""இன்பம் என்பது எல்லா உயிர்களுக்கும் தாமே மனம் பொருந்தி வரும் விருப்பம்'' என்கிறது தொல்காப்பியம். காமவுணர்ச்சி உயிர்ப்பொதுமை. பறவைகளும் விலங்குகளும் எந்தக் காம சூத்திரத்தைக் கற்றுப் பாற்கல்வி பெற்றன? அவற்றிற்கு அஃது இயல்பூக்கமாய் அமைந்திருக்கிறது. அதனாலேயே உயிர்க்கூட்டம் அழிந்தொழியாமல் தொடர்கிறது. "தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன் மங்கைபங்கனாய் இருப்பது ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதே வாழ்க்கை என்னும் உண்மையை உணர்த்துவதற்காகத்தான். அவ்வாறு அவன் இருந்து காட்டாவிட்டால் உலகம் துறவு நிலையில் சென்றுவிடும்' என்கிறார் மாணிக்கவாசகர்.
மனித வாழ்க்கை இன்ப நுகர்ச்சியோடு முடிந்து விடுவதில்லை. ஒருவன் வாழ்வு மனைவி, மக்கள் என்று குடும்பமாக விரிந்து அவர்களோடு கூடி அறச் செயல்கள் புரிவதில் நிறைவடைய வேண்டும். அப்பொழுதுதான் அவன் மண் பயனுறப் புகழ் வாழ்வு வாழ்ந்தவனாவான்.
காமம் வாழ்க்கையின் ஒரு பகுதி; காமமே வாழ்க்கையன்று. அளவான காமம் இனிது; எல்லை கடந்த காமம் தீது. அளவான காமம் வாழ்விக்கும் அமுதம்; அளவுகடந்த காமம் அழிக்கும் ஆலகாலம். முன்னது மணக்கும் பொதிகைச் சந்தனம். பின்னது நாறும் கூவச் சகதி. ஒருசிலர் எப்போதும் காமச் சேற்றிலேயே உழல்கின்றனர். அவர்களுக்குத் தங்கள் வீட்டில் கிடைக்கும் "இரவு விருந்'தால் காமப்பசி அடங்குவதில்லை. சிலர் உணவுக் கடையில் "விலைச்சோறு' உண்ணுகின்றனர். சிலர் அண்டை அயலில் நயந்து "இராப்பிச்சை' கேட்டுக் கையேந்தி நிற்கின்றனர். அவர்களின் கண்கள் பெண்களின் அங்கங்களில் மேய்கின்றன. குளியல், ஒப்பனை, படுக்கை அறைகளை எட்டிப் பார்க்கின்றன. அவர்கள் அரைகுறை ஆடைகளோடும் ஆடையின்றியும் இருக்கும் பெண்களைத் திருட்டுத்தனமாய்ப் படம்பிடித்துக் கண்டு களிப்படைகின்றனர்.
இப்படி அத்துமீறிப் பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் வெறிச்செயல்கள் இந்தியத் தண்டனைச் சட்டப்படி, குற்றமாகும். முதன்முறை குற்றம் செய்தால் ஓராண்டுக்குக் குறையாமலும் மூன்றாண்டுகளுக்கு மிகாமலும், மறுமுறை குற்றம் செய்தால் மூன்றாண்டுகளுக்குக் குறையாமலும் ஏழாண்டுகளுக்கு மிகாமலும் சிறைத்தண்டனையும் ஒறுப்புத் தொகையும் விதிக்கப்படும் என்கிறது சட்டம். இந்தக் குற்றச் செயலைக் குறிக்கும் சொல்லே Voyeurism.
இதனைப் பொருந்தாக் காமம், பெருந்திணைக் காமம் என்னும் இலக்கண வழக்கால் குறிக்கலாம் என்கிறார் ப. இரா.இராச அம்சன். ஒருவன் காமம் குறித்து முழுமையாக அறியாத இளையோளிடம் கொள்ளும் ஒருதலை அன்பு கைக்கிளை. இளமை கழிந்தவளிடம் கொள்ளும் பொருந்தாக் காதல் பெருந்திணை. கைக்கிளை ஒருதலை ராகம். பெருந்திணை அபூர்வ ராகம். கலித்தொகையில் கைக்கிளை, பெருந்திணைப் பாடல்கள் உண்டு. ஆனால் Voyeurism. அன்பின் வெளிப்பாடன்று. அஃது அறமற்ற கயமைச் செயல். அவர் குறித்துள்ளது போல் இகழ் காமத் தேடலே. ஆதலின், இச்சொற்கள் அதனை நேரடியாகக் குறிப்பனவாக அமையவில்லை.
மன்றவாணன் குறித்துள்ள பாலின்பப் பார்வை, பாலுணர்வுப் பார்வை, கலவிகாண் இன்பம் ஆகியவற்றுள் இறுதிச் சொல்லாக்கம் சிறப்பானது. நாடுகாண் காதை, காடுகாண் காதை என்பவை போல் அமைந்துள்ளது. ஆயினும் பாதிப்பொருளையே உணர்த்துவதாக உள்ளது. என். ஆர். ஸத்யமூர்த்தி குறித்துள்ள படிற்று நோக்கு, மறை நோக்கு என்பவையும் அத்தகையனவே. அவற்றில் காமக் குறிப்பு இல்லை. படிறு என்பது நல்ல இலக்கியச் சொல். கா.மு. சிதம்பரமும், "படிற்றுப் பார்வை இயல்பு' என்பதனைத் தந்துள்ளார். "வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்' என்பது குறள் தொடர். அதனை உள்ளடக்கி முழுப்பொருளையும் காட்டும் வகையில் "காமப் படிற்றொழுக்கம்' என்னும் சொல்லை உருவாக்கலாம்.
கா.மு. சிதம்பரம் மறையறி அவா இயல்பு, ஒளிவுகாண் ஊக்க இயல்பு, நக்க நாட்ட இயல்பு என்று நல்ல தமிழாக்கங்களைத் தந்துள்ளார். இவற்றில் உள்ள இயல்பு என்பதனை விடுத்து மறையறி அவா, ஒளிவுகாண் ஊக்கம், நக்க நாட்டம் என்று குறிக்கலாம். சிவபெருமான் பிச்சைத் தேவராய் ஆடையின்றி இரந்து சென்றதை, "நக்கம் ஏகுவர்' என்றும், "நக்கம் வந்து பலியிடு என்றார்க்கு இட்ட, மிக்க தையலை வெல்வளை கொள்வது' என்றும் தேவாரம் குறிக்கிறது. அவனுக்கு நக்கன் என்னும் பெயரும் உண்டு. நக்கம் ஆடையற்ற நிலையையும், நாட்டம் பார்வை, விருப்பம் இரண்டனையும் குறிக்கும் சொற்கள். எனவே, பெண்களின் ஆடையற்ற உடலைப் பார்க்கின்ற செயலையும் அதில் கொள்ளும் விருப்பத்தையும் குறிப்பதற்கு ஏற்ற சொல் நக்க நாட்டம் எனலாம்.
அடுத்த வாரத்திற்குரிய சொல் :
தொலைக்காட்சி முதலியவற்றை இயக்கும் கருவியைக் குறிக்கும் (ரிமோட்) தங்ம்ர்ற்ங்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

