தமிழ் நாட்டிலே புலவர் பாடும் புகழுடையார் என்றும் உள்ளார். அன்னவருள் ஒருவர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பே நெல்லையம்பதியில் வாழ்ந்தார். அவர், முத்தமிழ்ச் சுவை தேர்ந்த வித்தகர்; முத்துச்சாமி என்னும் பெயரினர். அந்நாளில் ஆசு கவியாய் விளங்கிய அழகிய சொக்கநாதர் அவ்வள்ளலின் ஆதரவைப் பெற்றார். ஆற்றிலே நீராடச் செல்லும்போதும், மேடையிலே நின்று மெல்லிய தென்றலைத் துய்க்கும்போதும், கோடையிலே குளிர் பூஞ்சோலையிற் சென்று உலாவும் போதும் அழகிய சொக்கர் அவ்வள்ளலின் குறிப்பறிந்து கவிபாடுவார்; அவர் இன்புறக் கண்டு தாமும் இன்புறுவார்.
ஒரு நாள், அச்செல்வர், அழகிய சொக்கருடன் உலாவி வரும்பொழுது, கரும்புத் தோட்டத்தின் அருகே கான மயில் ஒன்று ஆடக்கண்டு களிப்புற்று நின்றார். இளங்காற்றிலே ஆடிய கரும்பின் தோகையும் இன்பப் பெருக்கிலே ஆடிய மயிலின் தோகையும் அவர் கண்ணைக் கவர்ந்தன. அந்நிலையில், அழகிய சொக்கரை நோக்கிக் கரும்புக்கும் கான மயிலுக்கும் பொருந்தும் கவியொன்று பாடும்படி அவர் வேண்டினார். கவிஞரும் அக்காட்சியைக் கண்டு களிப்புற்று உடனே பாடலுற்றார்.
""மேனியெல்லாம் கண்ணுறலால் வேள் விரும்பும் தன்மையினால்
ஆனபசுந் தோகையினால் ஆடலினால் - மீனவன்நேர்
மானபரா! நெல்லைநகர் வாழுமுத்துச் சாமி மன்னா!
கானமயில் ஒப்பாம் கரும்பு''
என்ற சொக்கர் பாட்டின் சுவையறிந்து இன்புற்றார் வள்ளல். ""மயிலுக்கு மேனியெல்லாம் கண்; கரும்புக்கும் மேனியிலே கண் (கணு); மயிலைச் செவ்வேள் (முருகன்) விரும்பி வாகனமாகக் கொண்டான்; கரும்பை மாரவேள் (மன்மதன்) விரும்பி வில்லாகக் கொண்டான். இன்பவுணர்ச்சியுள்ளபோது மயில், தோகையை விரித்து ஆடும்; இளங்காற்று வீசும்போது கரும்பின் தோகையும் அசைந்து ஆடும் எனவே, கானமயில் ஒப்பாகும் கரும்பு'' என்ற கருத்தமைந்த கவியைக் கேட்டு வள்ளல் மனமகிழ்ந்தார்.
கரும்புத் தோட்டத்தைக் கடந்து சாலையின் வழியே நடந்தனர் இருவரும். வளமான வாழைத்தோட்டம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது. மேல் நோக்கி விரிந்த இலைகளையும், தாரை நோக்கித் தாழ்ந்த பசுங்குலைகளையும் கண்ட வள்ளல், அருகே நின்ற கவிஞரை நோக்கினார். "காய்' என்று தொடங்கி "இலை' என்று முடியும்படி ஒரு கவி சொல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். உடனே வந்தது செந்தமிழ்ப் பாட்டு.
""காய்சினம்இல் லாதான் கருணைமுத்துச் சாமிவள்ளல்
வாய்மையுளான் பாடி வருவோர்க்குத் - தாய்நிகர்வான்
எல்லையில்லா மாண்பொருளை ஈவான் இவனிடத்தில்
இல்லையென்ற சொல்லே இலை''
என்று சொக்கர் சொல்லிய வெண்பா, வள்ளலின் உள்ளத்தைத் தொட்டது. இலையையும் குலையையும் நோக்கி நின்ற வள்ளலைத் தலைகவிழச் செய்தது அப்பாட்டு. காய் என்றெடுத்து இலையென்று முடித்த கவியிலே அப்படி என்ன பொடியைப் போட்டுவிட்டார் சொக்கர்? அவ்வள்ளலிடம் அமைந்திருந்த குணங்களையே பொருளாக வைத்து, அவர் எடுத்துக்கொடுத்த இரு சொல்லையும் ஆதியும் அந்தமுமாக அமைத்து ஆனந்தமாகப் பாடிவிட்டார். முத்தமிழை ஆதரித்த முத்துச்சாமி வள்ளலை வாயாரப் புகழ்ந்து பாட எப்போது வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த கவிஞர், இப்போது தம் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். அப்பாட்டின் நயத்தைச் சிறிது சிந்திப்போம்:
வள்ளல், காய் சினம் அற்றவன்; கருணையுற்றவன்; வாய்மை உடையவன்; தாய்மை வாய்ந்தவன்; கையால் அவன் அளிக்கும் கொடைக்கு எல்லையில்லை. அவன் நாவில் "இல்லை'யென்ற சொல்லே இல்லை என்பது பாட்டின் கருத்து. சேர்ந்தாரைக் கொல்லும் தன்மையுடைய தென்று திருவள்ளுவர் முதலிய சான்றோர் சொல்லிய முறையில் "காய் சினம்' என்று கவிஞர் எடுத்த எடுப்பும், "ஊழி பெயரினும் பெயரா உரையுடையார்' என்று கம்பர் முதலிய கவிஞர் பாராட்டிய காராள குலத்திற் பிறந்த வள்ளலை, "வாய்மையுளான்' என்று குறித்த வண்ணமும், பெற்ற பிள்ளைக்குப் பால் நினைந்தூட்டும் தாய் போல் பாடி வந்த பாவலர்க்குப் பரிசளித்த தலைவனைத் "தாய் நிகர்வான்' என்று போற்றிய தன்மையும், எவர்க்கும் இல்லையென்னாது, எல்லையின்றிக் கொடுத்த நல்லானிடம் "இல்லை என்ற சொல்லே இலை' என ஏத்திய அழகும் இப்பாட்டிலே அமைந்திருக்கக்கண்டு எல்லையற்ற இன்பம் அடைவர் தமிழறிஞர். வள்ளலும் கவியின் சுவையறிந்து களிப்புற்றார்; ஆயினும், தம் பெருமையைப் பாட்டின் வாயிலாகக் கேட்டபோது நாணித் தலை கவிழ்ந்தார்.
வாக்கு வளம் உடைய அழகிய சொக்கர், நெல்லையம்பதியிலே கோயில் கொண்டுள்ள காந்திமதியம்மையின் மீது ஒரு பிள்ளைத்தமிழ் பாடினார். அந்தக் கவிதையைக் காதாரக் கேட்டார் வள்ளல். அதன் நயம் அவருள்ளத்தைக் கொள்ளை கொண்டது. செவிச் சுவையுடைய கவிஞரது செவிக்கு ஒரு செவ்விய பரிசளிக்க அவர் விரும்பினார். காந்திமதியம்மை முன்னிலையில் பிள்ளைத்தமிழ் அரங்கேறியவுடன், வள்ளல் தாம் அணிந்திருந்த வயிரக் கடுக்கனைக் கழற்றிக் கவிஞர் காதிலே மாட்டி மகிழ்ந்தார். ""செவிச் செல்வமே செல்வத்துட் செல்வம்'' என்று அக்கடுக்கனைப் புகழ்ந்து வயிரப் பரிசளித்த வள்ளலை வாயார வாழ்ந்தினார் சொக்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


