு தமிழ் மூலம்-வேர் இருப்பதால்தான் காட்ட முடிந்தது. வடமொழியில் அவ்வாறு காட்ட இயலாது. காரணம், "முக'த்துக்கு மூலம் இல்லை. ஆகவே, தமிழ்மூலம்-வேர் வழிவந்த தமிழ்ச்சொல்லை "வடமொழிச் சொல்' என்று கூறுவது தவறானது.

இனி, "முகம்' கொண்டு தோன்றிய தமிழ்ச் சொற்களைக் காணலாம். முகம்+முகனை (மோனை), முகனைக்கல், முகர்தல் (நுகர்தல்), முகரை, முகவாய் (மோவாய்), முகவு, முகப்பு, முகக்கொம்பு, முகமண்டபம், முக வாசல், முகவுரை, உரைமுகம், துறைமுகம், நூன்முகம், போர்முகம் போன்று இன்னும் எத்தனையோ தமிழ்ச் சொற்கள் உள்ளன.

இனி, தமிழ் முகத்தைக்கொண்டு பின்னொட்டாக வடமொழிச் சொற்கள் சேர்ந்து தோன்றிய இருபிறப்பு சொற்களைக் காணலாம்.

முகராசி, முகஸ்துதி, முகச்சவரம், முகலட்சணம், முகவசியம், முகவாசம், முகாமை, முகாம், முகவாதம், முகதாட்சண்யம் போன்ற சொற்கள் பலப்பல உண்டு. இவற்றையெல்லாம் வடசொல்லாகக் கருதுவதால் இவற்றில் உள்ள "முகம்' என்பதையும் வடசொல்லாகத் தவறாகக் கருதும் நிலை ஏற்பட்டது.

"முகம்' என்ற சொல்லுக்குத் தோற்றம், முன்பு, தலையின் முன்புறம், நோக்கு, முகமன், வீட்டின் முன்புறம், நாடகச்சந்தி ஐந்தினுள் முதலது, தொடக்கம், முகத்தின் முன் நீண்டுள்ள மூக்கு, முதலிய பல பொருள்கள் தமிழில் உண்டு.

எனவே, சொல்லாய்வின் மூலமும், இலக்கியப் பயன்பாட்டின் மூலமும், பொருள் தொடர்பு மூலமும் "முகம்' என்னும் சொல் தமிழ்ச் சொல்லே என மெய்ப்பிக்க முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.