ஸ்ட்ராலிஸ்' அல்லது "ஆஸ்ட்ரம் ஸ்டார்' என்ற இலத்தீன் மொழிச் சொற்களிலிருந்தும், "ஆஸ்ட்ரோன்' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும் உருவாக்கப்பட்டு, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் 1605-ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்ததாகக் கருதப்படும் சொல் "ஆஸ்ட்ரல்' ஆகும். இந்தச் சொல்லுக்குப் பொதுவான பொருள் விண்மீன்களிலிருந்து வரும் அல்லது விண்மீன்கள் தொடர்பான என்று மெரியம்-வெப்ஸ்டர் அகர முதலி குறிக்கிறது. அதே சமயம், புறப்புலன்களால் அறியப்படும் உலகைத் தாண்டி கண்ணுக்குப் புலனாகாமல் விளங்கும் ஒன்றையும் இச்சொல் குறிப்பதாக அதே அகர முதலி சுட்டிக்காட்டுகிறது. தொடக்க காலத்தில் மேற்கூறிய பொருள்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டாலும், பின்னாளில், இறப்பிற்குப் பின் நடப்பதென்ன என்பதைப் பற்றிய ஆராய்ச்சியும், இறப்பின் விளிம்பிற்குப் போய்த் திரும்பி வந்தவர்கள் தங்களது பூதவுடலை விட்டு வெளியேறி, பின் உடம்பிற்குள் புகுந்ததாகச் சொல்லப்படும் (அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்ஸ்) நிகழ்வுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதுதான், மிக அதிகமான முறையில் இச்சொல் பயன்பாட்டிற்கு வந்தது.