"எழுத்துலகச் சிற்பி' ஜெகசிற்பியன்

துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதித்தவர்களுள் அமரர் ஜெகசிற்பியனுக்கு சிறந்த இடமுண்டு. அவர் எழுதுகோலை ஏந்தியபோது தக்க வரவேற்பு அவருக்கு இல்லை. துப்பறியும் நாவல்கள், ஒழுக்க
"எழுத்துலகச் சிற்பி' ஜெகசிற்பியன்

துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதித்தவர்களுள் அமரர் ஜெகசிற்பியனுக்கு சிறந்த இடமுண்டு. அவர் எழுதுகோலை ஏந்தியபோது தக்க வரவேற்பு அவருக்கு இல்லை. துப்பறியும் நாவல்கள், ஒழுக்கம் குலையாத பாக்கெட் நாவல்கள் என்று வியாபார நோக்கமுடைய இதழாசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப "ஆர்டர் இலக்கியங்கள்' எனத் தொடக்க காலத்தில் அவர் எழுதினாலும், ஒரு கால கட்டத்தில் சரித்திரப் புதினங்கள் தாம் அவரைத் தமிழ் வாசகர் உலகுக்கு அடையாளம் காட்டியது.

பெரும் வருவாய் அவருக்குக் கிடைக்கவில்லை என்றாலும், எதிர்பாராத பரிசும் பாராட்டும், வாசகர் வரவேற்பும் கிடைத்தன. இறுதிநாள் வரை ஆடம்பரமின்றி, தக்க வசதிகளின்றி, எழுத்து ஒன்றையே ஆராதித்து வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெகசிற்பியன்.

மயிலாடுதுறையில், 1925-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி பொன்னப்பா - எலிசபெத் இணையருக்குப் பிறந்தார். பெற்றோர்கள் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவராயினும் ஜெகசிற்பியன் எழுத்துகளில் சமயச் சார்பு, காழ்ப்புணர்ச்சி, தூஷணை ஏதுமில்லை. சைவ-வைணவ சமய வரலாறு தொடர்பான புதினங்களை எழுதியபோதுகூட அவருடைய எழுத்துகளில் சமயச் சார்பு, வெறுப்பு எள்ளளவுக்குக்கூடப் புலப்படவில்லை.

அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலையன். "நல்லாயன்' இதழில் 1939-ஆம் ஆண்டு முதல் கதை வெளிவந்தபோதும், தொடர்ந்து சில இதழ்களில் அவர் எழுதியபோதும் பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் என்ற பெயரில் எழுதினார்.

தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்றார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். தொழிற் கல்வியைப் பயன்படுத்தி பணம் பண்ணாமல் எழுத்தை "தமக்குத் தொழில்' ஆக்கிக் கொண்டார்.

முதல் புதினமான "ஏழையின் பரிசு' எழுதிய 1948-ஆம் ஆண்டிலிருந்து நான் அவரை அறிவேன். "காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் அவர் எழுதிய "கொம்புத் தேன்' முதல் பரிசைப் பெற்றது. அந்தப் புதினத்தைத் தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று ஜெகசிற்பியன் புகழப்பட்டார். அந்த முதல் போட்டியில் அவர் பெற்ற முதற்பரிசு ஒரு சவரன், ஜெகசிற்பியனின் வளர்ச்சிக்குக் கொடியேற்றம் அந்தப் பரிசு.

பிற்காலத்தில், "ஆனந்த விகடன்' நடத்திய வரலாற்று நாவல் போட்டியில் அவருடைய சரித்திரப் புதினம் "திருச்சிற்றம்பலம்' முதல் பரிசு பெற்றது. சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றார்.

ஜெகசிற்பியன் பரிசுகள் பல பெற்றாலும் தன் இயற்கையான, அடக்கமான குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இறுதிவரை எழுத்து ஒன்றையே தெய்வமாக நினைத்து வாழ்ந்தவர்.

"திருச்சிற்றம்பலம்' நாவலுக்கு முன்பே கனமான வரலாற்று நாவல்களும் சமூக நாவல்களும் அவர் படைத்திருக்கிறார். அவர் எழுதி பரிசு எதுவும் பெறாத ஆனால், வாசகர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட "நந்திவர்மன் காதலி' படிப்பதற்கு விறுவிறுப்பான வரலாற்று நாவல்.  

சங்க இலக்கியச் சம்பவங்களுக்குப் பாடல் ஆதாரம் சிறிது இருக்கும். மற்றவை ஆசிரியரின் கற்பனை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் கொடி பதித்த மாவீரன் - அவரைக் கதையுடைத் தலைவராகக் கொண்ட "நாயகி நற்சோணை' என்ற புதினத்தை ஜெகசிற்பியன் படைத்தார். இந்த வரலாற்று ஆதாரம் குறித்து விவாதம் ஏற்பட்டது.

 கால வழுக்களைக் கூறுபவர்களுக்கு அவர் அமைதியாக, ""அது என் தவறன்று. ஆராய்ச்சியாளர்கள் பலர் தந்த குறிப்பேயாகும்'' என்று அடக்கமாகக் கூறியுள்ளார். "ஆலவாய் அழகன்' என்ற ஜெகசிற்பியன் படைப்பு உன்னதமானது என்று பாராட்டப்பட்டது.

நாவல் எழுதப் புகுவதற்கு முன்பு ஜெகசிற்பியன் சிறுகதைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்தார். பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன.

1958-இல் அவருடைய "அக்கினி வீணை' என்ற கதைத் தொகுதி 17 சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்தது. இலக்கியத் தரத்துடன் கூடிய சிறுகதைகள் படைத்தவரும், கவிஞருமான மீ.ப.சோமு அந்தத் தொகுதிக்கு முன்னுரை வழங்கியுள்ளார். தொடர்ந்து ஊமைக்குயில், பொய்க்கால் குதிரை, நொண்டிப்பிள்ளையார், நரிக்குறத்தி, ஞானக்கன்று, ஒருநாளும் முப்பது வருடங்களும், இன்ப அரும்பு, காகித நட்சத்திரம், கடிகாரச் சித்தர், மதுரபாவம், நிழலின் கற்பு, அஜநயனம், பாரத புத்திரன் என்ற தொகுதிகள் வெளிவந்தன. இப்படி ஏழத்தாழ 14 சிறுகதைத் தொகுதிகள் வெளியாகி இருக்கின்றன. "பாரத புத்திரன்' சிறுகதைத் தொகுதிக்கு, தமிழ் வளர்ச்சித் துறை பரிசளித்துச் சிறப்பித்தது (1979-1981).

"நரிக்குறத்தி' சிறுகதைத் தொகுதியைப் பாராட்டிய கி.வா.ஜகந்நாதன், ஜெகசிற்பியன் கதைகளின் உள்ளுணர்வைப் பாராட்டி அந்தக் கதையின் பெயரில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிக்கு அளித்த முன்னுரையில் சரியான மதிப்பீடு வழங்கியுள்ளார்.

வரலாற்றுப் புதினங்களால் பெரும் புகழ் பெற்ற ஜெகசிற்பியனின் சமூக நாவல்களைப் பற்றித் தனியே ஆராயலாம். 16 சமூகப் புதினங்கள் எழுதியிருக்கிறார். கொம்புத்தேன், தேவ தரிசனம், மண்ணின் குரல், ஜீவகீதம், மோக மந்திரம், ஞானக்குயில் ஆகிய புதினங்கள் பாராட்டப்பட வேண்டியவை. அவரது கதைகள் பெரும்பாலும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்றவை.

சிறுகதை, புதினங்கள், சமூகம் - வரலாறு மற்றும் மூன்று நாடகங்களையும், வானொலிக்காகப் பல நாடகங்களையும் படைத்திருக்கிறார். ஜெகசிற்பியன், "நாடகத்துறைக்கு முழு மூச்சுடன் தன் கவனத்தைச் செலுத்தவில்லை' என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.  எழுதியே வாழ்ந்த எழுத்தாளர்களைக் கணக்கிட்டால், ஜெகசிற்பியன் வளமாக வாழ்ந்தவர் இல்லை. "எழுத்தே ஜீவன்; நாட்டுக்கு உழைத்தல்' என்கிற லட்சியத்தோடு வாழ்க்கைத் தோணியை வெற்றிகரமாகக் கரைசேர்க்க சோம்பலின்றி உழைத்தவர்.

கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய புகழ் பெற்ற மொழியாக்கப் புதினம் ஒன்றில் ஷேக்ஸ்பியரை "செகப்ரியர்' என்று பெயரிட்டு எழுதியிருந்தார். பாலையனுக்கு அந்தப் பெயர் பிடித்தது. அதையே தன் புனைபெயராக வைத்துக்கொள்வது என்று முடிவு செய்தார். இதனால்,  மற்றொரு ஷேக்ஸ்பியர் தமிழ் உரைநடைக்குக் கிடைத்தார்.

""இந்த உலகத்தில் நான் என் உயிரைவிட மேலாக நேசிப்பவை இரண்டு. ஒன்று என் அருமைப் பிள்ளைகள். மற்றொன்று என் அழகான புனைபெயர்'' என்று ஜெகசிற்பியன் ஓரிடத்தில் குறிப்பிட்டதாகப் பேராசிரியர் வேலுச்சாமி எழுதியுள்ளார்.

பொருளாதாரத்தில் அவர் சிறக்கவில்லையே தவிர, வாழ்க்கையில் அவர் சிறப்பைக் கண்டார். வாழ்க்கைத் துணைவி தவசீலி. அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என்ற பெயருடைய மூன்று மகள்கள். திருமணத்தின்போது பயிற்சி பெற்ற ஆசிரியராக தவசீலி இருந்தாலும், அவரைப் பள்ளி ஆசிரியர் பணிக்கு அனுப்பாமல் உள்ளதைக் கொண்டு நிறைவடைந்தார் ஜெகசிற்பியன்.

எழுத்தாளர்களுக்கே உரித்தான "சொந்தமாக பத்திரிகை' நடத்திய முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால், தொடர்ந்து நடத்தமுடியவில்லை.

அவருடைய "ஊமத்தைப் பூக்கள்' என்ற சமூகப் புதினம் "குமுதம்' வார இதழில் தொடராக வெளிவரத் தொடங்கிய சில வாரங்களிலேயே அதாவது, 1978-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி ஜெகசிற்பியன் காலமானார்.

அவர் மறைவுக்குப் பிறகு அவர் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்று தமிழ் எழுத்தாளர் சங்கம் நினைத்தது. சங்கத்தின் முதல் மாநாட்டுக்குத் தலைமை வகித்த அன்றைய அமைச்சராய் இருந்த இராம.வீரப்பனால் "திரு.வி.க. பரிசு' மற்றும் ரூ. 5000 தமிழக அரசால் ஜெகசிற்பியன் குடும்பத்துக்கு  வழங்கப்பட்டது.

"எழுத்துலகச் சிற்பி' ஜெகசிற்பியன், 53 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் ஆழமும், அகலமுமுள்ள அவர் படைப்புகள் காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com