ஒரு மரத்தின் அத்தனை கிளைகளும் அதன் உச்சிக்கிளைகளாகவோ, நடுக்கிளைகளாகவோ, கீழ்க்கிளைகளாகவோ இருப்பதில்லை. சில உச்சியிலும் சில நடுவிலும் சில கீழும் இருக்கின்றன. அதுபோலத்தான் ஒரு சமுதாயத்தால் எல்லா மக்களும் மேட்டுக் குடிகளாகவோ, நடுத்தரக் குடிகளாகவோ, வறியவர்களாகவோ இருப்பதில்லை. சிலர் செல்வர்கள்; பலர் நடுத்தர மக்கள்; மிகப்பலர் ஏழைகள் - இதுவே சமுதாய அமைப்பு.
ஏழைகள் கிடைக்கும் குறைந்த வருவாயில் குடும்பம் நடத்துபவர்கள். அவர்களால் பிறர்க்குக் காசு பணம் கொடுத்து உதவி செய்ய முடியாது. உடலுழைப்பை வேண்டுமானால் தரமுடியும். நடுத்தர மக்களால் ஓரளவு அடுத்தவர்களுக்குப் பொருளுதவி செய்ய முடியும். அவர்களால் தங்களுக்கு மிஞ்சியதைத்தான் தானமாகச் செய்ய முடியும். பெருஞ்செல்வர்களாலேயே மிகுந்த பொருளுதவி செய்ய முடியும். அதனால்தான் பாரதியார் "நிதி யில்லாதவரிடம்
வாய்ச்சொல்லும் நிதி மிகுந்தவரிடம் பொற்குவையும்' தருமாறு வேண்டினார்.
செல்வர்களில் சிலர் அறச்சிந்தனை உடையவர்களாக இருப்பர். அவர்கள் கல்விச்சாலை ஏற்படுத்தல், ஆலயம் கட்டுதல், அன்ன சத்திரம் அமைத்தல் போன்ற தொண்டுகளில் தாமே முனைந்து ஈடுபடுவார்கள். கொடை நற்குடிப் பிறந்தவர் குணம். அவர்கள் எந்த எதிர்பார்ப்பையும் கருதித் தொண்டு செய்வதில்லை. அடுத்தவர்
கண்ணீரைத் துடைப்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. அவர்களே வள்ளல்கள்.
வேறு சிலர் நவநாகரிகக் கூட்டத்தில் நன்கு அறியப்படும் செல்வராக இருப்பர். அவர்கள் தங்கள் செல்வத் தகுதியைக் காத்துக்கொள்வதற்காகவும் சமுதாயத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் பணத்தைத் தாராளமாகச் செலவிடுவர். பெரும்பதவியில் இருப்பவர்களோடு தொடர்பு வைத்திருப்பர். அவ்வப்பொழுது செல்வர்களுக்கும் பதவியில் இருப்பவர்களுக்கும் பெரு விருந்தளித்து மகிழ்விப்பர். மற்றச் செல்வர்கள் அளிக்கும் விருந்துகளில் கலந்துகொண்டு மகிழ்வர். இசை, நாட்டியம் போன்ற கலைகளை ஆதரிப்பர். மழை, புயல் போன்ற பேரிடர்க் காலங்களில் நிதிதிரட்டுவது போன்ற பணியில் ஈடுபடுவர். இவர்களே Socialite.
மேலைநாடுகளில் தொடக்க காலத்தில் அரச குடும்பத்தையும் மேட்டுக்குடியையும் சேர்ந்த பெண்மணிகளே இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் கணவன்மார்களின் பதவியையும் புகழையும் காப்பதற்காகவே இவற்றில் ஆர்வங்காட்டினர். அவர்களுக்கு இப்படி நடப்பது கடமையாகவும் வாழ்வதற்குரிய வழியாகவும் அமைந்தது. காலவோட்டத்தில் செல்வம் பெருகப் பெருகப் பதவியையும் செல்வாக்கையும் பெற இத்தகைய வாழ்க்கை முறை துணைபுரியலாயிற்று.
அமெரிக்காவில் இத்தகையவர்களாக இருப்பதற்கு ஆண்டுக்கு தொண்ணூற்றெட்டாயிரம் டாலர் முதல் நாலரை லட்சம் டாலர் வரை செலவு செய்ய வேண்டியிருப்பதாகக் கூறுகின்றனர். இங்கிலாந்தில் இத்தொகை இன்னும் அதிகமாம். இவர்கள் செயலில் சிறிது தன்னலம் கலந்திருப்பதால் இவர்களை "வள்ளல்கள்' என்று பட்டஞ் சூட்டிப் பெருமைப்படுத்த இயலாது. இவர்கள் செயல்கள் பட்டங்களுக்கும் பெருமைக்கும் ஆசையால் போடும் அச்சாரமாக அமைகின்றன. இவர்களைக் குறிப்பதற்கு ஏற்ற சொல் என்ன?
Socialite என்னும் சொல்லுக்குரிய தமிழ்ச்சொற்களாக வாசகர்கள் குறித்துள்ள சொற்கள்:
* ஆசுகவி ஆராவமுதன் - தாதா.
*எஸ்.சுரேஷ் - பெருந்தனக்காரன், செல்வாக்குள்ளவன்.
* வெ.ஆனந்தகிருஷ்ணன் - தன்னார்வலர், சமூக சேவகர்.
*கா.மு.சிதம்பரம் - குடித்தோன்றல், குடிப்புரவலன்,
குடியோம்பி.
*என்.ஆர்.ஸத்யமூர்த்தி - பெரும்புள்ளி, மக்களியச் சீராளர்.
* ப.கோபி.பச்சமுத்து - நயநாகரிகள்.
* ப.இரா.இராசஅம்சன் - புதுமைச் சமுதாய உறுப்பினர்,
நயநாகரிகச் சமூகர், மேல்தட்டுக் குடிமகன்.
* சந்திரா மனோகரன் - மேனிலைத் தொடர்புடையோன்,
கூட்டுப் பொதுநல விரும்பி.
* கோ. மன்றவாணன் - நனிநாகரிகர், நயநாகரிகர், சமூக
மேன்மையர், உயர்வாணர்.
இவற்றுள் தாதா, பெருந்தனக்காரன் என்னும் சொற்கள் அவர்களின் தனித்தன்மையைக் காட்டுவனவாக அமையவில்லை. தன்னார்வலரும் சமூக சேவகரும் தன்னலங் கருதாத் தொண்டர்கள்; இவர்களினும் மேலானவர்கள். குடித்தோன்றல், குடிப்புரவலன், குடியோம்பி ஆகிய உயர்ந்த சொற்கள் இவர்களுக்கு அதிகப்படியானவை. பெரும்புள்ளி, நய நாகரிகர், புதுமைச் சமுதாய உறுப்பினர், மேனிலைத் தொடர்புடையோன் என்பவை இச்சொல்லின் பொருளை ஓரளவு உணர்த்துகின்றன. "உயர்வாணர்' என்பது நல்ல சொல். ஆனால், இவர்கள் உயர்வில் வாழ்பவர்களல்லர்; ஆடம்பரத்தில் வாழ்பவர்கள்; ஆடம்பரப் பிரியர்கள். ஆடம்பரம் வடசொல். அதற்கு நிகரான தமிழ்ச்சொல் ஆரவாரம். ஆதலின், இவர்களை ஆரவார வாணர் என்று குறிக்கலாம். அன்றேல், இன்று புறவளர்ச்சியை நாகரிகம் என்றும் அகவளர்ச்சியைப் பண்பாடு என்றும் வேறுபிரித்துக் குறிக்கின்றனர். அதனையொட்டி நாகரிகத்தை விரும்பிப் போற்றும் இவர்களை நாகரிக விரும்பிகள் எனலாம்.
Socialite - ஆரவார வாணர் (அ) நாகரிக விரும்பி
அடுத்த வாரத்திற்குரிய சொல்:Tunnel
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

