மக்கள் வாழ்க்கை முறைக்கும் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழர்கள் மலர்களோடு நெருங்கிய உறவு உடையவர்கள். ஆங்கிலத்தில் மலரைக் குறிக்க, அரும்பு, மலர் (bud, flower) என்று இரு சொற்களே இருக்கின்றன. ஆனால், தமிழில் அதன் வெவ்வேறு பருவத்தைக் காட்டும் வகையில், முகை, அரும்பு, போது, பூ, மலர், வீ, வாடல் என்று பல சொற்கள் அமைந்துள்ளன. இது பழக்கத்தால் உண்டான தாக்கம். பயன்பாட்டில் இருக்கும் பொருளுக்கே பல சொற்கள் தோன்றும்.
ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை இருத்தல் வேண்டும் என்னும் நல்ல திட்டத்தைத் தீட்டி அரசாங்கம் பாராட்டுக்குரிய பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதோடு, பெண்கள் இடர்ப்படாமல் மேன்மையோடு வாழ்வதற்கும் வழிவகுக்கிறது. அது சரி, இத்தனை காலமாக ஏன் வீடுகளில் குளியலறையும் கழிப்பறையும் இல்லை?
இந்திய மக்கள் பெரும்பாலும் அருவி, ஆறு, குளம், கேணி, கடல் ஆகியவற்றில் குளிப்பதும் திறந்த வெளிகளில் காலைக் கடன்களைக் கழிப்பதுமே அண்மைக்காலம் வரை வழக்கமாய் இருந்துள்ளன. கபிலர் பாடியுள்ள குறிஞ்சிப்பாட்டில், தலைமகளின் களவு வாழ்க்கையைத் தோழி அன்னைக்கு அறிவித்து அறத்தொடு நிற்கும்போது, தானும் தலைமகளும் வெண்மையான துகில் போன்ற அருவியில் ஆடியும், பளிங்கு போன்ற சுனையில் மூழ்கியும் மகிழ்ந்தபின் 99 மலர்களைப் பறித்துத் தழையுடை புனைந்துகொண்டு அசோக மரத்தின் நிழலில் இருந்தபோது தலைமகனைச் சந்தித்ததாகத் தெரிவிக்கிறாள்.
தொடித்தலை விழுத்தண்டியார் என்னும் சங்ககாலப் புலவர் தடியூன்றி நடக்கும் தள்ளாத காலத்தில், சூதுவாது தெரியாத சிறுவர் சிறுமியரோடு நெடிய குளத்தில் "துடும்' எனப் பாய்ந்து மணற்கொண்ட இளமைக் காலத்தை நினைவுகூர்ந்து இரங்குகிறார் (புறம்243).
மாணிக்கவாசகர் திருவெம்பாவையில், பாவை நோன்பு நோற்கும் பெண்கள் பொய்கையில் நீராடுவதாகக் குறித்துள்ளார். ஆண்டாள் நாச்சியார், ஆயர்பாடிப் பெண்கள் யமுனையில் நீராடியபோது அவர்கள் ஆடைகளைக் கண்ணன் கவர்ந்துகொண்டு மரத்தின் மேல் இருக்க, அப்பெண்கள் அவனிடம் அவற்றைத் தருமாறு இரந்து நிற்பதைப் பாடியுள்ளார்.
திருநாவுக்கரசர், எங்கும் ஈசனைக் காணலாம் என்னும் தெளிவில்லாதவர்கள் ""ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடுவதால் என்ன பயன் உண்டாகப் போகிறது'' என்று வினவுகிறார். இவையெல்லாம் நீர் நிலைகளில் தமிழர்கள் நீராடும் வழக்கம் உடையவர்கள் என்பதனைத் தெளிவாக்குகின்றன. கொல்லைக்குப் போகிறேன், வெளிக்குப் போகிறேன் என்னும் இடக்கரடக்கல் மொழிகள் வீடுகளில் கழிப்பறை இல்லாத காலத்தினைக் காட்டுகின்றன.
மேலைநாட்டு நாகரிகம் நம் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குளியலறையும் கழிப்பறையும் கொண்ட வீடுகள் தோன்றலாயின. முதலில் புழைக்கடை மூலையில் கழிப்பறைகளைக் கட்டத் தொடங்கினோம். இப்பொழுது வீட்டிற்குள்ளேயே குளியல் கழிப்பறைகளோடு கூடிய படுக்கையறைகள் அமைந்திருக்கின்றன. கொத்தனாரும் தச்சருமே வீட்டைக் கட்டிய நிலைமாறி, மின்சார விளக்குகள் அமைப்பதற்கு மின்வினைஞரும் (எலக்டிரீஷியன்) குழாய்களை இணைத்து நீர் வசதி செய்து தருவதற்கு அத்தொழிலில் வல்லவரும் தேவைப்படுகின்றனர். குளியலறை கழிப்பறைகளை அமைப்பதற்கு உதவுபவரை "பிளம்பர்' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர்.
"பிளம்பர்' என்னும் சொல் ரோமப் பேரரசு காலத்திலேயே வழங்கியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஈயத்தைக் குறிக்கும் இலத்தீன் மொழிச் சொல் பிளம்பம் (plumbum) என்பது. அக்காலத்தில் நீர்க்குழாய்களும், குளியலறைக் கலன்களும் ஈயத்தால் செய்யப்பட்டன. அதனால் ஈயத்தால் ஆகிய குழாய்களைக் கொண்டு நீர்ப்பாதைகளை அமைத்தவரைப் பிளம்பர் என்று குறித்தனர். பின்னர் ஈயத்தொழில் செய்பவர் அனைவரும் அச்சொல்லால் குறிக்கப்பட்டனர். தமிழில் ஈயவேலை செய்பவரைக் "கன்னார்' என்று குறிப்பர். இப்பொழுது இரும்பு, நெகிழி ஆகியவற்றால் ஆகிய குழாய்களும், பீங்கானால் ஆகிய தொட்டிகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆதலின், அச்சொல் ஈயத்தொழில் செய்வோரைக் குறிக்கும் நிலைமாறி நீர்க்குழாய்களை அமைப்பவர்களைக் குறிப்பதாய் அமைந்தது.
"பிளம்பர்' என்பதைத் தமிழில் சந்திரா மனோகரன் "ஈயக் கம்மியர்' என்றும், ஸத்யமூர்த்தி, இரா. மோகனரங்கம், எழில் சோம. பொன்னுசாமி போன்றோர் "குழாய்க் கம்மியர்' என்றும், டி.வி. கிருஷ்ணசாமி, ச. கிருஷ்ணசாமி, ப.இரா. இராசஅம்சன், கோ. மன்றவாணன், வெ. ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் முறையே குழாய் சரிசெய்பவர், நீர்க்குழாய் இணைப்பாளர், குழாய் நேர்த்தியர், குழாய் வினைஞர், குழாய்ப் பணியாளர் என்றும் குறிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ராஜசிம்மன் "குழாய்கள் தொட்டிகள் சீர்செய்வர்' என்று மொழியாக்கம் செய்யலாம் என்கிறார்.
"குழாய்ப் பணியாளர்' என்பது குழாய்களை மட்டும் அமைப்பதைக் குறிப்பது; "கம்மியர்' என்பது உலோகத்தொழில் செய்பவரை மட்டும் குறிப்பது; ராஜசிம்மன் தெரிவித்துள்ளது போல் குழாய் அமைப்பவர்கள் குழாய்களை இணைப்பதோடு, கழிவுநீர் விழுகிற தொட்டி போன்றவற்றையும் கட்டுகிறார்கள். அவர்கள் வேலையில் கொத்தனார் வேலையும் விரவியுள்ளது. ஆதலின், அவர்களைக் "குழாய்க் கொற்றர்' என்று குறிக்கலாம். "கொற்றர்' என்பதன் மரூஉ மொழியே கொத்தர்.
plumber - குழாய்க் கொற்றர்
அடுத்த வாரத்திற்குரிய சொல் - Travelator
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

