"ஆராய்ச்சி அறிஞர்' பேரா.சுந்தர சண்முகனார்

கடலூர் அருகிலுள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் சிற்றூரில், 1922-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் சண்முகம். தன் தந்தையாரின் பெயரான சுந்தரம் என்பதைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு
"ஆராய்ச்சி அறிஞர்' பேரா.சுந்தர சண்முகனார்

கடலூர் அருகிலுள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் சிற்றூரில், 1922-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் சண்முகம். தன் தந்தையாரின் பெயரான சுந்தரம் என்பதைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு சுந்தர சண்முகம் ஆனார்.

 ÷இவருடைய ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கு அடித்தளம் இட்டது திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியார் மடாலயம் ஆகும். இவர் 5-ஆம் பட்டத்து அடிகளின் மாணாக்கராவார். ஞானியார் அடிகளாரின் அறிவுரையின் பேரில் திருவையாறு அரசர் கல்லூரியில் தன்னுடைய 14-வது வயதில் வித்துவான் படிப்பில் சேர்ந்தார். பிறகு, மயிலம் சிவஞான பாலைய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் 1940-ஆம் ஆண்டு அதாவது, தன்னுடைய 18-வது வயதில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அப்பணியை விடுத்துப் புதுச்சேரி வந்தார். 1947-இல் தன்னுடைய ஷட்டகர் (சகலர்) - புரவலர் சிங்கார குமரேச முதலியார் உதவியுடன் "பைந்தமிழ்ப் பதிப்பகம்' ஒன்றைத் தொடங்கி, "வீடும் விளக்கும்' என்னும் தன்னுடைய முதல் நூலை வெளியிட்டார். 1947-இல் ஏற்பட்ட அந்த எழுத்து விளக்கு, 1997-ஆம் ஆண்டு வரைத் தொடர்ந்து எரிந்துகொண்டு இருந்தது.

 ÷1948-58-ஆம் ஆண்டுகளில் திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் என்னும் மாதம் இருமுறை வெளிவரும் திருக்குறள் ஆய்வு இதழ்களை நடத்தித் தமிழகம் முழுவதும் அறிமுகமானார். 1948-இல் பாவேந்தரால் மதிப்புரை வழங்கப்பட்ட "தனித்தமிழ்க் கிளர்ச்சி' என்னும் அம்மானை நூலை எழுதி வெளியிட்டார்.

 ÷பின்னர், 1949-ஆம் ஆண்டு முதல் 1958-ஆம் ஆண்டு வரை புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1958 முதல் 1980 வரை புதுச்சேரி அரசினர் பயிற்சி மையத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றியபோது "திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக்கழகம்' என்னும் அமைப்பை நிறுவி, யாப்பதிகார வகுப்பும், திருக்குறள் வகுப்பும் நடத்தினார். அவ்வமைப்பில் நூற்றுக்கு மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்றனர்.

 ÷இவர், பல அறிஞர் பெருமக்களுடன் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தார். பாவேந்தருடன் மிகவும் நெருங்கிப் பழகிய இவர், அவரோடு இணைந்து "பல ஆண்டுகள்' என்னும் நூலை எழுதியுள்ளார்.

 ÷1980-ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, நூல்கள் எழுதும் பணியைத் தொடர்ந்தார். 1985-க்குள் தமிழ் அகராதிக்கலை, கெடிலக்கரை நாகரிகம், தமிழ் இலத்தீன் பாலம், தமிழ் நூல் தொகுப்புக்கலை முதலிய உன்னத நூல்களை எழுதி வெளியிட்டுத் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் பேசப்படுபவராக உயர்ந்தார். மேற்கூறிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு முன்னோடி நூல்களாகும்.

 ÷இவருடைய புலமைக்குப் பரிசாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் இவருக்குப் பல்கலைக்கழகத் தொகுப்பியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் பதவியை வழங்கினார். 1982-ஆம் ஆண்டு இப்பணியில் சேர்ந்தவர், உடல்நலக் குறைவு காரணமாக 1983-இல் பணியிலிருந்து விலகினார்.

 ÷சுந்தர சண்முகனார் 69 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் கவிதை நூல்கள் 8, காப்பியங்கள் 2, முழு உரை நூல்கள் 7 (திருக்குறள் தெளிவுரை, நாலடியார் நயவுரை, திருமுருகாற்றுப்படை தெளிவுரை, இனியவை நாற்பது இனியவுரை, நன்நெறி நயவுரை, முதுமொழிக் காஞ்சி உரை மற்றும் நல்வழி உரை), உரைநடை நூல்கள் 52 (துறைவாரியான) ஆகும்.

 ÷பல்துறைகளிலும் நூல்கள் எழுதிய இவரின் சான்றாண்மையைப் போற்றி மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் இவருக்குத் "தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்னும் பட்டத்தை (17.10.1991) வழங்கிச் சிறப்பித்தது. மேலும், தங்கள் கல்விக் குழுவின் வாழ்நாள் உறுப்பினராகவும் இவரை நியமித்தது.

 ÷"அகாரதிக்கலை' எழுதி அழியாப் புகழ் பெற்றவர்' என்னும் சிறப்பை இவருக்குப் பெற்றுத்தந்த "தமிழ் அகராதிக் கலை' என்னும் இவருடைய நூலின் முதல் பதிப்பு 1965-இல் வெளிவந்தது. இந்நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. இதே ஆண்டுதான்

 இவரின் "பணக்காரர் ஆகும் வழி' என்னும் நூலுக்கும் மத்திய அரசு பரிசு கிடைத்தது.

 ÷இவர் பெற்ற விருதுகளில் தலையாயது தமிழக அரசு 15.1.1991-இல் வழங்கிய "திருக்குறள்' விருதாகும். அடுத்து எம்.ஏ.சி. அறக்கட்டளை விருது. இவர் பெற்ற பட்டங்களிலேயே இவர் மிகவும் விரும்பிய பட்டம் இவருடைய குரு பீடமான ஞானியார் மடாலயம் வழங்கிய "ஆராய்ச்சி அறிஞர்' என்ற பட்டம்தான். இவருடைய ஆறு நூல்களுக்குத் தமிழக மற்றும் மந்திய அரசுகள் பரிசுகள் வழங்கியுள்ளன. பல நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

 ÷"உடன் பிறந்தே கொல்லும் நோய்' என்று கூறுவது இவர் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது. 1946-ஆம் ஆண்டிலிருந்து மூளைக்கட்டி (பிரைன் டியூமர்) நோயுடன் போராடிப் போராடி வெற்றி கண்டு வந்த இவரை, 1997-ஆம் ஆண்டு

 அக்டோபர் 30-ஆம் தேதி இந்நோய் இறுதியாக வென்றது.

 ÷"தனக்கு மரணமே இல்லை' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். உண்மைதான்! இறவாப் புகழ்பெற்ற தன்னுடைய நூல்கள் மூலம் தமிழ் உள்ளளவும் இவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

 ÷இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. சுந்தர சண்முகனார் நினைவாக இவருடைய மாணாக்கர்கள் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, மாதந்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் என்பதே இவர் வாழ்ந்து கொண்டிருப்பதற்குச் சான்று!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com