அன்றைய பதிப்புச் சூழலை படம்பிடிக்கும் ஆவணம்!
தமிழ் அறிஞர் வே.முத்துசாமி ஐயர், உ.வே.சாமிநாதையரின் சக மாணவருள் ஒருவர்.


தமிழ் அறிஞர் வே.முத்துசாமி ஐயர், உ.வே.சாமிநாதையரின் சக மாணவருள் ஒருவர். அவரைப் பற்றியும் அவர் எழுதிய நூல்களைப் பற்றியும், தினமணி கொண்டாட்டம் பகுதியில் (1.11.2009) ஏற்கெனவே பதிவு செய்துள்ளேன். அவர் எழுதிப் பிரசுரம் செய்த நான்கு நூல்கள் பற்றிய விவரம் தற்போது அவருடைய பெயரனும் என் நண்பருமான,
பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன் மூலம் கிடைத்தன. அவை குறித்த சுவாரசியமான தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
வே.முத்துசாமி ஐயர் பதிப்பித்த நூல்கள்:
1. தொல்காப்பியம் பொருளதிகார ஆராய்ச்சி - மதுரை தமிழ்ச்சங்க முத்ரா சாலைப் பதிப்பு. ஆண்டு 1914. ரூ.6 அணா.
2. இராமானுஜன் பிள்ளைத் தமிழ், (கணிதமேதை) ஆண்டு 1949. ரூ.4 அணா. இதன் பதிப்புரிமை யார்க்கும் உரியது என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர்.
3. திருவள்ளுவர் ஒருதுறைக்கோவை (சிலேடைக் குறிப்புகளுடன்), ஆண்டு 1950 - ஸ்ரீமகாபாரதம் பிரஸ், கும்பகோணம், ரூ.10 அணா, இதன் பதிப்புரிமை யார்க்கும் உரியது என்று இந்த நூலிலும் குறித்திருக்கிறார்.
4. ஸ்ரீ இராஜாஜி பிள்ளைத் தமிழ் - ஆண்டு 1951, ஸ்ரீமகாபாரதம் பிரஸ், கும்பகோணம், ரூ.4 அணா. இதன் பதிப்புரிமை யார்க்கும் உரியது என்பதையும் அச்சிட்டிருக்கிறார்.
தொல்காப்பியம் பொருளதிகார ஆராய்ச்சி நூலை இராமநாதபுரம் அரசர் முத்து ராமலிங்க சேதுபதிக்கு, அவர் தமிழ் இலக்கியத்தின் பால் கொண்ட அக்கறைக்காகக் காணிக்கையாக்கி இருக்கிறார் முத்துசாமி ஐயர். நூலின் முதல் பக்கத்தில் "நன்றியுரை' என்ற தலைப்பில் ஆசிரியர் எழுதியிருப்பது சுவாரசியமாக இருக்கிறது. அன்றைய பதிப்புச் சூழலைப் படம் பிடித்துக் காட்டவும் செய்கிறது:
""சென்ற 1912-ஆம் ஆண்டில், கொழும்பு ஸ்ரீமான் கு.ஸ்ரீகாந்த முதலியார் அவர்கள், டி.லிட்., இவ்வாராய்ச்சியைச் செவ்வனே செய்பவருக்கு ரூ.200 பரிசு அளிப்பதாகப் பத்திரிகைகளில் ப்ரசுரம் செய்தனர். ஆங்கிலங்கற்றோர் அருந்தமிழை யோதாது நீங்கிவரும் இக்காலத்தில், ஆங்கில நாடு சென்று அருங்கலை பயின்று உயர்தரப் பட்டம் பெற்ற இம்முதலியாரவர்கள் (முதன்மையானவர்கள் என்றபடி),
தம் தாய்மொழி மாட்டெழுந்த அபிமான மிகுதியால், இவ்வாறு தமிழ் நூலுக்குப் பரிசளிக்க முன்வந்தது யாவராலும் மிகவும் நன்கு மதிக்கற்பாலது. மேற்குறித்த ஸ்ரீமான் முதலியாரவர்களது விளம்பரமே என்னை இம்முயற்சி செய்யத் தூண்டிற்றாகலின், எனக்கு அவர்களுடைய பரிசு கிடைத்திலதெனினும் நான் என்னுடைய முதல் நன்றியை முதலியாரவர்களுக்கே செலுத்துகின்றேன்.
இந்நூலின் காகிதம், பைன்டிங், இவற்றிற்காக, வணிகர் தங்குல மணிபோல்பவரும், வண்மையும் செல்வமும் வாய்க்கப்பெற்றவரும், ஆண்டிப்பட்டி ஜமீந்தாரும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் நிரந்தர போஷகரும், உப-அக்ராசநாதிபதியும் ஆகிய ஸ்ரீமான் கானாடுகாத்தான் சா. ராம். மு.சித. பெத்தாச்சி செட்டியாரவர்கள் ரூ.30 பொருளுதவி செய்தார்கள். இவர்களுடைய வள்ளன்மையை உள்ளன்போடு வியந்து பாராட்டி, இவர்களுக்கு நான் நன்றிசேர் வந்தனம் நயந்து கூறுகின்றேன்.
சென்ற சில மாஸங்களாகச் "செந்தமிழ்' பத்திரிகையில் வெளிவந்த இவ்வாராய்ச்சியை ஒருசேரத் திரட்டிப் புத்தகம் உருவாக்கித் தருவதற்கு ஒருப்பட்டு, அங்ஙனமே அச்சுச் செலவின்றித் தமது சொந்த முத்ராசாலையில் அச்சிட்டுதவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் நிருவாக சபையார் மாட்டும் நான் மட்டற்ற நன்றி பாராட்டுகின்றேன்.
தங்களுக்குப் பல அவசர வேலைகளுக்கிடையே இச்சிறு நூலைப் படித்துப் பார்த்து, அபிப்ராயம் அனுப்பி, என்னுள்ளத்தில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உண்டாக்கிய பெரியோர்களுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி செலுத்துகின்றேன்.
வே. முத்துசாமி ஐயன்
அருப்புக்கோட்டை, 24.5.1914.
அப்படியானால், கொழும்பு ஸ்ரீகாந்த முதலியார் அறிவித்த ரூ.200 பரிசு யாருக்குக் கிடைத்தது? அதையும் இந்த முன்னுரையின் முடிவிலேயே பின்குறிப்பாக எழுதியிருக்கிறார் முத்துசாமி ஐயர்: ""இப்பரிசு செந்தமிழ் பத்திராதிபராய்த் திகழ்ந்தவரும், என்னினும் எத்துணையோ அளவு செந்தமிழறிவாற்றலில் சிறந்தவரும் ஆகிய பிரம்மஸ்ரீ உ.வே.மு. ராகவையங்காரவர்களுக்கு உரிமையிற் கிடைத்தது''.
தனக்கு அப்பரிசு கிடைக்கவில்லை என்பதைத் தெரிவித்திருந்தால் போதும். ஆனால் யாருக்குக் கிடைத்தது என்பதையும், அவர் தம்மைவிட எத்தனையோ மடங்கு தமிழ் அறிவாற்றலில் தேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டதோடு நில்லாமல், "அவருக்கு உரிமையிற் கிடைத்தது' என்று அவருடைய தகுதியை உயர்த்திக் காட்டுவதில் இவர் பெருமை கொள்கிறார்.
"திருவள்ளுவர் ஒருதுறைக் கோவைக்கு' சில பாராட்டுரைகள் தந்தவர்களுள், காஞ்சி காமகோடி பீடாதிபதிகள், சேது சம்ஸ்தான மகாவித்துவான் ஸ்ரீ ரா. ராகவையங்கார், மதுரைத் தமிழ்ச் சங்கக் காரியதரிசி என்.ஆர். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகன்நாதன், ராவ் சாகிப் எஸ். வையாபுரிப்பிள்ளை, முன்னாள் மேயர் எஸ். ராமசாமி நாயுடு, ஆங்கிலப் பேராசிரியர் ஸ்ரீநிவாசராகவன் போன்றோர் முக்கியமானவர்கள்.
நூன்முகம் என்று முகவுரையில் முத்துசாமி ஐயர் எழுதியிருப்பதைப் படிக்கையில், இவருக்குத் திருவள்ளுவர் மீதும், திருக்குறள் மீதும் உள்ள பற்று வெளிப்படுகிறது.
ஒவ்வொரு நூலின் முன்னுரையிலும் இவர் பதிவு செய்துள்ளவை அனைத்தும் மிகச்சிறந்த ஆவணங்களாகத் திகழ்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...