தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செருப்பும் விளக்குமாறும்!

கவி காளமேகப்புலவர் தமிழகம் எங்கும் சுற்றிவந்தபோது, சோழ மன்னன் அவைக்கும் வந்தார். அவரது புலமையை அறிந்திருந்த அவைக்களப் புலவர்கள், அவரின் தகுதியைக் குறைக்க எண்ணி, அரசனிடம் ஆலோசனைகள் கூறி, அவருடன் வாதிட

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:07 pm

அ.கருப்பையா

கவி காளமேகப்புலவர் தமிழகம் எங்கும் சுற்றிவந்தபோது, சோழ மன்னன் அவைக்கும் வந்தார். அவரது புலமையை அறிந்திருந்த அவைக்களப் புலவர்கள், அவரின் தகுதியைக் குறைக்க எண்ணி, அரசனிடம் ஆலோசனைகள் கூறி, அவருடன் வாதிட ஏற்பாடு செய்தனர். வாதிடும்போது, நெருப்புக் குண்டத்தின்மேல் கயிற்றில் நின்றுகொண்டு, புலவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இயலவில்லை என்றால், நெருப்புக்கு இரையாக வேண்டும்; வெற்றி பெற்றால், "சிறந்த புலவர்' என்று அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்ற நிபந்தனையுடன் போட்டி தொடங்கியது.

 ÷புலவர்கள் கேட்ட வினாக்களுக்குக் காளமேகம் உடனுக்குடன் வெண்பாவிலேயே விடையளித்தார். எல்லா வினாக்களுக்கும் விடையளித்த அவர்தம் புலமையை வியந்து, அதை வெளிக்காட்டாது அவரை அடக்க எண்ணிய தலைமைப் புலவரான "அதிமதுர கவிராயர்' நையாண்டியும், வெறுப்பும் தொனிக்க, இருபொருள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றைக் கருவாகக்கொண்டு பாடுமாறு கூறினார். எவ்வாறெனில், "செருப்பு' எனத் தொடங்கி "விளக்குமாறு' என்று முடிக்க வேண்டும். காளமேகமும் தயங்காமல் சபையில் கூறத்தகாத "இடக்கரா'ன (இடக்கரடக்கல்) இரு சொற்களையும், நற்பொருள் தரும் சொல்லாக "அடக்கி' வாசித்தார்.

 

 ""செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்

 பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்கு

 தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்

 வண்டே விளக்கு மாறே!''

 

 "போர்க்களத்துக்குச் சென்று, பகைவரைத் துன்புறுத்தும் வேலைக் கையில் கொண்டுள்ள முருகப்பெருமானைத் தழுவுதற்கு உரிய வழியை, தேன் நிறைந்த தாமரை மலரில் தங்கியிருக்கும் வண்டே தெளிவாகக் கூறுவாயாக!' எனத் தலைவி முருகன்மேல் கொண்ட காதலை விளக்குவதாகப் பாடற்கருத்து அமைந்துள்ளது.

 ÷செருப்புக்கு என்ற சொல்லை, செரு+புக்கு (போர்க்களத்திற்குத் சென்று) என்றும், விளக்குமாறு என்ற சொல்லை விளக்கும்+ஆறு+ஏ (விளக்கும் வழியைக் கூறுவாயாக) என்றும் பிரித்துப் பொருள்கொள்ளச் செய்து, சபையில் கூறத்தகாத சொற்களைச் சிறப்பான பொருள்தரக் கூடியனவாக அமைத்துப் பாடி அனைவரையும் தன் புலமைத்திறத்தால் அடக்கினார்.

 ÷அரசனும் வியந்து, தனி மனித வெறுப்பைத் தவிர்த்து, காளமேகத்துக்கு உரிய சிறப்பும் பாராட்டும் அளித்து மகிழ்ந்தான். இப்பாடலில் முருகனின் வெற்றிச் சிறப்பையும், இயற்கை வருணனையையும் தமிழ்ச் சொற்கள் அலங்கரிக்கின்றன. நம் தமிழ் மொழியின் சிறப்புதான் என்னே! அதைப் பயன்படுத்தி பயனுறச் செய்த காளமேகத்தின் கவித்திறன்தான் என்னே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.