தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மகாவித்துவான் செய்த வேடிக்கை!

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இனிய இயல்பினர்; மறந்தும் பிறன் கேடு சூழாதவர். அவரே

News image
Updated On :15 மார்ச் 2014, 7:36 pm

இரா.வ.கமலக்கண்ணன்

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இனிய இயல்பினர்; மறந்தும் பிறன் கேடு சூழாதவர். அவரே ஒருமுறை ஒரு வேடிக்கை செய்ய நேர்ந்தது. அவ்விவரம் வருமாறு: அன்னாரிடம் ஏவலராய் இருந்தவர் சுப்பையா பண்டாரம் என்பவர். இவர் கற்பதில் நாட்டமில்லாதவர்; மகாவித்துவான் இல்லாத நேரம், செல்வரிடம் சென்று பழம்பாடல் வரிகளைச் சேர்த்துப்பாடி பரிசு பெற்று வருவார்.

ஒருநாள் அவர் மாமா ஆறுமுகம் என்பவர், ""என்ன சுப்பையா? எங்கெங்கோ சென்று பாட்டுப் பாடிப் பரிசு பெற்று வருகிறாயே, கும்பகோணம் சென்று, ஐயா அவர்களின் தலைமாணவர் தியாகராசச் செட்டியாரிடம் பாடல் பாடிப் பரிசு பெற்று வருவாயோ?'' என்று கேட்டார். மகாவித்வான் ஒப்புக்கொள்ளுமாறு சாடை செய்து, ஒரு பாடல் எழுதிக் கொடுத்து, அதன் பொருளை உ.வே.சா.வை சொல்லச் சொல்லி அனுப்பி வைத்தார். தியாகராசர் எப்படிக் கேட்டாலும் "இது அவரே எழுதிய பாடல்தான்' என்று கூறுமாறும் சொல்லி அனுப்பி வைத்தார்.

அவ்வாறே சுப்பையா திருக்குடந்தை சென்று தியாகராசரைக் கண்டு, பாடலைப் பாடிக் காட்டினார். அவர் அதைக் கேட்டவுடன், "இது ஐயா அவர்கள் பாடிய பாடல்தானே?' என்று வினவினார். சுப்பையா மறுத்தார். "சரி பொருள் கூறுவீரா?' என்றார் தியாகராசர். "ஓ.. சொல்வேன்' என்றார் இவர். "வேண்டாம், "என்கோ' - என்னும் சொல்லின் பொருளைக் கூறு' என்றார் அவர். இவர் "என்பேனோ?' என்றார். "சரி! இச்சொல் வேறு எந்த இலக்கியத்தில் வந்துள்ளது? இச்சொல்லின் ஓகாரம் என்ன பொருளில் வந்துள்ளது? இச்சொல்லில் ஓகாரத்தை ஏற்ற மொழி எது?' என அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டார். சுப்பையா விழித்தார். இறுதியில் "ஐயா அவர்கள் எழுதிய பாடல்தான்' என்பதை ஒப்புக்கொண்டார். இவ்வினாக்களுக்குரிய விடைகள்:

1. ""மலையிடைப் பிறவா மணியே என்கோ?'' (சிலம்பு)

""புகழும் நல் ஒருவன் என்கோ?'' (திருவாய்மொழி 3:4:1)

2. ஓகாரம் - ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, அசைநிலை, பிரிநிலை என 8 பொருள்களில் வரும். (நன்னூல்-இடையியல், நூற்பா. 4-இங்கு வினாப்பொருள்)

3. ஓகாரத்தை ஏற்ற மொழி (நிலைமொழி) என்கு + ஓ; என்கு - என்று சொல்வேன் என்பதாம். இச்சொல் இன்று வழக்கிலில்லை. என்கோ -

எனப் புணர்ந்த விதி அனைவரும் அறிந்ததே. இனிப் பாடலைக்

காண்போம்.

""புண்ணிய மெலாம்திரண்ட வடிவென்கோ

குறுமுனிவன் பொதிய நீத்திங்

கண்ணிய தோர்வடி வென்கோ

உலகிலுள பலகலைகள் அனைத்தும்கூடி

நண்ணிய தோர்வடி வென்கோ

பின்னுமெந்த வடிவமென நாட்டுகோயான்

மண்ணிய மாமணியனைய தியாகராசப்

புலவன் வடிவந் தானே?''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.