சொல் வேட்டை - 36
ஸ்பானிஷ் மொழியில் கவிதை, புதினம், நாடகம் இவற்றை எழுதி, அவை ஏற்படுத்திய தாக்கத்தால், ஸ்பானிஷ் மொழியே அவ்வாசிரியரின் மொழி என்று அழைக்கப்படும் பெருமையைப் பெற்றவர் மிகேல் த செர்வான்டே சாவெத்ரா Miguel de Cervantes Saavedra).


ஸ்பானிஷ் மொழியில் கவிதை, புதினம், நாடகம் இவற்றை எழுதி, அவை ஏற்படுத்திய தாக்கத்தால், ஸ்பானிஷ் மொழியே அவ்வாசிரியரின் மொழி என்று அழைக்கப்படும் பெருமையைப் பெற்றவர் மிகேல் த செர்வான்டே சாவெத்ரா Miguel de Cervantes Saavedra).
1604-ஆம் ஆண்டு, ஜூலை (சரியாக 409 ஆண்டுகளுக்கு முன்) செர்வான்டே எழுதிய எல் இன்ஜீனியாசோ ஹிடால்கோ டான் க்விக்சாட் த லா மஞ்சா (El Ingenioso hidalgo Don Quixote de le Mancha) என்ற புதினத்தின் கதாநாயகன்தான் டான் க்விக்சாட். ஒரு லட்சிய உலகைக் கற்பனை செய்து கொண்டு, அதில் வரும் பிரச்னைகளை ராட்சதக் காற்றாலைகளோடு மோதித் தீர்த்து வைக்கும் ஒரு கதாநாயகனாகப் படைக்கப்பட்டான். அதன் பிறகு, ஜான் க்ளீவ்லாண்ட் (John Cleveland) என்னும் கவிஞரால் 1644-இல் தனது கவிதை நூலில் பயன்படுத்தப்பட்டு, க்விக்சாட் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. அச்சொல்லில் இருந்து, க்விக்சாடிஸம் என்ற சொல் பல்பிட் போபரி (pulpit popery) என்ற நூலில் 1688-இல் உருவாக்கப்பட்டது.
க்விக்சாடிக் என்ற சொல் கற்பனைச் சக்தியோடு தொடர்புடைய வார்த்தை என்றும், அது உறுதியான உண்மை என்று சொல்ல முடியாத காரணத்தினால் அச்சொல்லுக்கு இணையாக, போலியான, உண்மையற்ற, பொய்யான, நம்பிக்கையற்ற என்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் எழுதியுள்ளார்.
உயர்ந்த கொள்கை, துணிச்சல், முட்டாள்தனம், விளைவுகளைப் பற்றி அறியாமை, கவலைப்படாமை ஆகியவை ஒருசேர இருப்பதை "க்விக்சாடிக்' என்று சொல்லுவதால், அச்சொல்லுக்கு இணையாக நடை ஒவ்வா உயர்கொள்கை, செயல் சேராச் சீர்கொள்கை, செயலுறாக் கொள்கை, நடைமுரண் கொள்கை ஆகியவற்றைப் பரிசீலிக்கலாம் என்கிறார் என்.ஆர்.ஸத்யமூர்த்தி.
முனைவர் பா.ஜம்புலிங்கம் கற்பனைசார், கற்பனை உலகுசார், கற்பனை உலகியல் சார்ந்த, நடைமுறைக்கு ஒவ்வா, இயல்புக்குப் பொருந்தா, இயல்புக்கு அப்பாற்பட்ட, இயற்கைக்கு ஒவ்வா ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.
புலவர் செ.சத்தியசீலன், கற்பனையான, நடைமுறைக்கு ஒவ்வாத, விந்தையான, நிலைப்பாடில்லாத, உண்மைக்குப் புறம்பான, உயர்வுநவிற்சியான ஆகிய சொற்களையும், தி.அன்பழகன், இல்பொருள் வாய்ந்த அல்லது இல்பொருளான ஆகிய சொற்களையும், கோ.மன்றவாணன் நாயக பாவம், பாவனை, உருவகிப்பு, பொய்யுரு பாவனை, கற்பனை நடத்தை, நடவாத நாயகத்தனம், மடநெகிழ்வுணர்வு ஆகிய சொற்களையும் எழுதியுள்ளனர்.
வெ.ஆனந்தக்கிருஷ்ணன் நகைப்பான, கோமாளி வீரர், விசித்திரப் பண்புடையவர், ஆர்வ உணர்ச்சி நெகிழ்வுகள், கற்பனை உலகில் வாய்ந்த, பெருந்தன்மையுள்ள ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.
ச.மு.விமலானந்தன், செயல்படுத்த முடியாத சீரிய நோக்கம் என்ற பொருளைத் தருகிறார்.
ஆத்தூர் மான்விழி, அனைத்து அகர முதலிகளும் நம்பமுடியாத, செய்வதற்கரிய, செய்ய முடியாததைச் செய்தல் போன்ற பொருள்களைத் தருவதால், இச்சொல்லுக்கு வழக்கில் இயலாத, இயல்பிற்கு இசையாத, செய்ய முடியாத, செய்தற்கரிய, நம்ப இயலா, அசாத்தியமான, அசாதாரணமான, அசகாய (சூரன்) என்னும் சொற்கள் பொருந்தும் என்கிறார்.
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் க்விக்சாட் என்ற சொல்லுக்கு நடைமுறைக்கு ஒவ்வாத மான ஆர்வலர் என்றும், க்விக்சாடிக் என்ற சொல்லுக்கு கற்பனை உலகியல் வாய்ந்த என்றும், க்விக்சாடிக்ஸ் என்ற சொல்லுக்கு ஆர்வ உணர்ச்சி நெகிழ்வுகள் என்றும் பொருள்கள் தரப்பட்டுள்ளன.
மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி, க்விக்சாட் என்ற சொல் பெயர்ச்சொல் என்றும், அது க்விக்சாடிக் ஆக இருக்கும் நபரைக் குறிக்கும் என்றும், க்விக்சாடிக் என்ற சொல்லுக்கு மிகச் சீரிய இலக்கை அடைய விரும்பும் நடைமுறைக்கு ஒவ்வாத முட்டாள்தனமான செயல்கள் என்ற பொருளைத் தருகிறது. க்விக்சாட் என்ற பெயர்ச்சொல்லிருந்து (noun) பிறக்கும் காரணத்தால், க்விக்சாடிக் என்ற சொல் ஒரு பெயரடை (adjective) ஆகும்.
ஆக்ஸ்ஃபோர்ட் அகரமுதலி க்விக்சாடிக் என்ற சொல்லுக்கு மிகத் தீவிரமான இலக்கியலாளர் என்ற பொருளைத் தருகிறது. ஒரு வகையில் உடோபியன் கனவாளர்கள் இவ்வரிசையில் அடங்கலாம். ஆனால், க்விக்சாடிக் நபருக்கும், நடைமுறைக்கு ஒவ்வா இலக்கியல் ஆர்வக் கனவாளருக்கும் (Utopian dreamer) உள்ள வேற்றுமை என்னவென்றால், பின்னவர் கனவுகளோடு நிறுத்திக்கொள்கிறார்; முன்னவர் அதைச் செயல்படுத்தத் துணிகிறார் என்பதே ஆகும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு இவ்வார கடிதங்களைப் பார்த்தால், க்விக்சாடிக் என்ற சொல்லுக்கு நாம் தரும் இணைச் சொல் மூன்று பொருள்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். அவை: (1) நடைமுறைக்கு ஒவ்வாத, (2) மிகச் சீரிய இலக்கை அடைய விரும்பும் ஆர்வம், (3) அவ்வார்வத்தில் முட்டாள்தனமான தீவிரம். ஆனால், வாசகர்கள் பரிந்துரைத்துள்ள சொற்களில், இம்மூன்று பொருள்களில் ஏதோ ஒன்று குறைவாக இருக்கிறது. எனவே, வாசகர்கள் பரிந்துரைத்துள்ள சொற்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களை இணைத்தே, க்விக்சாடிக் என்ற சொல்லுக்கு இணைச்சொல்லை உருவாக்க வேண்டியிருக்கிறது. அப்படி உருவாக்கும்போது, மேற்கூறிய மூன்று பொருள்களையும் உள்ளடக்கியதாக அமையும் சொல் "இலக்கியல் ஆர்வக் கோளாறு' என்று எண்ணுகிறேன். எனவே, க்விக்சாடிக் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இலக்கியல் ஆர்வக் கோளாறு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...