தமிழ் இலக்கிய உலகில் சமயம் கடந்து ஒருமிடறாக ஏற்றுப் போற்றப்படும் ஒரே நூல் திருக்குறளே.சைவத்திருமுறைகளில் திருக்குறளின் செல்வாக்கினைச் சில இடங்களில் காணலாம். ஆனால், திருக்குறளை முழுமையாகத் தம் நூலில் முதன்முதலில் எடுத்து ஆண்டுள்ள பெருமை சுந்தரமூர்த்தி நாயனாரின் தோழரான சேரமான் பெருமாள் நாயனாரையே சாரும். அவர் அருளிய திருக்கைலாய ஞானவுலா கயிலாயத்தில் அரங்கேறிய தனிச்சிறப்பு உடையது. அதுவே தமிழில் தோன்றிய முதல் உலா. அதில் இரு குறட்பாக்கள் அப்படியே எடுத்துக் கையாளப்பட்டுள்ளன. உலாவின் கலிவெண்பா யாப்பு அதற்கு வாய்ப்பாக அமைந்தது.
ஐந்து வயது பேதை முதல் நாற்பது வயது பேரிளம் பெண்வரை பல்வேறு பருவப் பெண்கள் உலாவரும் தலைவனைக் கண்டு நெஞ்சைப் பறிகொடுத்து நிற்பதாகப் பாடுவது உலாவின் போக்கு. இவ்வுலாவிலும் அப்படி அரிவை ஒருத்தி தன்னை அலங்கரித்துக்கொண்டு சென்று பெருமானைக் கண்டு தன் நலனை இழந்து நிற்கிறாள். இருபது வயதுக்கும் இருபத்தைந்து வயதுக்குமிடைப்பட்ட பெண் அரிவை ஆவாள். ஒளிபடைத்த முகங்கொண்ட அந்தப் பெண் தன் இளைத்த இடையில் எளிய ஆடையைச் சுற்றிக்கொண்டாள். பருத்த மார்பிலோ மணக்கும் சந்தனத்தைப் பூசியதோடு விலையுயர்ந்த ஆபரணங்களையும் அணிந்துகொண்டாள். அதனால் தனக்கு உரிய சிறப்பு கிட்டவில்லை என்று இடை, உள்ளம் அழிந்து உருகியதாம். சேரமான் பெருமாள் நாயனாருக்குச் சிறுத்த இடை ஏழையாகவும் பருத்த மார்பகம் செல்வராகவும் காட்சியளிக்கின்றன. அப்பெண்ணின் செயல் எல்லாக் காலத்திலும் ஏழைகளை எல்லாரும் இகழ்வார்கள் என்றும், செல்வர்களை எல்லாரும் சிறப்பிப்பார்கள் என்றும் கூறும் வள்ளுவத்தை மெய்ப்பிப்பதாக அமைகிறது.
""எந்நாளும்,
"இல்லாரை எல்லாரும் எள்குவார் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு' என்னும் -சொல்லாலே
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர்
இடையிடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள்'' (136-138)
இப்புனைவில், "இல்லாரை' (752) என்று தொடங்கும் பொருட்பால் குறள் அப்படியே இடம் பெற்றுள்ளது மட்டுமன்றி ஒரு நல்ல பாடவேறுபாடும் கிடைக்கிறது. இப்பொழுது பதிப்புகளில் காணப்படும் பாடம் "எள்ளுவர்' என்பது. அதனினும் இதில் காணப்படும் "எள்குவர்' என்னும் பாடம் சிறப்பாகத் தோன்றுகிறது.
பேரிளம்பெண் முப்பத்திரண்டுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட வயதினள். பெண்மைநலம் கனிந்தவள். அவளுக்கு முனிவரையும் திறைகொள்ளும் செவ்வாய்; கடலனைய வாட்கண்கள்; பெண்ணரசியாகத் திகழ்கிறாள். அவள் ஐம்பொறிகளுக்கும் விருந்தாக அமைந்திருக்கிறாள். அவளை,
""பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் - மண்ணின்மேல்
"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள' என்று - பண்டையோர்
கட்டுரையை மேம்படுத்தாள்'' (கண்ணி 172-174)
என்று புனைந்துரைக்கிறார். இதில், கண்டுகேட்டு (1101) என்று தொடங்கும் காமத்துப்பால் குறள் அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் இடம்பெற்றுள்ளது.
சிவபெருமான் பெருமையைக் காதற்சுவை கனியப்பாடும் உலாவில் நிலாவும் இருகுறட் பாக்கள் சேரமான் பெருமாள் நாயனாரின் புலமையை மட்டுமன்றித் திருக்குறள் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினையும் காட்டிக் கற்பாரைப் பேரின்ப வெள்ளத்தில் ஆழ்த்துகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

