Enable Javscript for better performance
நா.பா. என்றொரு தீபம்...- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  நா.பா. என்றொரு தீபம்...

  By திருப்பூர் கிருஷ்ணன்  |   Published On : 06th March 2011 03:12 AM  |   Last Updated : 20th September 2012 02:58 AM  |  அ+அ அ-  |  

  tmani1

  வத்தலக்குண்டு அருகே நதிக்குடி கிராமத்தில், 1932-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி பிறந்தார் அமரர் "தீபம்' நா. பார்த்தசாரதி. வாழ்ந்த காலங்கள் 55 ஆண்டுகள்தான். அதற்குள் அவர் படைத்தவை 93 புத்தகங்கள். இவற்றில் சிறுகதை, குறுநாவல் தொகுதிகளும் உண்டு. அவற்றில் இடம்பெற்றுள்ள படைப்புகளின் எண்ணிக்கையையும் சேர்த்துப் பார்த்தால், அவர் படைத்த மொத்தப் படைப்புகளின் கூட்டுத்தொகை பிரமிக்க வைக்கும். எழுத்தே வாழ்வாக வாழ்ந்து மறைந்தவர் நா.பா.

   ராமன், கிருஷ்ணன் போன்ற இதிகாச நாயகர்கள் மாதிரி அவர் படைத்த "குறிஞ்சிமலர்' நாவலின் கதாபாத்திரங்களான அரவிந்தனும் பூரணியும் வாசகர்கள் மனத்தில் நிலைபெற்றுவிட்டார்கள். ஏராளமான பேர் தங்கள் குழந்தைகளுக்கு அரவிந்தன், பூரணி என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார்கள், மகிழ்கிறார்கள்.

   எல்லாவகைப் படைப்புகளையும் எழுத முடிந்த ஆற்றல் மிக்க எழுத்தாளர் அவர். அவரது குறிஞ்சிமலர், பொன்விலங்கு முதலிய சமூக நாவல்கள் எத்தனை புகழ்பெற்றனவோ, அதற்கு இணையாக அவரது மணிபல்லவம், நித்திலவல்லி, பாண்டிமாதேவி, ராணி மங்கம்மாள் ஆகிய சரித்திர நாவல்களும் புகழடைந்தன. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என அவர் தொடாத துறையே கிடையாது.

   பத்திரிகையாளராக விளங்கிய நா.பா., தொடக்கத்தில் கல்கியில் துணையாசிரியராகப் பணியாற்றினார். பின் "தீபம்' மாத இதழைத் தொடங்கினார். அதன் பின் "தினமணி கதிர்' வார இதழ், "கதைக்கதிர்' மாத இதழ் ஆகிய இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமப் பத்திரிகைகளில் ஆசிரியரானார். அவர் எழுதிய பத்திரிகை சார்ந்த சில விஷயங்களாலும் அவருக்குப் புகழ் கூடிற்று. அப்படி அவர் எழுதியவைதான் மணிமணியான தலையங்கங்களும் மணிவண்ணன் பதில்கள் என்ற பகுதியும். அவரது கேள்வி-பதில்கள் இரு தொகுப்புகளாக கமலம்சங்கர் என்ற பேராசிரியையால் புத்தகமாக்கப்பட்டுள்ளன.

   புதுஉலகம் கண்டேன், ஏழுநாடுகளில் எட்டு வாரங்கள் ஆகிய இரு பயண நூல்களையும் எழுதியுள்ளார். அவர் வெளிதேசம் செல்லும்போது, "கல்கி' துணையாசிரியர் அமரர் குண்டுமணி, அவரை விமான நிலையத்துக்கே வந்து மாலையிட்டு வழியனுப்பி வைப்பதும்; அவர் பயணம் முடிந்து வந்ததும் "கல்கி'யில் தம் பயண அனுபவங்ளைத் தொடராக எழுதுவதுமாக அந்நூல்கள் உருப்பெற்றன.

   தற்கால இலக்கியவாதிகளில், நா.பா.வின் தனித்தன்மை அவரது எழில் கொஞ்சும் நடைதான். "அவள் பார்வையே ஒரு பேச்சாக இருந்தது என்றால், அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது' என்பதுபோல வார்த்தைகளை மடக்கிப்போட்டு அழகிய வாக்கியங்களை அவரால் எழுத முடிந்தது. கதாநாயகியின் பாதங்களில் மருதோன்றிச் சுவடு தென்பட்டதைப் பற்றிச் சொல்லும்போது, ""சிவப்பு மையால் அடிக்கோடிட்டதுபோல'' என்று எழுதினார் அவர். அழகிய கையெழுத்தைப் பற்றி எழுதும்போது, ""தேர்ந்து பழகிய கை பூத்தொடுத்த மாதிரி'' என்று எழுதினார். இப்படி இதுவரை யாரும் சொல்லாத புத்தம் புதிய உவமைகளை எழுதும் அவரது ரசனை மிகுந்த மனம் பலரையும் கவர்ந்தது.

   அவர் நாவல்களின் இடையே எழுதிய வாக்கியங்கள் அந்த இடத்தில் மட்டும் பொருந்துவதோடு நிற்காமல் தனியே எடுத்துப் பார்த்தாலும் உயர்ந்த சிந்தனைகளைத் தாங்கிய பொன்மொழிகளாக விளங்கின. அவற்றை அந்தந்த அத்தியாயங்களின் முகப்பில் கட்டம் கட்டி வெளியிடும் பழக்கத்தை அவர் மேற்கொண்டார். நாவல்கள் புத்தகமானபோதும் அத்தகைய வரிகள் அத்தியாய முகப்பில் இருக்கவேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினார்.

   ""அறிவாளிகள் சுயமரியாதை காரணமாகத் தட்டத் தயங்குகிற கதவுகளை முட்டாள்கள் உடைத்துக்கொண்டு உள்ளே போய் உட்கார்வதுதான் இன்று நாட்டின் அவலம்'' என்பன போன்ற அவரது வரிகள், அன்றைய காலத்தை விடவும் இன்று இன்னும் அதிகமாகப் பொருந்துகின்றன.

   அவரது எழுத்துகள் லட்சியவாதம் சார்ந்தவை. யதார்த்தமாக எழுதுவது ஒருபோக்கு என்றால், லட்சியக் கதை மாந்தர்களைப் படைப்பது இன்னொரு வகைப் போக்கு என்று அவர் கருதினார். தண்டியலங்காரக் காப்பிய மரபில், தன்னேரில்லாத் தலைவனையும் தலைவியையும்தான் அவர் படைத்தார். அவரது லட்சியவாதப் போக்கு பற்றி விமர்சனங்கள் எழுந்தபோது, ""கம்பராமாயணம் லட்சியவாதம் சார்ந்ததுதானே! கம்பராமாயணம் காலத்தை வென்று நிற்பது போலவே என் இலக்கியங்களும் நிற்கும்'' என்பதாக அவர் பதில் சொன்னார்.

   அவரது எழுத்து இளைஞர்கள் பலரையும் ஈர்க்க முக்கியக் காரணம், அவற்றில் தென்பட்ட சுயமுன்னேற்றச் சிந்தனைகள். அவரது எழுத்தைப் படித்தால் ஒரு மில்லி மீட்டராவது மனம் மேம்படும் என்று நம்பியே இளைஞர்கள் அவர் எழுத்தைக் கொண்டாடினார்கள். "குறிஞ்சிமலர்' தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்டபோது, அதில் அரவிந்தனாக நடித்த இன்றைய துணை முதல்வர் ஸ்டாலின், அந்தத் தொடரில் நடித்ததால் தன் மனம் மென்மைப்பட்டதாகக் கூறி மகிழ்ந்தார்.

   சாகித்ய அகாதெமி பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு உள்படப் பல பரிசுகள் பெற்றவர் நா.பா.

   நா.பா., எண்ணற்றவர்களின் உள்ளம் கவர்ந்த சிறந்த பேச்சாளரும் கூட. தற்கால இலக்கியம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் தம் பேச்சாற்றலால் முத்திரை பதித்தார். அக்காலகட்டத்தில் சோ, ஜெயகாந்தன் ஆகியோரோடு நா.பா.வும் ஸ்தாபன காங்கிரஸ் மேடைகளில் பேசினார். காமராஜ் எந்த அளவு நா.பா.வைக் கவர்ந்தார் என்றால், தமது "சத்தியவெள்ளம்' என்ற நாவலில் அவரை ராமராஜ் என்ற பெயரில் பாத்திரமாக ஆக்கும் அளவு.

   காமராஜ் காலமானதும் பெருந்தலைவரின் அட்டைப்படம் தீபத்தை அலங்கரித்தது. "இலக்கியப் பத்திரிகை அட்டையில் அரசியல் தலைவரின் படமா?' என்று தூய இலக்கியவாதிகள் சிலர் கேள்வி கேட்டபோது, ""பெருந்தலைவரே ஓர் இலக்கியம்தான்'' என்று நா.பா. பதில் சொன்னார். காலப்போக்கில் புலவர் கீரனைப்போல் ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும் என்பதும் அவரது திட்டங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால், காலம் கைகூடுவதற்குள் காலன் முந்திக் கொண்டான்.

   நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இறுதிவரை நடுத்தரக் குடும்ப மனிதராகவே வாழ்ந்து மறைந்தார். பொருளாதார இடர்ப்பாடுகள் வரத்தான் செய்தன. ஆனால், எழுத்தைப் பொறுத்தவரை சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த பெருந்தகை அவர். பொருளாதாரச் சங்கடங்கள் நேர்ந்த காலங்களில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதுபோலவே புதிய நாவல் எழுதத் தொடங்கினால், சென்னை தி.நகர் அகத்தியர் கோயிலுக்குச் சென்று அகத்தியரை வழிபட்டு வருவதும் அவரது வழக்கம்.

   பழந்தமிழைக் கசடறக் கற்றுப் "பண்டிதர்' பட்டம் பெற்றவர். அவருக்குக் கொடுக்கப்பட்ட விருதுகளில் ஒன்று "கம்பராமாயணத் தத்துவக் கடல்' என்பது. கல்வி கற்க வயதே இல்லை என்ற கருத்துடைய நா.பா., இறுதி நாள் வரை கல்வி கற்றார். தம் 45 வயதுக்குமேல் பச்சையப்பன் கல்லூரியில் மாலை வகுப்பில் சேர்ந்து தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றார். "பழந்தமிழர் கட்டிடக்கலையும் நகரமைப்பும்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். டாக்டர் தி.முத்து கண்ணப்பர்தான் அவரின் நெறியாளர். ஆய்வேட்டை சமர்ப்பித்தும், நேர்காணலில் கலந்துகொள்ள வாய்ப்பின்றி அது என்று நிகழவிருந்ததோ அன்று காலமானார். முனைவர் பட்டம் பெறும் முன்பே அமரர் பட்டம் பெறும்படி நேர்ந்தது அவரது துரதிர்ஷ்டம்.

   அன்றைய "அமுதசுரபி' ஆசிரியர் விக்கிரமன் கேட்டுக் கொண்டபடி, தம் சுயசரிதையை அமுதசுரபிக்காக எழுதும்போது, எழுதிய பேனா எழுதியபடியே கையிலிருக்க, 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி அவர் உயிர் பிரிந்தது.

   "ஞானியாரடிகள் மன்றம்' என்ற அமைப்பின் மூலமாக அவரது பரம ரசிகரான அ.நா. பாலகிருஷ்ணன், நா.பா. மறைவிற்குப் பின், பல்லாண்டுகள் ஆண்டுதோறும் நினைவுக் கூட்டம் நடத்தினார். ஒரு ரசிகர் தம் சொந்தச் செலவில் ஆண்டுதோறும் நினைவுக் கூட்டம் நடத்துவது என்பதும்கூட அவரது எழுத்தின் பெருமைதான்.

   இன்றும் பல இலக்கிய அன்பர்கள் தங்கள் குழந்தைகளை அரவிந்தன் என்றும் பூரணி என்றும் கூப்பிடுகிறார்கள். நா.பா. காலமாகவில்லை. இன்றைய அரவிந்தன்களிடமும் பூரணிகளிடமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp