என்பது நூற்பா. இந் நூற்பாவின் மூலம், கற்பொழுக்கத்தில் பரத்தமை காரணமாகப் பிரிந்த தலைவன், தலைவி பூப்பு எய்திய மூன்று நாள் முடிந்து, அடுத்த மூன்று நாளும் முடிந்து வரக்கூடிய பன்னிரண்டு நாளும் தலைவியை விட்டுத் தலைவன் பிரிவது மரபு இல்லை என்கிறார். அதாவது, பெண்களுக்கு வரும் மாதவிடாய் முடிந்து மூன்று நாள் கழித்து, அடுத்தப் பன்னிரண்டு நாளும் தலைவன் தலைவியை விட்டுப் பிரிவதில்லை என்கிறார். அதற்கு இளம்பூரணர், ""இதனாற் பயன் என்னையெனின் அது கருத்தோன்றுங்காலம் என்க'' என்று விளக்கம் தருகிறார். நச்சினார்க்கினியர், தமிழ் அக இலக்கண மரபில் குறிப்பிடத்தக்க இறையனார் களவியல் உரைக்கு விளக்கம் தருகிறார். அதாவது, பெண் மாதவிடாய் அடைந்த முதல் மூன்று நாள் முடிந்த பின்பு நான்காம், ஐந்தாம், ஆறாம் நாள்கள் என அடுத்தடுத்த மூன்று நாளும் ஆணும் பெண்ணும் சேரக்கூடாது என்கிறார். அதற்கு இறையனார் களவியல் உரை, ""முதல் நாள் நின்ற கரு வயிற்றில் சாம்; இரண்டாம் நாள் நின்ற கரு குரு வாழ்க்கை உடைத்தாம்; மூன்றாம் நாள் நின்ற கரு திருவின்றாம்'' என்று கூறுகிறது.