அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சொல் தேடல் - 2

படைப்பாளர்கள் கற்பனைச் செல்வம் மிகுதியாக உடையவர்கள். அவர்கள் குடிசையில் வாழ்ந்தாலும் தங்கள் கற்பனையால் வளமனைகளை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள். பண்டைய கவிஞர்களும் இன்றைய படைப்பாளிகளும் கற்பனை நாட்டையும் சமுதாயத்தையும் தங்கள் படைப்புகளில் கண்டுள்ளனர்.

Updated On :4 ஏப்ரல் 2015, 8:00 pm

படைப்பாளர்கள் கற்பனைச் செல்வம் மிகுதியாக உடையவர்கள். அவர்கள் குடிசையில் வாழ்ந்தாலும் தங்கள் கற்பனையால் வளமனைகளை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள். பண்டைய கவிஞர்களும் இன்றைய படைப்பாளிகளும் கற்பனை நாட்டையும் சமுதாயத்தையும் தங்கள் படைப்புகளில் கண்டுள்ளனர்.

தமிழ்க் காப்பியங்கள் சித்திரிக்கும் நாட்டுவளம் பெரிதும் கவிஞர்களின் கற்பனையில் பிறந்தது ஆகும். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு கம்பரின் கோசலம் பற்றிய புனைவு.

அங்கு வறுமையின்மையால் வள்ளன்மைக்கு வாய்ப்பு இல்லையாம்; போருக்கு வருவோர் இன்மையால் வீரத்திற்குப் பெருமை இல்லையாம்; பொய் பேசுவோர் இன்மையால் வாய்மைக்குச் சிறப்பு இல்லையாம்; அனைவரும் பல்வகைக் கேள்விகளில் சிறந்து விளங்குவதால் அறிவுநுட்பத்திற்கு மதிப்பு இல்லையாம். இப்படி எல்லாரும் எல்லா வளமும் பெற்று மகிழ்வுடன் வாழும் ஒரு நாடு எக்காலத்திலாவது இருத்தற்கு வாய்ப்பு உண்டா? இது கம்பர் கற்பனையில் கண்ட நாடு. 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந்தகை மு.வ.வின் "கி.பி. 2000' என்னும் நூலில் காணும் சமுதாயமும் இவ்வகையினைச் சார்ந்ததே.

உடோப்பியா (Utopia) என்னும் சொல்லை உருவாக்கியவர் எழுத்தாளர் தாமஸ் மூர் (Thomas More) ஆவார். அவர் அப்பெயரிலேயே நூல் ஒன்றைப் படைத்தார். அவர் கற்பனையில் படைத்த நாட்டுக்கு உடோப்பியா என்று பெயர் அமைந்ததையொட்டி, ஆங்கிலத்தில் இப்படிப் படைப்பாளர்கள் கனவு காணும் நல்ல நாட்டையெல்லாம் உடோப்பியா என்று குறிக்கும் வழக்கம் உண்டாயிற்று.

கம்பர் நல்லியல்புகள் கொண்ட நாட்டினை, "இசைகெழு வேந்தன் காக்கப் பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம்' (50) என்கிறார். சூடாமணி, சேந்தன் திவாகரம் ஆகிய நிகண்டுகள் இன்பம் நிறைந்த சொர்க்கத்தை உயர்நிலை என்று குறிக்கின்றன. பாரதியார் இனிய பாரதத்தை, மணித் திருநாடு என்கிறார். இவற்றையொட்டிப் படைப்பாளிகள் தீட்டும் உடோப்பியாவைத் தெய்வப் பூதலம், உயர்நிலை நாடு, மணித் திருநாடு என்பவற்றுள் ஏதேனும் ஒன்றால் குறிக்கலாம். தெய்வப் பூதலம் வடசொல்; உயர்நிலை நாடு இளைத்துப்போன சொல்; மணித் திருநாடு கவிதை கொஞ்சும் சொல். ஆதலின், நன்மைகள் நிறைந்த உடோப்பியாவை மணித் திருநாடு என்று குறிக்கலாம்.

இதற்கு மாறான தீமைகள் மலிந்த நாட்டையும் சமுதாயத்தையும் படைப்பாளர்கள் எழுதிக்காட்டுவதும் உண்டு. அந்நாட்டில் வறுமை தாண்டவமாடும்; மக்கள் தாழ்வுற்றுத் துயரத்தில் உழல்வார்கள்; அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் நலிவுறுவார்கள்; அச்சத்திலேயே உறைந்திருப்பார்கள்; நோயால் துன்புறுவார்கள்; பெருந்தொகையில் குறுகிய இடத்தில் பட்டிமாடுகள் போல் அடைந்துகிடப்பார்கள். ஆங்கிலத்தில் இத்தகைய புதினங்கள் பல உருவாகியுள்ளன. ஹெலன் ஸ்மித் (Helen Smith) எழுதிய "தி மிர்ரகிள் இன்ஸ்பெக்டர்' (The Miracle Inspector), ஆல்டஸ் ஹக்ஸிலி (Aldous Huxley) எழுதிய "பிரேவ் நியூ வேல்டு' (Brave New World) போன்றவற்றை இவ்வகைப் புதினங்கள் என்பர்.

இத்தகைய நாட்டினையோ, இனத்தினையோ குறிப்பதற்கு ஜே.எஸ்.மில் (J.S.Mill) சற்றொப்ப நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய சொல்லே Dystopia என்பது. அவர் 1896-ஆம் ஆண்டு நிகழ்த்திய நாடாளுமன்ற உரையில் இச்சொல் இடம்பெற்றது. தீமையைக் குறிக்கும் டைஸ் (Dys) என்னும் கிரேக்கச் சொல்லையும் உடோப்பியா (Utopia) என்னும் ஆங்கிலச் சொல்லையும் இணைத்து உருவாக்கப்பட்ட ஒட்டுச்சொல் அது. உடோப்பியாவுக்கு எதிர்ச்சொல் டைஸ்டோப்பியா.

இச்சொல்லுக்குரிய தமிழாக்கமாகக் கீழ்க்காணும் சொற்களை ஆழ்ந்து சிந்தித்துச் சிலர் தெரிவித்துள்ளனர்.

  • மீக்கொடுமை உலகம் - சோ. முத்துமாணிக்கம்
  • ஏற்க இயலாச் சமுதாய அமைப்பு - பா. இரா. இராச அம்சன்
  • வாழ்வெதிர்வு, முரணுலகு - கோ. மன்றவாணன்
  • கற்பனை அளறு - என். ஆர். ஸத்யமூர்த்தி

இவற்றுள் கற்பனை அளறு நல்ல தமிழாக்கம்; ஆனால், அளறு நரகத்தை உணர்த்தி, ஆகுபெயராய் அதுபோன்ற நாட்டைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். கோ. மன்றவாணன் குறித்துள்ள முரணுலகு என்பது எளிமையாகவும் பொருளை உணர்த்தும் வகையிலும் அமைந்துள்ளது. நன்மைகள் நிறைந்த உடோப்பியாவை மணித் திருநாடு என்றால், புன்மைகள் மலிந்த டைஸ்டோப்பியாவைப் பிணி மிகு நாடு என்றோ, முரணுலகு என்றோ குறிக்கலாம்.

Dystopia - பிணி மிகு நாடு அல்லது முரணுலகு.

அடுத்த வாரத்திற்குரிய சொல் - Jumper

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.