சொல் வேட்டை- 42
கணினிகள், கைபேசிகள் போன்ற மின்னணுச் சாதனங்களை, இழைகள் இல்லாமலேயே இணைக்கும் தனிக்குறியீட்டு உருவரை முன்மாதிரி (Specification design) பொதுவாக Blue tooth என்று பெயரிடப்பட்டுள்ளது.


கணினிகள், கைபேசிகள் போன்ற மின்னணுச் சாதனங்களை, இழைகள் இல்லாமலேயே இணைக்கும் தனிக்குறியீட்டு உருவரை முன்மாதிரி (Specification design) பொதுவாக Blue tooth என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த "ப்ளூடூத்'துக்கான வணிகக்குறியீடு (logo), வடமேற்கு ஐரோப்பாவில் ஸ்காண்டிநேவியப் பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்ட மறை அல்லது மந்திர (ழ்ன்ய்ங்ள்) மொழியில் உள்ள "H' மற்றும் "B' ஆகிய இரு எழுத்துகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டது. அதற்குக் காரணம், அவ்விரு எழுத்துகளும், டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளை கி.பி.970 வரை ஆண்ட ஹெரால்டு ப்ளுடூத் கார்ம்சன் (Harold Bluetooth Gormsson) என்ற மன்னனின் பெயரில் உள்ள இனிஷியல்கள் ஆகும். அந்த மன்னனுக்கும், மின்னணுச் சாதனமான ப்ளுடூத்திற்கும் என்ன தொடர்பு?
ப்ளு பெர்ரிகளை அடிக்கடி உண்டதால், நீலவண்ணம் பூசப்பட்டதுபோல் காணப்பட்ட அம்மன்னனின் பற்கள், அவனுக்கு ப்ளுடூத் என்ற பட்டப்பெயரைப் பெற்றுத் தந்ததாகக் கருதப்பட்டாலும், அம்மன்னன் பல்வேறு பழங்குடியினரை ஒருவருக்கொருவர் உறவாட வைத்து, அவர்களுக்குள் நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததாலேயே புகழ் பெற்றான் என்று வரலாறு கூறுகிறது.
இந்த வரலாற்றை "லாங் ஷிப்ஸ்' என்ற ஒரு சரித்திர நாவலில் படித்த ஜிம் கார்டக் என்பவர், 1997-இல், தான் கண்டுபிடித்த கைபேசிகளை கணினியோடு தொடர்புப்படுத்தும் ஓர் இயக்கத்திற்கு ப்ளுடூத்தின் பெயரைப் பரிந்துரைத்தார். "தொடர்புப்படுத்துதல்' என்ற சொல்லுக்கு இம்மன்னனை இலக்கணமாக ஜிம் கார்டக் ஏற்றுக்கொண்டதன் விளைவுதான், இந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்குக் கொஞ்சமும் தொடர்பே இல்லாத ஒரு மனிதனின் பெயர் அந்த அறிவியல் சாதனத்திற்குச் சூட்டப்பட்டது. இத் தகவல்களோடு இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.
முனைவர் பா.ஜம்புலிங்கம், ப்ளுடூத் என்ற சொல்லுக்கு நீலப்பல், ஒலிஒளி இணைப்பி, ஒலிஒளிப் பதிவி மற்றும் விடுவிப்பி, கேள்விக்காட்சி உள்விடுவிப்பி முதலிய பொருள்களைக் கொள்ளலாம் என்கிறார். என்.ஆர்.ஸத்யமூர்த்தி, நாணில் குறுந்தொலைத்தொடர், இழையில் குறுந்தொலைத்தொடர் ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.
மான்விழி, காணொலிப் பரிமாறி, ஒலிஒளிப் பரிமாறி, உள்வட்டத்தகவல் பரிமாறி, செய்திக்காட்சிப் பரிமாறி என்கிறார்.
ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், ஒன்றிணைப்பான் அல்லது நுண் அலைத் தகவல் பரிமாற்றி என்றும், ஆர்.பி.வீரையன், இழைதவிர் இணைப்பு, இழைதவிர் பதிவு என்றும், செ.சத்தியசீலன், இழைதவிர் ஒலித்தொடர்பு, இழைதவிர் தொழில்நுட்பம் என்றும் கூறியுள்ளனர்.
வெ.ஆனந்தகிருஷ்ணன், திறக்கற்றை என்பது சாலப்பொருந்தும் என்கிறார். கோ.மன்றவாணன், தரவட்டி, தரவுப் பரிமாற்றி, குறுஞ்சுற்றுத் தரவலை, தகவல் பரிமாற்றி, தரவு-தகவல் ஊடுருவி, அலைத்தரவு பரிமாற்றி ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும், மேற்கண்ட சொற்களோடு தேவையெனில் குறுஞ்சுற்று என்ற சொல்லை இணைத்தோ அல்லது தவிர்த்தோ வரும் சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.
நாம் முன்பே கண்டதுபோல், ப்ளுடூத் என்பது ஒரு தொழில் நுட்பம் ஆகும். பல்வேறு மின்னணுச் சாதனங்களுக்கிடையே இழைகள் இல்லாமலேயே தகவல் தொடர்பு பரிமாறிக்கொள்ள உதவும் தொழில் நுட்பம் இது. ஆனால், அது இயங்கக்கூடிய இடத்தின் பரப்பெல்லை (range) மிகக் குறுகியதாகும். இக்கருத்தை உள்வாங்கிக் கொண்டு இவ்வாரக் கடிதங்களை நாம் கண்டால், இழையில் குறுந்தொலைத்தொடர் என்ற சொல் நேரடி மொழிபெயர்ப்பாகிறது. ஆனால், அது நீண்ட சொல்லாக இருக்கிறது. தரவட்டி, தரவுப் பரிமாற்றி போன்ற சொற்களில், "இழைகளற்ற' என்ற பொருள் அடங்கவில்லை. ஆகவே, இழைதவிர் இணைப்பு என்ற சொல்லே மிகப் பொருத்தமானதாகும். எனவே, ப்ளுடூத் என்ற சொல்லுக்கான தமிழ்ச்சொல் இழைதவிர் இணைப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...