வசனகர்த்தாக்களின் "பிதாமகர்' இளங்கோவன்!

மெளனப் படங்களில் தொடங்கிய தமிழ் சினிமா, பிறகு பேசும்படமாகப் பரிணாமம் பெற்றபோது புராணக் கதைகளை வைத்தே படங்கள் எடுக்கப்பட்டன. வசனத்துக்குப் பதிலாக பெரும்பாலும் பாடல்களே பயன்படுத்தப்பட்ட காலம் அது. ஒரு ப
வசனகர்த்தாக்களின் "பிதாமகர்' இளங்கோவன்!

மெளனப் படங்களில் தொடங்கிய தமிழ் சினிமா, பிறகு பேசும்படமாகப் பரிணாமம் பெற்றபோது புராணக் கதைகளை வைத்தே படங்கள் எடுக்கப்பட்டன. வசனத்துக்குப் பதிலாக பெரும்பாலும் பாடல்களே பயன்படுத்தப்பட்ட காலம் அது. ஒரு படத்தில் சராசரி இருபத்தைந்து பாடல்கள்கூட இடம்பெறுவதுண்டு. பாடல்களின் ஆதிக்கத்திலிருந்து தமிழ்த் திரைப்படத்தை விடுவித்து முன்னகர்த்தும் ஒரு படைப்பாளி தேவைப்பட்டபோது பரிணமித்தவர்தான் இளங்கோவன்.

 ÷இளங்கோவனின் இயற்பெயர் தணிகாசலம். சொந்த ஊர் செங்கல்பட்டு. இவர் பிறந்த ஆண்டு, மாதம் மற்றும் இறந்த ஆண்டு, மாதம் போன்றவை அறியக் கிடைக்கவில்லை (சரியான பதிவு இல்லை).

 ÷தமிழின் தலைசிறந்த முதல் நவீன இலக்கிய இதழான "மணிக்கொடி' எழுத்தாளராக அறிமுகமானார். வா.ரா., பி.எஸ்.ராமையா, யோகியார் ஆகியோரும் இளங்கோவனோடு மணிக்கொடியில் எழுதியவர்கள். கவனத்துக்குரிய ஆக்கங்களை மணிக்கொடியில் எழுதிவந்த இளங்கோவன், பிறகு "தினமணி'யின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

 ÷இளங்கோவன், பழந்தமிழ் இலக்கியங்களில் தீவிர பிடிப்பும், ஆழ்ந்த புலமையும் கொண்டவர் மட்டுமல்ல, ஆங்கிலப் புலமையும் நிரம்பப் பெற்றவர். திரைப்படத்துறை அவரைக் கவர்ந்திழுத்தது. வெகுஜன ரசனையை மேம்படுத்த, தன் படைப்பாற்றலின் வெளிப்பாட்டுத் தளமாக சினிமாவைக் கருதி, அத்துறையில் அடியெடுத்து வைத்தார். திரைப்படத்தைப் பாடல்களிலிருந்து வசனத்துக்கு மடைமாற்றம் செய்து, அதில் மாபெரும் வெற்றிபெற்ற முதல் எழுத்தாளர் என்ற முத்திரையைப் பெற்றவர்.

 ÷1937-இல் "அம்பிகாபதி' படம் வெளிவந்தது. கம்பர் மகனின் துன்பவியல் கதையிது. சேலம் சங்கர் பிலிம்ஸ், படத்தைத் தயாரித்தது. இந்தக் காதல் காவியத்துக்கு இளங்கோவன் வசனம் எழுதினார்.

 ஆங்கில மொழியறிவு அதிகம் உள்ளவராதலால், உலக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் சாகாவரம்பெற்ற "ரோமியோ ஜூலியட்'டை திரும்பத் திரும்ப வாசித்தார். தேர்ந்த அதன் காதல் சாராம்சங்களை உள்வாங்கி அம்பிகாபதியில் புகுத்தி, அற்புதமான வசன வீச்சுகளைப் படைத்தார்.

 ÷படம் பிரமாத வெற்றிபெற்றது. பத்து மாதம் தொடர்ந்து ஓடி சாதனை புரிந்தது. அன்று தொடங்கிய இளங்கோவனின் வசன மேலாண்மை, பத்துப் பதினைந்து ஆண்டுகள் திரைப்படத்துறையில் தொடர்ந்தது. அதன் பயனாக தமிழ்த் திரையுலகம் வசனத்துறையில் புதிய திசையில் பயணப்பட்டது.

 ÷இளங்கோவனின் சிகரப் படைப்பு "கண்ணகி'. ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்து 1942-இல் வெளிவந்தது. ஆர்.எஸ்.மணிதான் இப்படத்தின்

 இயக்குநர்.

 ÷சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து கற்றவர் இளங்கோவன். அத்துடன் கண்ணகி கதை, கர்ணபரம்பரையாக தெருக் கூத்தாகவும், இசை நாடகமாகவும், நாடோடிப் பாடல்களாகவும் இசைக்கப்பட்டு வந்தது. இவை அனைத்தையும் நுட்பமாக ஆராய்ந்து "கண்ணகி' படத்துக்கு வசனம் தீட்டினார் இளங்கோவன். பழைய வசனமொழியை மாற்றியமைத்து பின்வரும் படைப்பாளிகளுக்குப் பாதைபோட்டுக் கொடுத்தவர் இளங்கோவன்.

 ÷அந்தக் காலத்தில் அவதார நடிகர்களாகப் புகழ்பெற்ற எம்.கே.தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும் தங்களைத் தேடிவரும் தயாரிப்பாளர்களிடம் இளங்கோவன் வசனம் எழுதினால் மட்டுமே நடிக்க முடியும் என்று நிபந்தனை போடுவார்களாம். அப்படிப்பட்ட நிபந்தனையுடன் எடுக்கப்பட்டு, இமாலய வெற்றி பெற்ற படங்கள்தான் "சிவகவி'யும், "ஹரிதாஸý'ம்.

 ÷1944-இல் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்து இளங்கோவன் வசனம் எழுதிய படம் "மஹா மாயா'. இந்தக் கதையில் நீலன் என்று ஒரு பாத்திரப்படைப்பு. புன்னகைத்தபடியே கொடுமைகள் புரியும் ஆங்கில பாணி அமைப்புகொண்ட இந்தப் பாத்திர சித்திரிப்பு வித்தியாசமாக இருந்ததோடு அல்லாமல் பின்வந்த படங்களில் வில்லன் பாத்திரக் கட்டமைப்புக்கு முன்மாதிரியாகவும் இருந்தது. இந்தப்பாணி தமிழ் நடிகர்களால் இன்றும் பின்பற்றப்படுவதற்கு இளங்கோவன்தான் நதிமூலம் எனலாம்.

 ÷ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான "குண்டலகேசி'யைப் படமாக்கியபோதும் இளங்கோவன்தான் வசனம் எழுதினார். 1946-இல் இந்தப் படம் வெளிவந்து அவரின் வசனச் சிறப்பை மேன்மேலும் உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

 ÷1949-இல் அவரது படம் "இன்பவள்ளி' வெளிவந்தது. அப்போதுதான் இளங்கோவனுக்கு இறங்குமுகம் தொடங்கியது. அன்றைய அரசியல் பின்புலத்தாலும், அதீத விளம்பரத்தாலும் அண்ணா, கருணாநிதி போன்றோர் எழுத்து மேலோங்கியது. இளங்கோவன் தொட்டு நகர்த்திய இடத்திலிருந்து திரைப்படத் தொழிலின் அடுத்த கட்டப் பயணம் தொடங்கியது.

 ÷1950-ஆம் ஆண்டு "ஏழைபடும் பாடு' படம் வெளிவந்தது. இந்தப் படத்துக்கு வசனம் இளங்கோவன் மட்டும் அல்லாமல் மேலும் இருவர் இணைந்து எழுதினார்கள். இதுவே இளங்கோவனுக்குச் சரிவு ஏற்படக் காரணமானது. 1952-இல் வெளிவந்த "காஞ்சனா'விலும் இளங்கோவனுக்கு மீண்டும் சரிவுதான் ஏற்பட்டது. ஆயினும் அவர் தன்னம்பிக்கை பூர்வமான வாய்ப்புகள் ஏதுமற்று பொருளாதார நிலை தாழ்ந்து, தன் பன்னிரண்டு குழந்தைகளோடு குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டார்.

 ÷இவரிடம் உதவியாளராக வசனப் பயிற்சி பெற்றவர்தான் இயக்குநர் ஸ்ரீதர். எழுத்தாளர் விந்தன், "சுபதினம்' எம்.எஸ்.கண்ணன், சாண்டில்யன் போன்றோர் இவரின் அன்பார்ந்த நண்பர்கள்.

 ÷""படைப்பாற்றலால் தமிழ்மொழிக்குப் பங்காற்றியவர்களுள் திரைப்படத் துறையில் தனக்குப் பிடித்த ஒரே எழுத்தாளர் இளங்கோவன்தான்'' என்று ஜெயகாந்தன் "தனது கலையுலக அனுபவங்கள்' கட்டுரையில் இவரைப் புகழ்ந்துரைத்துள்ளார்.

 ÷இளங்கோவன் காலமாவதற்கு சில தினங்களுக்கு முன்பு உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடந்த ஒரு விழாவுக்கு அவர் சென்றிருந்தார். அங்கு, கையில் ஒரு கிழிந்த ஆங்கிலப் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார் இளங்கோவன். அதைப் பார்த்த ஓர் இயக்குநர் அவரைச் சந்தித்து, அவரது தமிழ்ச் சேவையின் உன்னதம் குறித்துப் பாராட்டிப் பேசினாராம்.

 ÷அப்போது, இளங்கோவன் அவரிடம், ""என்னையும் அண்ணாவையும், கருணாநிதியையும்போல ஆயிரம் எழுத்தாளர்களை இந்தத் திரைப்படத்துறை தோற்றுவிக்கும்'' என்று சொன்னாராம். எண்ணற்ற எழுத்துக் கலைஞர்கள் உருவாகி தமிழ்த் திரைப்படம் செழித்து வளர முதல் வித்திட்டவர் இளங்கோவன் என்பது எக்காலத்திலும் மாறாத உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com