"தமிழர்' இதழும் மு.சி.பூர்ணலிங்கமும்!
தமிழ் நூல்கள் அனைத்தும் அச்சிடப்பெற்று ஆழ்நிலை வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான்.


தமிழ் நூல்கள் அனைத்தும் அச்சிடப்பெற்று ஆழ்நிலை வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான். அவ் இடைப்பகுதியைச் செதுக்கி, சீர்ப்படுத்தியப் புலமையாளர்கள் பலர். அவர்களுள் மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை குறிப்பிடத்தக்கவர்.
24.5.1866-இல் திருநெல்வேலி "முந்நீர்ப் பள்ளம்' எனும் ஊரில் பிறந்தவர். பல்வேறு மொழிப் புலமையுடன் விளங்கியவர். தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள் ஆய்வுரை, நாயன்மார்கள், ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும், ஆங்கிலத்தில் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நாட்டார் கதை இலக்கியம் எனப் பல்வேறு துறையில் தடம்பதித்தவர்.
"ஞானபோதினி' எனும் அறிவியல் இதழையும், "திராவிடன்' எனும் இதழையும், "ஜஸ்டிஸ்' எனும் ஆங்கில இதழையும், "ஆந்திரப் பிரகாசிகா' எனும் தெலுங்கு இதழையும் நடத்தியவர். 1923-ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து வெளியான "தமிழர்' இதழிலும் பூர்ணலிங்கம் பிள்ளையின் கட்டுரைகளும், அவருடைய நூல் அறிமுகங்களும் வெளிவந்துள்ளன.
குமரியாடல், பட்டம், தமிழ்க் கலைமாடம், பாரத கண்டமும் பன்னாட்டார் குழுவும், கல்வி பயிற்று முறை புகட்டும் பள்ளிக்கூடம், தாய்மொழி போற்றல், செப்பானின் முன்னேற்றம், இந்திய வரலாற்று ஆராய்ச்சி, குரவர் மாணவர் குறிப்பு, யானைத் தீவின் குகைகள் ஆகிய கட்டுரைகளை (1925 சித்திரை-மாசி) "தமிழர்' இதழில் எழுதியிருக்கிறார். தமிழ் மொழியைச் செம்மைப்படுத்தும் அவர் எழுத்துகள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
""தமிழ்மொழி தொன்மையுடைய தென்பதும், ஈப்ரு மொழிக்குங்கூட பல சொற்கள் கொடுத்துள தென்பதும், இருக்கு (ரிக்)வேதத்திலும் பல தமிழ்க் கிளவிகளுள வென்பதும் பலமொழி பயின்ற பெரியார் கூறுகின்றனர். இவையுண்மையாயின், தாய் மொழியாகிய தமிழைப் போற்றாது அதனை இகழும் மக்களின் மனப்போக்கு எவ்வகைத்தாம், என்னையென்று கூறுவாம்! "தாய்தனைப் போற்றி வாழ்' என்ற மூதுரை நெஞ்சிடமாகுக'' என்று "தாய்மொழிப் போற்றல்' கட்டுரையில் (பக்.242) தமிழ் மொழியைப் போற்றியுள்ளார்.
"தமிழர்' ஒன்பதாவது இதழில், "திரிசிரபுரம் சைவசித்தாந்த சபை தலைவருள் ஒருவரான திருவாளர் மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை இவ்வூரைவிட்டுத் தன் சொந்த ஊராகிய நெல்லையம்பதிக்குப் போகும்போது இச்சபையார் கூறிய பிரிவுரை வாழ்த்து' எனும் நிலையில் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கடைசிப் பாடல்,
""சாற்றுபெருங் குலமகனே! குணநிதியே!
சிவசமயா! தமிழ்க் கோமானே!
ஆற்றுபெரு நூற்கடலே! அமைந்தபெரு
வாய்மையனே! ஆண்மை வேளே!
நோற்றுவரு தமிழ்நாட்டின் பெரும்பேறே!
மனைமக்கள் நுவலக் கூடிச்
சாற்றுதிருப் பூரணலிங் கக்கோவே!
வாழிநீ தரணி நின்றே!''
என்பது. பல்லாற்றானும் புகழ்படைத்த பூர்ணலிங்கம் பிள்ளையின் எழுத்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டும், இதுவரை காலவரிசைப்படுத்தப்பட்ட நிலையில் பதிப்பு ஒன்று கொண்டுவராதது நம்மின் பேரிழப்பே! அப்பணி முழுமையாயின் தமிழ் ஆய்வின் பல் பரிமாணங்கள் அறிய வரும். வரவிருக்கும் அவரது பிறந்த நாளில் (24.5.14) தமிழறிஞரான அவரை நினைவுகூர்வதுதான் தமிழர்கள் அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...