டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எருமைகள்!

மேலை நாட்டிலிருந்து தமிழில் வசைச் சொற்கள் பற்றி ஆய்வு செய்ய வந்த ஒருவர் "மாடு' என்பதை நாம் வசைச் சொல்லாகப் பயன்படுத்துவது குறித்து வியப்படைந்தார். அவை பழங்காலத்தில் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்பட்டன

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:56 am

குடந்தை வய்.மு. கும்பலிங்கம்

மேலை நாட்டிலிருந்து தமிழில் வசைச் சொற்கள் பற்றி ஆய்வு செய்ய வந்த ஒருவர் "மாடு' என்பதை நாம் வசைச் சொல்லாகப் பயன்படுத்துவது குறித்து வியப்படைந்தார். அவை பழங்காலத்தில் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்பட்டன. ஒருவன் எவ்வளவு கால்நடைகள் வைத்துள்ளான் என்பதைக்கொண்டே பொருள் அளவில் மதிப்பீடு செய்யப்பட்டான். ஆடுகளையும் மாடுகளையும் கொடுத்துப் பிறர் வீட்டுப் பெண்ணை மணம் கொள்ளும் வழக்கம் இருந்து வந்துள்ளது. திருவள்ளுவர் "மாடு' என்னும் சொல்லை "செல்வம்' எனும் பொருளில்தான்,

""கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை''

எனும் குறளில் கையாள்கிறார். அதிலும் பெரும்பாலும் "எருமை மாடே' எனும் சொல்லாட்சிதான் பிறரை ஏசப் பயன்படுத்தப்படுகிறது. எருமை கரிய நிறமுள்ளது; மிகவும் மெதுவாகச் செயல்புரியும் தன்மை கொண்டது. இவை அதன் குறைகளல்ல; அதன் இயல்புகள். ஒவ்வோர் உயிரினத்திற்கென்றும் சில தனி இயல்புகள் உள்ளன. இலக்கியங்களில் எருமைகள் பல இடங்களில் பலவாறு பேசப்படுகின்றன. விடியற்காலைப் பொழுதின் காட்சிகளைக் கூற வந்த ஆண்டாள் நாச்சியார்,

""கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண்''

என்று பாடுகிறார். உண்மையான மேய்ச்சலுக்குமுன் எருமையின் பால் கறக்கும் திறனை அதிகரிக்க வேண்டி பனிப்புல்லை மேய விடுதல் ஆயர் மரபு. அந்தப் பனியில் நனைந்த புல்லை மேய்வதையே ஆண்டாள் சிறுவீடு மேய்தல் என்றார். மேலும், 12-ஆம் பாசுரத்தில் எருமை தொடர்பான ஒரு காட்சியைக் காட்டுகிறார். அந்த இல்லம் ஒரே சேறாகிக் கிடக்கிறது. அது நீரால் ஏற்பட்ட சேறன்று; மாறாகப் பாலால் விளைந்த சேறு. அந்த வீட்டின் எருமை தனது கன்றை நினைக்கிறது; உடன் கனைக்கிறது; முலைக்கடுப்பு தாங்காமல் பால் சொரியத் தொடங்குகிறது. அப்பாலால் அவ்வில்லம் சேறாகி விடுகிறது.

""கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும்''

என்பன பாடலடிகள்.

கம்பனும் நாட்டு வளம் பற்றிப் பாட வரும்போது ""நிழலிடை உறங்கும் மேதி'' என்று ""மேதி'' எனும் சொல்லால் எருமையைக் குறிப்பிடுவார். "அந்த நாட்டில் நீர்வளம் மிக்குளதால் எங்கணும் பசும்புல் நிறைய உள்ளது. அவற்றை வயிறு முழுக்க உண்ட பின் எருமையானது மரநிழலில் நிம்மதியாகத் தூங்குகிறது' என்று உறக்கத்தால் வளத்தைக் காட்டும் முரணைக் கம்பர் காட்டுவார்.

புகழேந்திப் புலவர், "நளவெண்பா'வில் எருமையின் குளம்பிற்குப் பொற்கொல்லர் வைத்துள்ள உரைகல்லை உவமையாக்குகிறார். "பொற்கொல்லர்கள் தங்களிடம் வரும் பொன்னின் தரத்தைச் சோதித்துப் பார்க்க ஒரு கறுப்புநிறக் கல்லை வைத்திருப்பர். பொன்னாலான அணிகலன்களைத் தேய்த்துத் தேய்த்து அக்கல்லின் நிறம் பொன்நிறமாக லேசாக மாறிப்போயிருக்கும். புன்னை மலரின் பொன்னிறத் தாதுகளைத் தன் கால் குளம்பில் எருமையானது மிதித்துக்கொண்டே வருகிறது. அதனால், அதன் கால் குளம்புகள் பொன் உரைத்த கல் போன்று உள்ளன' என்று புகழேந்தியார் உவமை காட்டுகிறார். பாடலடிகள் வருமாறு:

""புன்னை நறுமலரின் பூந்தாது இடை ஒதுங்கும்

கன்னி இளமேதிக் கால் குளம்-பொன் உரைத்த

கல் ஏய்க்கும் நாடன்''

சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பல நிலைகளில் "எருமை' பாடப்படுகிறது. ஐவகை நிலங்களில் மருத நிலத்திற்குரியதாக எருமை இடம்பிடித்துள்ளது. ஐங்குறுநூற்றில் மருதம் பற்றிப் பாடவந்த ஓரம்போகியார் "எருமைப்பத்து' எனும் தலைப்பில் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார்.

எருமையானது குளத்திற்குச் சென்று நீராடியது. அங்கிருந்த பகன்றைக்கொடியின் மலரைத் தனது கொம்புகளில் சூடிக்கொண்டு வருகிறது. அதைப் பார்த்து அதன் கன்று அஞ்சுகிறது எனும் பொருளில்,

""பகன்றை வான்மலர் மிடைந்து கோட்டைக்

கருந்தாள் எருவைக் கன்று வெரூஉம்

பொய்கை யூரன்''

என்பது பாடல். தலைவியை விட்டுவிட்டுப் பரத்தையர்பால் சென்ற தலைவனுக்கு "எருமை' இங்கு மறைபொருளாகச் சுட்டப்படுகிறது. பெரும்பாலும் பண்டைய அக இலக்கியங்களில் பெண்களுடன் புணர்ச்சியை முடித்த பின், அதே கோலத்துடன் வரும் தலைவனுக்கு, எருமை குளத்தில் குளித்துவிட்டு வருவது உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

மரபை நன்கு அறிந்த - புரிந்து கொண்ட எழுத்தாளர் பிரபஞ்சன் தனது "இன்பக் கேணி' நாவலிலும் ஓரிடத்தில் இதே உவமையைக் கையாள்வார். ""சேறும் சகதியும் நிறைந்த குளத்தில் மூழ்கிய எருமை, குளத்தில் மலர்ந்த நீர்ப்பூக்களைத் தின்று அசை போட்டு வெளியே வந்ததுபோல மதர்த்துப்போய், அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் நரசிம்மன்'' என்று ஆயியுடன் உறவு கொண்டபின் நரசிம்மன் வருவதைக் கூறுவார் அவர்.

இவ்வாறு பண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை "எருமைகள்' சிறப்பான - முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. இனி யாரையும் "எருமை மாடு' என்று திட்டுவதற்கு முன், ஒரு முறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.