தாண்டக வேந்தரின் தனித்த கொடை!
பக்தி இயக்கத் தோற்றமானது அக்கால மக்கட் சமூகத்தின் வாழ்நிலையில் மட்டுமன்றி இலக்கிய வகைமைகளுக்குள்ளும் பல புது மாற்றங்களை ஏற்படுத்தியது.


பக்தி இயக்கத் தோற்றமானது அக்கால மக்கட் சமூகத்தின் வாழ்நிலையில் மட்டுமன்றி இலக்கிய வகைமைகளுக்குள்ளும் பல புது மாற்றங்களை ஏற்படுத்தியது. அப்பக்தி இயக்கத்தின் தோற்றத்திற்கும் பரவலுக்கும் இசையைத் துணையாகக்கொண்டு பல்வேறு அருள்மொழிகளைப் பதிகங்களாகப் பாடியவர்கள் தேவார ஆசிரியர்கள். அவர்களுள் ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் யாப்பில் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அம்முயற்சிகள் யாவும் தமிழுக்கு அளிக்கப்பட்ட யாப்புக் கொடைகளாக உள்ளன.
திருநாவுக்கரசரைப் பொறுத்தவரையில் அவர் தாண்டக வேந்தர் என்றும், தாண்டக சதுரர் என்றும் போற்றப்படக் காரணம் அவருடைய திருத்தாண்டகப் பாடல்களே! அப்பாடல்கள் அனைத்தும் ஆறாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
"தாண்டகம்' என்ற சொல்லாடல் ஒரு குறிப்பிட்ட யாப்பு வடிவத்தைக் குறிப்பதாகவே தமிழ்ச் சூழலில் வழங்கப்பட்டுள்ளது. அக்குறிப்பிட்ட யாப்பு வடிவத்தில் மட்டும் 99 பதிகங்களை நாவுக்கரசர் பாடியுள்ளார். இவருடைய தாண்டகம் என்கின்ற வடிவத்திற்கான வரையறைகளை நோக்குமிடத்து இருவேறான கருத்துநிலைகள் நிலவுகின்றன. ஒன்று, அவை எண்சீர்களாலான ஆசிரிய விருத்தங்கள்; மற்றொன்று, மரபுநிலைப்பட்டு தொல்காப்பியர் கூறும் கொச்சக ஒரு போகின் ஒருவகை.
தி.வே.கோபாலையர், தம் தேவார ஆய்வுத்துணையுள் "இரண்டு காய்ச்சீர் இரண்டு மாச்சீர் இவை இரட்டித்து வரும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் நெடுந்தாண்டகம் எனப்படும். இது பொதுவிலக்கணம்' என்று வரையறுத்துள்ளார். இதற்குச் சான்றாக, ""அரியானை யந்தணர்தஞ் சிந்தை யானை'' (6:1:6255) என்கிற பாடலைக் கூறமுடியும். இப்பாடல் காய் காய் மா தேமா என்கிற வாய்பாடு இரட்டித்து வந்த எண்சீர் ஆசிரிய விருத்த அமைப்பினையுடையது. இவ்வாறான வரையறைக்கு உட்படாத பாடல்கள் குறித்துக் கூறும்போது "காய்ச்சீர் சிறுபான்மையாகக் கனிச்சீர் ஆதலும் உண்டு' என்றும், "காய்ச்சீர் மாச்சீர் ஆதலும் உண்டு' என்றும், "நெடுந்தாண்டக யாப்பு பிழையாமல் வந்த பதிகங்கள் சிலவே' என்றும் கூறியுள்ளார். இந்த வரையறை இப்பாடல்களுக்கு முற்றிலும் பொருந்துவது அல்ல. ஏனெனில், இவ்வாறான வரையறைகளுக்கு உட்படாமல் வேறுசில யாப்பமைப்புகளை உடைய பாடல்களும் திருத்தாண்டகத்தில் காணப்படுகின்றன. ஒருகுறிப்பிட்ட அளவுகோலை வைத்துக்கொண்டு அனைத்துப் பாடல்களையும் அளவிட்டு விடமுடியாது. காட்டாகச் சில போற்றித் திருத்தாண்டகப் பாடல்களைக் குறிப்பிடலாம்.
""உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
யெள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடையின் மதியாய் போற்றி
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரிற் றிகழ்கின்ற சோதீ போற்றி
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலி லொளியாய முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!''
(6:56:6819)
என்கிற பாடலை நோக்குமிடத்து இது மேற்கூறிய வாய்பாட்டமைவில் அமையவில்லை. ஆனால் இதில் வேறொரு யாப்புக்கட்டமைப்பு காணப்படுகிறது. இது கட்டளை அடிகள் பெற்ற பாடல். நிரையசையில் தொடங்கிய அரைஅடிகள் யாவும் 11 எழுத்துகளைப் பெற்றுள்ளன. நேரசையில் தொடங்கிய அரைஅடிகள் 10 எழுத்துகளைப் பெற்றுள்ளன. நான்கு அடிகளும் எதுகை பெற்றும் அனைத்து அடிகளும் மோனை பெற்றும் அமைந்துள்ளன. முதலிரு சீர்களும் வெண்டளையால் பிணைக்கப்பட்டுள்ளன. இதனைப் புதுவகைக் கட்டளைக் கலிப்பா என்பர். (மரபான கட்டளைக் கலிப்பா நேரசையில் தொடங்கின் 11 எழுத்துகளையும் நிரையசையில் தொடங்கின் 12 எழுத்துகளையும் கொண்டது.) இந்தப் பா வடிவத்திற்கான வரையறை காரிகை வரையிலான இலக்கணப் பனுவல்களில் இடம்பெறவில்லை. காரிகைக்குப் பிந்தைய காலத்தில் இலக்கணச் சூடாமணி, தொன்னூல் விளக்கம், அறுவகை இலக்கணம், செய்யுளிலக்கணம், யாப்பதிகாரம், கவிஞராக, கவிபாடலாம், யாப்புநூல், எளிதாகப்பாடலாம், தென்னூல், பாவலர்பண்ணை ஆகியன இவ்வடிவத்திற்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. சோ.ந.கந்தசாமி, ய.மணிகண்டன் ஆகியோர் தத்தமது யாப்பியல் ஆய்வுகளில் இக்கட்டளைக் கலிப்பாவின் வடிவஅமைதி குறித்துப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சான்றாகச் சம்பந்தரின் தேவாரப் படலொன்றையும் (1:7:9) சான்று காட்டியுள்ளார். மேலும், கட்டளைக் கலிப்பா வடிவத்தில் சம்பந்தர் பாடியுள்ள பாடல்களை எடுத்துக்காட்டி இவ்வமைப்புக்கு இவரே மூலவர் என்றும் ய. மணிகண்டன் கூறியுள்ளார். ஆனால் இவ்வமைப்புக்கான மூலவடிவம் திருநாவுக்கரசரின் தாண்டகப் பாடல்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தாண்டகம் என்பது ஒரு குறிப்பிட்ட யாப்பு வடிவத்தினைக் குறிக்கின்ற சொல்லாடலாகவே கருதப்பட்டு வந்ததாலும் வடமொழித் தாண்டக அமைப்பு குறித்த தமிழ் இலக்கண உலகப் (வீரசோழியம், யாப்பருங்கலம்) புரிதல்களாலும் இத்தகு புதுமைகள் கவனத்திற் கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. திருநெய்த்தானப் பதிகத்தில் உள்ள ஒரு பாடலும் (6:56:68-19) மேற்குறித்த அமைப்பினை உடையதே.
திருக்கயிலாயப் போற்றித் திருத்தாண்டகம் (6:55,56,57), திருக்கருகாவூர் (6:15), திருவாரூர் (6:25), திருவாக்கூர்(6:21) பதிகங்கள் சிலவும் இவ்வமைப்பினைக் கொண்டுள்ளன. சுமார் 17-ஆம் நூற்றாண்டளவில் வடிவ வரையரைக்காகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு பா வடிவத்திற்கான மூலம் நாவுக்கரசரின் தாண்டகப் பாடல்களில் பயின்றுள்ளது சிறப்பானது. எனவே, தாண்டகம் என்பதை எண்சீர்களாலான பல்வேறுபட்ட யாப்புக்கூறுகளைக் கொண்ட பாடல்களின் தொகுப்பைக் குறிக்கின்ற ஒரு சொல்லாடலாகவே கொள்ள இடமுள்ளது. நாவுக்கரசரின் இத்தாண்டகப் பாடல்கள் பிற்காலத்தில் தனித்த இலக்கிய வளர்ச்சிக்கும் யாப்பியல் புதுமைக்கும் வித்தாக அமைந்தன எனில் அது மிகையாகாது.
சித்திரை சதயம் (24.4.2014)
அப்பரடிகள் குருபூஜை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...