ஒவ்வொரு நாளும் வாழ்க்கை வசதி பெருகிக்கொண்டே இருக்கிறது. மனிதன் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை அடையத் தன் கால்களையே நம்பிக்கொண்டிருந்தான். காலவோட்டத்தில் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. கழுதை, மாடு, குதிரை போன்ற விலங்குகள் பூட்டப்பட்ட வண்டியைப் பயன்படுத்தினான். பின்னர் மிதிவண்டி, மகிழுந்து, தொடர்வண்டி, கப்பல் என்று புதுப்புதுப் போக்குவரத்துச்
சாதனங்களுக்கு மாறிப் பயணம் தொடர்ந்தான். வானூர்தி கண்டபின் தூரத்தையும் காலத்தையும் ஓரளவு வென்றது போன்ற உணர்வை அடைந்தான்.
வானூர்தி ஒரு காலத்தில் பெருந்தலைவர்களும் பெருஞ்செல்வர்களும் மட்டுமே பயணம் செய்யும் வாகனமாக இருந்தது. "புரட்சிக் கவிஞர்' பாரதிதாசனார்க்கு வானூர்தியில் பயணம் செய்ய வேண்டும் என்னும் விருப்பம் இருந்ததாகவும் அது நிறைவேறாமல் போய்விட்டதாகவும் அது நிகழ்ந்திருந்தால் வானூர்திப் பயணம் குறித்து ஒரு நல்ல தமிழ்க் கவிதை கிடைத்திருக்கும் என்றும் "சிலம்பொலி' செல்லப்பனார் குறிப்பிடுவார். இன்று நடுத்தர குடும்பத்தவர்களும் வானூர்தியில் பயணம் செய்கிறார்கள். இது நாடு பெற்றுள்ள வளர்ச்சியின் அடையாளம்.
வானூர்தி நிலையங்களில்தான் எத்தனை வசதிகள்! பொருள்களை வைத்துத் தள்ளிச்செல்லத் தள்ளுவண்டிகள்! குளிர்காற்று தவழும் விரிந்த அழகிய கூடம்! தூய்மையான ஒப்பனை அறைகள்! மேலே செல்வதற்கு மின்தூக்கிகள்! மின்சாரத்தால் மேலும் கீழும் செல்லும் படிகள்! இப்படிப்பட்ட வசதிகளைப் பெரும்பாலும் எல்லா விமான நிலையங்களிலும் காணலாம். பன்னாட்டு விமான நிலையங்களில் இன்னும் கூடுதல் வசதிகள் காணப்படும். அவற்றுள் ஒன்று, ஏறி நின்றால் நகர்ந்து செல்லும் பாதை. சில விமான நிலையங்களில் விமானத்தில் ஏறுவதற்குச் செல்லும் வாயில்களும், விமானத்திலிருந்து இறங்கி வெளியே செல்லும் வாயில்களும் தொலைவில் இருக்கும். அத்தகைய இடங்களில் மின்சாரத்தால் இயங்கும் பாதைகள் அமைத்திருக்கிறார்கள். நம் நாட்டில் புது தில்லியில் இத்தகைய வசதி இருக்கிறது. சிங்கப்பூர், அமெரிக்கா முதலிய நாடுகளிலும் இத்தகைய வசதிகள் இருக்கின்றன.
இஃது அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வசதி. இதனைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல் இன்னும் ஆங்கில அகரமுதலிகளில் ஏறவில்லை. அந்தச் சொல்தான் Travelator (டிராவலேட்டர்) என்பது. Travel, Escalator (டிராவல், எஸ்கலேட்டர்) என்னும் இருசொற்களின் இணைப்பில் பிறந்த குழந்தை இது. இதனை Walkalator (வாக்கலேட்டர்) என்றும் கூறுவர்.
லிப்ட், எஸ்கலேட்டர், டிராவலேட்டர் ஆகிய மூன்றும் செய்யும் தொழில் ஒன்றே. அவை தம்மீது ஏறி நிற்பவரை மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்கின்றன. மூன்றும் மின்னாற்றலால் செயற்படுகின்றன. "லிப்ட்' கூண்டு வடிவில் இருப்பது; கீழே இருப்பவரை மேலேயும், மேலே இருப்பவரைக் கீழேயும் தூக்கிச்செல்கிறது. "எஸ்கலேட்டர்' படிகள் கொண்டது; ஏறி நிற்பவரைக் கீழிருந்து மேலேயும் மேலிருந்து கீழேயும் நகர்த்திச் செல்கிறது. "டிராவலேட்டர்' தரையோடு தரையாய்ப் பாய்போல் கிடப்பது; தன்மீது ஏறி நிற்பவரை அதே பகுதியில் சிறிது தொலைவில் உள்ள இடத்திற்கு நகர்த்திச் செல்கிறது.
ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு நகர்த்திச் செல்வது எஸ்கலேட்டர். ஒரே தளத்தில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகர்த்திச் செல்வது டிராவலேட்டர். இந்த வேறுபாட்டினை உணர்ந்து, நான்கு பேர் தக்க சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர்:
சந்திரா மனோகரன்-தானியங்கு பாதை, தானியங்கு அமைவு.
கோ. மன்றவாணன்-நகர்பாதை, நடை நகர்வு, தாங்கிச்செல்லி.
சோ. முத்துமாணிக்கம்-நகர் நடை பாதை.
என். ஆர். ஸத்யமூர்த்தி-நகர் அதர், நகர் பாதை, நகர் தடம்.
இவற்றில் "நகர்அதர்' நல்ல இலக்கிய நயம் செறிந்தது. ""ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்'' என்னும் குறளை நினைவூட்டுவது. "தானியங்கு அமைவு' தரமான மொழியாக்கம்; "நகர்பாதை' எளிமையானது. சிலர், Lift என்பதனை மின்தூக்கி என்றும், Escalator என்பதனை மின் ஏணி என்றும் குறிக்கின்றனர். நகர் என்பதனைப் பொது இயல்பாகக் கொண்டு, Lift, Escalator, Travelator மூன்றினையும் முறையே நகர்கூண்டு, நகர்படி, நகர்பாதை என்று குறிக்கலாம்.
Travelator - நகர்பாதை
அடுத்த வாரத்திற்குரிய சொல் - Blackmail
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

