நல்வாழ்வுக்கு உடல் வலிமையும் நலமும் கட்டாயத் தேவை. சுவர் இல்லாமல் சித்திரம் எழுத இயலுமா? "உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே' என்கிறார் திருமூலர். ஒவ்வொருவரும் உடலை உறுதியோடு வைத்துக்கொள்ளவும், நோயிலிருந்து காத்துக்கொள்ளவும் ஊட்டமான உணவினை உண்ணவும் வேட்கை உடையராக இருக்கின்றனர்.
அன்றாடம் பெரும்பான்மையான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் கண்டாலே இதனை அறிந்துகொள்ளலாம். அவற்றில் உடலுக்கான விளையாட்டுப் பயிற்சிகள், யோகாசனங்கள் என்று பல்வேறு உடற்பயிற்சிகளைத் தேர்ச்சி பெற்றவர்கள் வேர்க்க விறுவிறுக்கச் செய்துகாட்டுகிறார்கள். சமையற்கலையில் தேர்ந்த நளன்களும் அடுக்களை அரசிகளும் பல்வேறு சமையற் குறிப்புகளைத் தந்து உணவுகளைச் செய்துகாட்டித் தாங்களே சுவைத்து இனிமையை முகக் குறிப்பால் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் நேயர்களுக்கு உணர்த்தி அசத்துகிறார்கள். சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஆங்கில மருத்துவம் என்று பல்வேறு மருத்துவக் குறிப்புகளையும் ஆலோசனைகளையும் மருத்துவர்கள் இருநூறு முந்நூறு என்று கட்டணம் வாங்காமல் அள்ளி அள்ளி வீசுகிறார்கள். இவற்றைப் போட்டி போட்டுக்கொண்டு தொலைக்காட்சிகள் ஒலிபரப்பிக்கொண்டிருப்பதற்கு மக்கள் விழைந்து பார்க்கிறார்கள் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
இந்நாளில் பெரும்பாலோர்க்கு ஏதேனும் ஓர் உடற்குறைபாடு இருக்கிறது. சிலருக்குச் சர்க்கரை அதிகம்; சிலருக்கு இரத்த அழுத்தம்; சிலருக்கு இரண்டும்; வேறு சிலருக்கு உடற்பருமன். இன்னும் சிலருக்குக் கொழுப்புக் கூடுதல். வயதானவர்களுக்கு மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கும் இத்துன்பங்கள் இருக்கின்றன. உடல் வலிமைக்கு மருத்தினும் உணவினும் பயிற்சியே முதன்மையான தேவை. நோய் வாராமல் காத்துக்கொள்வதற்கும் வந்த நோயினைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கும் உடற்பயிற்சி தேவை. நடை, ஓட்டம், ஆட்டம், பாரம் தூக்குதல், நீச்சலடித்தல், ஆசனம் போடுதல் போன்றவை உடற்பயிற்சிகள் ஆகும்.
உடலோம்புவதற்குரிய வழிகளைப் பதஞ்சலியின் யோகசாத்திரம், திருமூலரின் திருமந்திரம் போன்ற நூல்கள் தெரிவிக்கின்றன. அட்டாங்கயோகம் என்பது உடலைப் போற்றி உத்தமனைக் காண்பதற்குரிய வழியினைத் தெரிவிப்பதாகும். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன எண்வகை யோகங்களாகும். இவற்றுள் "ஆசனம்' என்பது இன்பமாக ஓரிடத்தில் நிலைத்து இருப்பதற்கு மேற்கொள்ளும் உடற்பயிற்சி. "ஸ்திர ஸகம் ஆஸனம்' என்பது பதஞ்சலியின் சூத்திரம். ஆசனம் உடற்பயிற்சி; பிராணாயாமம் மூச்சுப்பயிற்சி. இவ்விரண்டின் கூறுகள் சிலவற்றைக் கொண்ட பயிற்சியே இந்நாளில் செய்யப்படும் Aerobics என்னும் பயிற்சி.
ஏரோபிக்ஸ் என்பது இதயத் துடிப்பையும் இரத்த வோட்டத்தையும் மூச்சோட்டத்தையும் தற்காலிகமாக மிகுவிக்கும்படி சந்த ஒழுங்கோடு வேர்வை சிந்தும்படி விரைவாகச் செய்யும் உடலியக்கம் ஆகும். இப்பயிற்சியின்போது உடல் தனக்குத் தேவைப்படும் உயிர்க்காற்றை (பிராணவாயு) எடுத்துக்கொள்வதால் இதயமும் நுரையீரலும் வலிமையுறுகின்றன என்கிறார்கள்.
"Aero என்னும் கிரேக்கச் சொல்லுக்குக் காற்று என்பது பொருள்; Aerobics என்னும் சொல்லை உடற்பயிற்சியைக் குறிப்பதற்கு முதன்முதலில் பயன்படுத்தியவர் Kenneth Cooper என்னும் அமெரிக்க விமானப்படை மருத்துவர்; அஃது இசைப்
பின்னணியில் செய்யப்படுவது. அதனைச் செவியின்ப மெய்ப்பயிற்சி என்றும், இசைமெய் வருத்து என்று கூறலாம்'' என்கிறார் சாய் கிரிதர். அவர் திரட்டித் தந்துள்ள தகவலுக்கு நன்றி. இப்பயிற்சியில் இசை இடம்பெற்றாலும் முதன்மை காற்றுக்குத்தானே தவிர இசைக்கு இல்லை. அதனால்தான் மற்ற நண்பர்கள் எல்லோரும் காற்றினை உள்ளத்தில்கொண்டு சொற்களை உருவாக்கியுள்ளனர்.
என்.ஆர். ஸத்யமூர்த்தி உயிர்வளி வலுப் பயிற்சி, மூச்சு சீர் பயிற்சி, மொய்ம்பு மிகு பயிற்சி போன்ற சொற்களையும், அ.கருப்பையா, உயிர்வளிப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி ஆகிய சொற்களையும், ஆனந்த கிருஷ்ணன் வளியூட்டப்பயிற்சிகள் என்ற சொல்லையும், கோ. மன்றவாணன் உயிர்வளி ஊட்டம், காற்றூட்டப் பயிற்சி என்னும் சொற்களையும், க. அன்பழகன் உயிர்வளி வேட்டல், அவசரநிலை உயிர்க்காற்று போன்ற பல சொற்களையும்
தந்துள்ளனர். சந்திரா மனோகரன் உயிர்வளி வேண்டல், உயிர்வளி கோரல், உயிர்வளி சேகரம் ஆகிய மூன்று சொற்களைத் தந்துள்ளார்.
இதற்குரிய தமிழாக்கத்தில் காற்று என்பதும் அது ஒருவகைப் பயிற்சி என்பதனைக் காட்டும் குறிப்பும் இருத்தல் சிறப்பு. சிலம்பாட்டம், கரகாட்டம், கோலாட்டம், களரியாட்டம் என்று விளையாட்டுக்கு வழங்கும் பெயர்களையொட்டி இப்பயிற்சியை வளியாட்டம் என்று குறிக்கலாம். அது வேற்றுமைத் தொகையாய் வளியைக் குறித்து ஆடும் ஆட்டம் என்று பொருள் தரும். அல்லது போர் குறித்துச் செய்யும் பயிற்சியைப் போர்ப் பயிற்சி என்பதுபோல வளி குறித்துச் செய்யும் இதனை வளிப்பயிற்சி எனலாம்.
Aerobics - வளியாட்டம் அல்லது வளிப்பயிற்சி
அடுத்த வாரத்திற்குரிய சொல்
Jet Lag ( ஜெட் லேக் )
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

