கடவுளும் ஜாதியும்!
சிவபெருமானின் திருவீதி உலாவைப் பாட எண்ணினார் கவி காளமேகம். இறைவனின் ஊர்வலம் வரும்போது தெருவெங்கும் மக்கள் ஜாதி வேறுபாடின்றி வழிபட்டு மகிழ்வது வழக்கம்.


சிவபெருமானின் திருவீதி உலாவைப் பாட எண்ணினார் கவி காளமேகம். இறைவனின் ஊர்வலம் வரும்போது தெருவெங்கும் மக்கள் ஜாதி வேறுபாடின்றி வழிபட்டு மகிழ்வது வழக்கம். "சிவபெருமானே முழுமுதற் பொருள்' என்னும் கருத்தில், பிற தெய்வங்களை எல்லாம் இணைத்துப் பாடுகிறார் புலவர். அவர்களை எல்லாம் ஜாதிகளின் பெயரால் குறிப்பிடுகிறார்.
சிவபெருமானின் திருக்கோலத்தைப் பிறர் காணவும், தரிசிக்கவும் உற்சவ மூர்த்தியாக தெருவில் தூக்கிச் செல்லும் கடப்பாடுடையவர்கள் சிலர் ஊர்தோறும் உள்ளனர். அவர்களும் பல்வேறு இனத்தைச் சார்ந்தோராவர். ஆனால், புலவர் "இறைவன் முன்னர் அனைவரும் சமம்' என்பதைக் குறிப்பால் உணர்த்தி, அவரவர் சார்ந்த குலத்தொழிலைத் தவறாமல் செய்ததாகக் கூறுகிறார்.
""வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி
சேணியன் போற்ற, கடல்பள்ளி தொழ, தீங்கரும்பைக்
கோணியன் வாழ்த்த, கருமான் துகில்தனைக் கொண்டணிந்த
வேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே!''
"பிரமன் பாட்டுப்பாட, நந்திதேவர் உருவத்தைச் சுமக்க, பைரவர், முருகன், இந்திரன் ஆகியோர் மந்திரம் முழங்க, திருமால் பணிவுடன் முன்னே வணங்கிச் செல்ல, மன்மதன் வாழ்த்துக்கூற, கரிய யானையின் தோலை ஆடையாக அணிந்தவனும், சடைகளைத் தாங்கியவனும், எவர் கண்ணுக்கும் புலப்படாதவனுமாகிய சிவபெருமானின் ஊர்வலம் புறப்பட்டதாம்'!
இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள ஜாதிப் பெயர்களும், குலத்தொழில்களும் கடவுளர்களும், அவர்கள் ஊர்வலத்தில் செய்துவந்த செயல்களுக்கும் காரண-காரியப் பெயர்களாக அமைந்துள்ளதுதான் பாடலின் தனிச் சிறப்பாகும்.
1. வாணியன் - கலைமகளை நாவில் உடைய பிரமன் பாடினான் (எண்ணெய் ஆட்டுபவன் - செக்கில் எண்ணெய் ஆட்டும்போது ராகம் பாடுவதுபோல் சப்தம் வரும்), 2. வண்ணான் - வெண்மையான நிறம் பொருந்திய நந்திதேவர் சிவனின் உருவத்தை வாகனமாகச் சுமந்தார் (துணிகளை வெண்மையாகத் துவைத்துத் தோளில் சுமத்தல்), 3. வடுகன், 4. செட்டி, 5. சேணியன் - பைரவர், முருகன், இந்திரன் மந்திரச் சொற்களை ஓதிக்கொண்டு வந்தனர். (மாயா ஜாலம் செய்யும் கருநாடக தேசத்தவர், பொருள்களைக் கூவி விற்பவர், யாகம் நடத்துபவர் இவர்கள் அனைவரும் வாய்விட்டு ஒலி எழுப்புபவர்கள்), 6. கடல் பள்ளி - கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால், சிவபெருமானைத் தன் மைத்துனன் என எண்ணி வணங்கினான் (தாழ்த்தப்பட்டோர் தமக்கு மேலான இனத்தவரைத் தொழுது வணங்குவர்), 7. தீங்கரும்பைக் கோணியன் - சுவையான கரும்பை வில்லாக வளைத்துக் கையில் கொண்டு மலரம்பு வீசும் மன்மதன் வாழ்த்தினான் (கோன எனப்படும் இடையர் குலத்தைச் சார்ந்தோர், தம் தெய்வமாகிய திருமால் வணங்குவதால் தாமும் வணங்கி வாழ்த்துவர்).
இவ்வாறு உலாவந்த சிவபெருமானின் செயலையும், பெயரையும் மூன்று ஜாதியின் பெயரால் குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார் காளமேகம். கருமான் துகில் அணிந்தவன் - கரிய உடல் பொருந்திய விலங்கான யானையைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடையவன். (கரிய புகைபடிந்த ஆடையணிந்து, இரும்புத் தொழில் செய்யும் கொல்லர்); வேணியன் - அடர்ந்த சடைகளைத் தலையில் கொண்டு விளங்குபவன் (ஆடை நெய்பவர் உயிரையும் உடலையும் இணைப்பதுபோல் இரு நூல்களை இணைத்து நெருக்கி ஆடையை உருவாக்குவர்); தட்டான் - புலன்களுக்குக் குறிப்பாகக் கண்களுக்குத் தட்டுப்படாதவன் (பொற்கொல்லர் பொன்னைத் தட்டித் தட்டித் தொழில் செய்வர்).
காளமேகம், எல்லாக் கடவுளர்க்கும் ஜாதிப்பெயர்களைப் பொருத்திப் பொருள் கொள்ளும் வண்ணம் இருபொருள்படக் கூறிய சொல்லாட்சி போற்றத்தக்கது. மனிதர்களில் ஜாதிப் பிரிவு இருப்பதாகக் கருதினால், அதற்குக் கடவுளரும் விதிவிலக்கல்லர் என்பதை நகைச்சுவையாகக் கூறியுள்ளார். அதனால்தான்,
சிவபெருமானின் திருவீதி உலாவை "வேடிக்கை' எனக்கூறி முடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...