அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சொல் தேடல் -21

"நான்மறை கற்றவனா ஞானி? தன்னுள், "நான்' மறையக் கற்றவனே ஞானியாவான்' என்பது கவிஞாயிறு தாராபாரதியின் சாகாக் கவிதை. ஒவ்வொருவர் உள்ளத்திலும் "நான்' என்னும் உணர்வு

Updated On :15 ஆகஸ்ட் 2015, 7:32 pm

"நான்மறை கற்றவனா ஞானி? தன்னுள், "நான்' மறையக் கற்றவனே ஞானியாவான்' என்பது கவிஞாயிறு தாராபாரதியின் சாகாக் கவிதை. ஒவ்வொருவர் உள்ளத்திலும் "நான்' என்னும் உணர்வு இருக்கிறது. எந்த ஆசிரியரும் பலமுறை எழுதும்படி பணிக்காமலேயே நாம் பல்லாயிரம் முறை எழுதிப்பார்த்திருக்கும் ஒருசொல் உண்டென்றால் அது நம் பெயரைத் தவிர வேறு எது? கதவைத் திறக்கும்படி தட்டினால் உள்ளே இருந்து வரும் "யார்' என்னும் வினாவுக்கு "நான்தான், கதவைத் திற' என்பதற்கு வேறாக விடையிறுத்தவர் உண்டா? சுற்றுலாத் தலங்களிலும், கோயிற்சுவர்களிலும் எத்தனையோ பேர் தங்கள் பெயர்களைக் கரியாலும் ஆணியாலும் கிறுக்கி வைத்துச் சென்றிருப்பதைப் பார்க்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்ன? "நான்' என்னும் உணர்வே. தன் பெயர் நிற்க வேண்டும் என்னும் வேணவாவே.

இவ்வுணர்வே மனிதனை இயக்கும் ஆற்றல். "நான் கற்றவன்' என்னும் நினைப்பு நம்பிக்கையில் பிறப்பது; "நானே கற்றவன்' என்னும் வீராப்பு செருக்கில் விளைவது. "என்னால் முடியும்' என்பது தன்னம்பிக்கைப் பேச்சு; "என்னாலேயே முடியும்' என்பது தருக்குப் பேச்சு. தன்னைப் பற்றிய நினைப்பு வரம்பு மீறும்போது கேடாய் விடிகிறது. பெரும்பாலான மண முறிவுகளுக்கும் சண்டைகளுக்கும் பெரும்போர்களுக்கும் "நானா, நீயா, யார் பெரியவர்' என்னும் போட்டியே வித்தாக அமைகிறது.

"நான்' என்பது "அடியேன்' என்று மாறினால் அவன் இறையன்பனாகிறான்; இளகி "நாம்' என்று விரிந்தால், அவன் மக்கள் தொண்டனாகிறான்; இறுகி "நானே' என்று தடித்தால், அவன் இரக்கமற்ற அரக்கனாகிறான். போரில் பல்லாயிரம் வீரர்கள், படைத்தலைவர்கள், தம்பி கும்பகருணன், மைந்தன் அதிகாயன் ஆகியோரை இழந்த பின்பும் சீதை மீது கொண்ட ஆசையை விட்டுவிடும்படி வேண்டிய இந்திரசித்தனிடம், "என்னையே நோக்கி இந்நெடும்படை தேடிக்கொண்டேன்' என்றும், "இருபது திண்தோள் உண்டால்' என்றும் ஆர்ப்பரித்து அவனை இகழ்ந்து பேசுகிறானே இராவணன், அதுதான் அவனது அகங்காரத்தின் உச்சம். இதனால்தான், "மெளனகுரு' வணக்கத்தில் அகங்காரத்தை "இராவணாகாரம்' என்கிறார் தாயுமானவர். அகங்காரத்தில் அவனையும் விஞ்சியவன் ஆளரியாக எதிரே நின்ற ஆண்டவனையே போருக்கு அழைத்து அழிந்த இரணியன்.

இந்த "நான்' என்னும் உணர்வைக் குறிக்கும் சொல்தான் Ego. இதற்கு elf conceit என்பதோடுelf Esteem  என்னும் பொருளும் உள்ளது. ஆதலின், செருக்கை மட்டும் சுட்டும் அகங்காரம், அகம்பாவம் அகந்தை, கர்வம் என்னும் வடசொற்கள் இதன் முழுப்பொருளைக் காட்டுவன அல்ல. டி.வி. கிருஷ்ணசாமி, வெ. ஆனந்தகிருஷ்ணன், மு.கா. தமிழ்ச்செல்வன், சோ.முத்து மாணிக்கம், ப.கோபி. பச்சமுத்து, அ.கருப்பையா, அறிவுத் தொகையன் உள்ளிட்ட நண்பர்கள் எல்லோரும் "தன்முனைப்பு' என்னும் சொல்லைத் தந்திருக்கிறார்கள். இவர்கள் தவிர, கா.மு. சிதம்பரம் "தான்மிகை' என்பதையும் க. அன்பழகன் "தன்மிகுதி' என்பதையும் தந்துள்ளனர்.

என். ஆர். ஸத்யமூர்த்தியும், மன்றவாணனும் குறித்திருந்த சொற்களில் இடம்பெற்றிருந்த ஒரு சொல்லைக் கண்டபோது வியப்பும் மகிழ்ச்சியும் மேலிட்டன. 2002ஆம் ஆண்டு வெளிவந்த கற்பக மலர்கள் (முதல் தொகுதி) என்னும் நூலில், ""ஒருவனுடைய "நான்' என்னும் உணர்வு மென்மையாக வருடித் தட்டிக் கொடுக்கப்படும் போது அவன் அன்பால் இளகிக் குழைந்து விடுகிறான். இந்த மாயத்தைச் செய்யும் மணிவார்த்தையே இன்சொல். ஒருவனுடைய "தான்மை' (Ego) தாக்கிக் காயப்படுத்தப்படும்போது ஆத்திரத்தால் புழுங்கிக் குமைகிறான். இந்த விகாரத்தை விளைக்கும் பிணிவார்த்தையே வன்சொல்'' (பக்.40) என்று உஞ்ர் வைத் "தான்மை' என்று தமிழ்ப்படுத்தியிருந்தேன். அவ்விருவரும் யான்மை, நான்மை போன்ற சொற்களோடு தான்மை என்னும் சொல்லையும் பரிந்துரைத்திருந்தார்கள். மூவர் சிந்தையும் ஒரே அலைவரிசையில் வியப்பும் மகிழ்ச்சியும் உண்டாகாமல் இருக்குமா?

நண்பர்கள் எல்லோரும் குறித்துள்ள தன்முனைப்பு என்பது தகுந்த சொல்லே ஆயினும் செருக்கின் முழுவீச்சினை உணர்த்துவதாக அமையவில்லை. அச்சொல் பெண் ஏற்ற ஆண்வேடம் போல் இருக்கிறது. ""அவனுக்குத் தான் என்னும் ஆங்காரம்'' என்பது நாட்டுப்புறப் பேச்சுவழக்கு. அதனையொட்டித் "தான்' என்னும் தன்மையைத் தான்மை என்னும் புதுச்சொல்லால் குறிக்கலாம். இச்சொல் தன்னைப் பற்றிய பெருமித எண்ணத்தையும், எல்லை கடந்த செருக்கினையும் குறிப்பதாக அமையும். "தா' என்னும் நெடில் செருக்கினை ஒலியால் உணர்த்தி, ஓங்கி நிற்பதைச் சொல்லிப்பார்த்து உணரலாம். இதனால், Ego வைக் குறிக்கத் தான்மை என்பதைத் தக்க சொல்லாகக் கொள்ளலாம். இச்சொல் முதலில் என் சிந்தனையில் பிறந்தது எனினும் என்.ஆர். ஸத்யமூர்த்தி, மன்றவாணன் இருவரின் அரவணைப்பால் வலிமையடைகிறது.

உஞ்ர் - தான்மை அல்லது தன்முனைப்பு

அடுத்த வாரத்திற்குரிய சொல் :  Voyeurism  ( வயோரிஸம் )

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.