வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

இந்த வாரம் கலாரசிகன்

இந்த வாரம் கலாரசிகன்

News image
Updated On :11 ஜூலை 2015, 7:50 pm

கலாரசிகன்

இந்த ஆண்டின் "தினமணி' தமிழ் இலக்கியத் திருவிழாவுக்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டது என்பதை உங்களுக்குப் பேருவகையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு நடந்த அதே சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரண்டு நாள்களும் தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அமைப்புகளும் பெருந்திரளாகக் கூடித் தமிழுக்கு விழா எடுத்து மகிழ வேண்டும் என்கிற வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்.

மதுரையிலோ, கோவையிலோ நடத்தக் கூடாதா என்கிற கேள்வி எங்களுக்கு எழத்தான் செய்தது. அதில் சில நிர்வாகச் சிக்கல்கள் இருக்கின்றன. போதாக்குறைக்கு, கால அவகாசமும் குறைவாக இருக்கிறது. விழாவை மேலும் தள்ளிப்போட மனம் ஒப்பவில்லை. அதனால் இந்த ஆண்டும் "தினமணி' தமிழ் இலக்கியத் திருவிழாவை சென்னையிலேயே நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

பாளஎழுத்தாளர்களுக்கும் படைப்பிலக்கியவாதிகளுக்கும், கவிஞர்களுக்கும் ஒரு வேண்டுகோள்: நீங்கள் அழைப்பிதழ் எதிர்பார்க்காமல் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். ரசிகர்கள் பலர் உங்களது வரவை எதிர்பார்த்தே விழாவுக்கு வருகிறார்கள். அவர்களை ஏமாற்றாதீர்கள் என்பது எனது அன்பு வேண்டுகோள்.

கடந்த ஆண்டு அறிவித்தது போலவே, இந்த எனது அழைப்பையே தயவு செய்து அழைப்பிதழாகக் கருதி ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு நாள்களும் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் கூடித் தமிழுக்கு விழா எடுக்க வாருங்கள். உங்களைப் போலவே தமிழ்த் திருவிழாவை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்.

பாளபாரதியின் பாடல்களுக்கு உரை தேவையில்லை என்கிற தலைமுறை அருகி, பாரதிக்கும்கூட உரை தேவைப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதில் வியப்படைய ஏதுமில்லை. காலத்தின் சுழற்சியில் வார்த்தைகள் மாறுகின்றன, மறைகின்றன, புதிது புதிதாக வார்த்தைகள் தோன்றுகின்றன. இதை யாரும் தடுத்துவிட முடியாது.

இன்னும் ஆறு ஆண்டுகள் கடந்தால் மகாகவி சுப்பிரமணிய பாரதி மறைந்து ஒரு நூற்றாண்டு காலமாகியிருக்கும். பாரதியின் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை தமிழ்மொழி மிகப்பெரிய மாற்றங்களைக் காணவில்லை என்றாலும், ஆங்கில வழியில் படிக்கும் இன்றைய, நாளைய தலைமுறையினருக்குப் பாரதியின் தமிழ்கூட விளக்கம் தேவைப்படுவதாக அமைவதில் வியப்பொன்றுமில்லை. காலத்துக்கேற்ற தேவையாக பாரதியார் கவிதைகளை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார் கவிஞர் பத்மதேவன்.

பாரதியே தம்முடைய சில கவிதைகளுக்குப் பொழிப்புரை எழுதி இருக்கிறார். பாஞ்சாலி சபதத்திற்குக் குறிப்புரை கொடுத்திருக்கிறார். அதனால், கவிஞர் பத்மதேவனின் முயற்சியில் தவறேதும் இல்லை. சொல்லப்போனால், காலத்தின் கட்டாயம் இது.

பாரதியாரின் கவிதைகளுக்கு உரையெழுத முற்பட்டிருப்பதுடன், பொருள் எளிமையாகப் புரிய வேண்டும் என்பதற்காக சந்திகளைப் பிரித்தும், நீண்ட சொற்றொடர்களை சிறு சிறு வாக்கியங்களாக மாற்றியும் சில வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார். அதே நேரத்தில், சீர் அமைப்பு சீர்குலையாமலும் கவனமாக இருந்திருக்கிறார். குற்றியலுகரச் சந்தி பிரிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் குற்றியலுகர எழுத்துகளை அடைப்புக் குறியில் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.

பாஞ்சாலி சபதத்திற்குக் கவிஞர் பத்மதேவன் எழுதியிருக்கும் உரை அருமை. அந்த உரையைப் படிக்கும்போது, கல்லூரியில் பாரதியில் தோய்ந்த ஆசிரியர் பாடம் எடுப்பது போன்ற உணர்வு மேலிடுகிறது.

பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் கருத்துப்படி, மகாகவி பாரதியின் படைப்புகளில் தலைசிறந்த படைப்பு "குயில் பாட்டு'தான். பேராசிரியர் மு.வ.வும் இதை வழிமொழிந்திருப்பார். மிகப்பெரிய தத்துவத்தை சர்வ சாதாரணமாகக் குயில் பாட்டின் மூலம் வெளிப்படுத்தி இருப்பவர் மகாகவி பாரதி. விளக்கம் இல்லாமல் எல்லோருக்கும் குயில் பாட்டுக்குப் பொருள் தெரிந்துவிடாது. கவிஞர் பத்மதேவன் மிகவும் அற்புதமாகப் பொழிப்புரை எழுதி இருப்பதுடன், குயில் பாட்டின் இறுதியில் பாரதி சொல்ல வந்த தத்துவக் கருத்து என்ன என்பதையும் அனைவருக்கும் புரியும் விதத்தில் பதிவு செய்திருக்கிறார்.

விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வரும், பாரதியில் ஆழங்காற்பட்ட புலமை உடையவரும், எனது பெருமதிப்புக்குரிய பேராசிரியருமான வ.வே.சு. என்னிடம் இப்படியொரு அருமையான புத்தகம் வெளிவந்திருப்பது பற்றி ஆறேழு மாதங்களுக்கு முன்பே கூறியிருந்தார். அவருக்கும் எனது நன்றி. நல்லதொரு புத்தகம் எனது பொக்கிஷப் பெட்டகத்தில் சேர்ந்திருக்கிறது.

சாகித்ய அகாதெமி தமிழ் இலக்கியத்திற்குச் செய்யும் மிகப்பெரிய உதவி, படைப்பாளிகளையும், அறிஞர்களையும் அடையாளம் கண்டு, வெறும் ரூ.50 விலையில் அவர்களைப் பற்றிய தகவல்களையும், அவர்களுடைய படைப்புகள் அல்லது பங்களிப்பு பற்றிய புரிதலையும் ஏற்படுத்தும் வகையில் "இந்திய இலக்கியச் சிற்பிகள்' என்கிற தலைப்பில் புத்தகங்களை வெளியிடுவது. இதுவரை பல நூறு பேர்கள் பற்றிய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

வல்லிக்கண்ணன் (கழனியூரன்),

புதுவைச் சிவம் (சிவ. இளங்கோ),

திருலோக சீதாராம் (இராஜாமணி),

அ.ச. ஞானசம்பந்தன் (நிர்மலா மோகன்), மீரா (இரா. மோகன்), குமுதினி (பிரேமா நந்தகுமார்), சி.பா. ஆதித்தனார் (முகிலை இராஜபாண்டியன்),

கம்பதாசன் (சிற்பி பாலசுப்பிரமணியம்) ஆகியோர் பற்றிய புத்தகங்கள் சாகித்ய அகாதெமியின் சமீபத்திய வெளியீடுகள்.

சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கும் "இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் வெளிவந்த - வெளிவருகிற எல்லாப் புத்தகங்களையும் அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள நூலகங்களில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும். நமது மாணவர்களின் கவனத்துக்கு அவை கொண்டு செல்லப்பட்டு, அந்த இலக்கிய ஆளுமைகள் பற்றிய புரிதல் ஏற்படுத்துவது என்பது பள்ளிகளின் கடமை.

விமர்சனத்திற்கு வந்திருந்தது ச.மணியின் "வெயிலில் நனைந்த மழை' என்கிற கவிதைத் தொகுப்பு. காவல் துறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர் என்பதும், கல்லூரி காலத்திலிருந்தே கவிதை எழுதுபவர் என்பதும் முன்னுரையிலிருந்து தெரிந்தது.

"பருவ மாற்றம்' என்றொரு கவிதை. அதுதான் எனது இந்த வாரத் தேர்வு.

வண்ணத்துப்பூச்சியின்

நிறத்தினை விரும்பும்

கூட்டுப்புழுக்கள்

எளிதாக ஏற்றுக் கொள்கின்றன

உருவமாற்றத்தினை

பருவம் தப்பிய மழையைப் பற்றிய

புலம்பல்களில் இருந்துதான்

அறிந்துகொள்ள முடியும்

மழையின் பெருமையை

என்பது போல்

உருவ மாற்றத்திற்குத் தப்பிய

உயிரிகளில் இருந்துதான்

தெரிந்து கொள்ள இயலும்

உயிரின் பெருமையை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.