திசை திரியும் வயங்கு வெண்மீன்
'வயங்கு' என்ற சொல்லுக்கு ஒளிர், சுடர் வீசு என்பது பொருள். வானத்து மீன்களெல்லாம் ஒளிவிடத்தான் செய்கின்றன.


'வயங்கு' என்ற சொல்லுக்கு ஒளிர், சுடர் வீசு என்பது பொருள். வானத்து மீன்களெல்லாம் ஒளிவிடத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றில் ஒருசிலவே நம்மைக் கவர்கின்ற அளவுக்கு ஒளிர்கின்றன. அவற்றில் முதன்மையானது சுக்கிரன் என்று அழைக்கப்படும் வெள்ளி என்ற கோள்மீன் (planet) ஆகும். இதனை ஆங்கிலத்தில் Venus என்பர்.
சூரியக் குடும்பத்தில், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள் புதன் (Mercury) ஆகும். அடுத்து இருப்பது வெள்ளி. அதனையும் அடுத்துத்தான் பூமி அமைந்திருக்கிறது. எனவே புதன், வெள்ளி ஆகிய இரு கோள்களும் உள் அமை கோள்கள் (Interior Planets) எனப்படுகின்றன. இந்த உள் அமை கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதைக்கு உள்ளடங்கியே இருக்கின்றன. இம்முறையில் பூமியும், வெள்ளியும் சூரியனைச் சுற்றி வரும்போது ஒரு காலகட்டத்தில் பூமி, வெள்ளி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைய வாய்ப்பிருக்கிறது. இதனை நேர் அமைவு என்பர் (conjunction). இந்த நேரமைவின்போது வெள்ளியும் சூரியனும் ஒரே நேரத்தில் உதித்து, ஒரே நேரத்தில் மறைவதால் நாம் வெள்ளியைக் காணமுடியாது. பின்னர் சிறிது சிறிதாக வெள்ளி இடஞ்சுழியாக நகரும்போது, அது சூரியனைவிட்டு விலகிச் செல்கிறது. அப்போது, சூரியன் மறைந்த பின்னர் சிறிது நேரத்துக்கு மேற்கு வானில் மாலை விண்மீனாக (Evening Star) வெள்ளியைக் காணலாம். வெள்ளி மேலும் நகர நகர... அது சூரியனைவிட்டு விலகியிருக்கும் கோணம் அதிகரிக்குமாதலால், வெள்ளி வானத்தில் காணப்படும் நேரமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அதாவது, வெள்ளி மேற்கு வானத்தில் ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே போவதைப் பார்க்கலாம்.
அந்நாள்களில் சூரியன் மறைந்த பின்னர் முந்தைய வாரத்தைக் காட்டிலும் அடுத்த வாரத்தில் அது அதிக நேரத்துக்கு வானத்தில் தெரியும். இவ்வாறு அது எவ்வளவு உயரத்துக்கு எழ முடியும்? ஒரு கட்டத்தில் சூரியன் மறையும் போது வெள்ளி உச்சி வானத்தில் இருக்க முடியுமா? முடியாது. ஏன்? வெள்ளியின் சுற்றுப்பாதை முழுதும் பூமியின் சுற்றுப்பாதைக்கு உள்ளேயே அமைந்திருப்பதால், பூமி, வெள்ளி, சூரியன் ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோணம் ஒரு மிகப்பெரிய அளவை எட்டி, பின்னர் மீண்டும் குறையத் தொடங்குவதைக் காணலாம். அந்தக் கோணம் குறைந்துகொண்டே வந்து வெள்ளி உள்நேரமைவுக்கு வந்துவிடுகிறது. எனவே, வெள்ளி மீண்டும் சூரியனோடு ஒன்றிக் காணப்பட்டு, நமது கண்ணுக்குத் தெரியாமற் போய்விடும். இதற்குச் சுமார் ஆறுமாத காலம் ஆகும். அதாவது, தொடக்கத்தில் இரவு தொடங்கும்போது அடிவானத்துக்குச் சற்று மேலே தெரியும் மாலை வெள்ளி, அடுத்தடுத்த நாள்களில் அதே நேரத்தில் கொஞ்சம் உயரத்தில் தெரியும். சுமார் மூன்று மாத காலம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வரும் வெள்ளி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும். பின்னர் ஒருநாள் அது சூரியனுடன் ஒன்றிவிடுவதால் பார்வையிலிருந்து முற்றிலும் மறைந்துவிடும்.
இப்போது இந்த வயங்கு வெண்மீனின் நகர்வு தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் காண்போம். பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பட்டினப்பாலையில் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் காவிரியின் சிறப்பையும், கரிகால் பெருவளத்தான் மாண்பையும் சிறப்பித்துக் கூறுகிறார். பருவமழை பொய்த்துப்போனாலும் காவிரி வற்றாத நீர்வளம் கொண்டிருக்கும் என்று கூறவந்த புலவர் தன் பாடலை இவ்வாறு தொடங்குகிறார்:
""வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்குஏகினும்
தற்பாடிய தளியுணவின்
புள்தேம்பப் புயல்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி'' (ப.பாலை:1-6)
இங்கு வயங்கு வெண்மீன் என்று கூறப்படுவது வெள்ளியே. இந்த வெள்ளியானது தான் வழக்கமாகச் செல்லும் பாதையினின்றும் திரிந்து தெற்குப்பக்கம் சென்றால் வானம் பொய்க்கும் -அப்படிப் பொய்த்தாலும் காவிரி பொய்க்காது என்கிறார் புலவர். இது அணைகள் கட்டப்படாத அன்றைய காவிரி.
பட்டினப்பாலை மட்டுமல்ல, புறநானூறு (பாடல் 35), புறம் (117: 1-7), சிலப்பதிகாரம்(காதை 10:102-108), மணிமேகலை (பதிகம்:24,25) ஆகிய இலக்கியங்களும் வெள்ளி திசைமாறிப் பயணிப்பதன் விளைவுகளைப் பற்றிக் கூறுகின்றன. எனவே, இது அன்றைய தமிழரின் நம்பிக்கை என்பது உறுதியாகிறது.
வெள்ளியானது சூரியனுடன் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது நாம் அதனைக் காணமுடியாது எனக் கண்டோம். அதன் பின்னர் அது சூரியனுக்கு வடக்குப் பக்கமாகவோ அல்லது தெற்குப் பக்கமாகவோ நகர்ந்து உயரத் தொடங்கும். இது பூமி, வெள்ளி ஆகிய இரு கோள்களின் அப்போதைய நிலைகளைப் பொருத்தது. தொடர்ந்து நாம் வெள்ளியைக் கண்காணித்து வந்தால், அது சூரியனைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக மேலுயர்ந்து வரும்போது, அது தொடர்ந்து தான் இருக்கும் திசையையும் மாற்றிக்கொண்டே வருவதையும் பார்க்கலாம். பூமியும் வெள்ளியும் தங்கள் இருப்பிடங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பதால் நாம் விண்ணில் காணும் தோற்றமே இது. பூமியில் ஒரே இடத்தில், ஒவ்வொரு நாளும் வெள்ளி எங்கு காணப்படுகிறது என்பதைக் குறித்துக்கொண்டே வந்த இரண்டு படங்களைக் காணுங்கள்.
இந்தப் படங்கள் 2010-11 ஆகிய ஆண்டுகளில் ஒரே இடத்தில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளி மாலையில் தோன்றிய நிலைகளைக் காட்டுகின்றன. இவற்றில், வெள்ளி தெற்குப்பக்கம் எழுந்து உயர்ந்து, பின்னர் வடக்கு நோக்கி நகர்வதைக் காணலாம். ஆனால், 2013-ஆம் ஆண்டு மிக அரிதாக, நேரமைப்பின் பின்னர், வெள்ளியானது ஞாயிற்றின் வடக்கில் ஜூன் மாதம் தோன்றி, மெதுவாக மேலெழுந்து, பின்னர் தெற்கு நோக்கிப் பயணித்து, பின்னர் மெதுவாகக் கீழிறங்கி 2014-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அடுத்த நேரமைப்பில் மறைந்துவிடும்.
இந்த நிகழ்வுகளில் ஏதாவது ஓர் ஒழுங்கமைவு (periodicity) இருக்கிறதா என்று பார்க்கலாம். நமது பூமி 365.25 நாள்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றிவருகிறது என அறிவோம். இதுவே நமக்கு ஓர் ஆண்டு. ஆனால், வெள்ளி சூரியனை 224.7 நாள்களிலேயே ஒரு சுற்றுச் சுற்றிவந்துவிடும். இவ்வாறு பூமிக்கு 8 சுற்றுச் சுற்ற 2922 நாள்களாகும் (8 x 365.25 = 2922).
வெள்ளிக்கு 13 சுற்றுச் சுற்ற 2922 நாள்களாகின்றன (13 x 224.7 = 2922). அதாவது, இன்றைக்குப் பூமியும் வெள்ளியும் எந்த நிலைகளில் இருக்கின்றனவோ அதே நிலைக்குச் சரியாக 8 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துசேரும். இது ஒரு வட்டணை (Cycle). 2013-இல் வெள்ளி தெற்குநோக்கித் திசை திரிந்து சென்றால் மீண்டும் 2021-இல் மீண்டும் இவ்வாறே நிகழும். சரி, இதற்கு முந்தைய ஆண்டுகளில் இவ்வாறு நேர்ந்திருக்கிறதா? ஆம்! 2005, 1997 ஆகிய ஆண்டுகளிலும் பூமியும் வெள்ளியும் இதே நிலைகளில் இருந்திருக்கின்றன என்பதை அறிய முடிந்தது.
இப்போது பட்டினப்பாலை அடிகளை மீண்டும் பார்ப்போம். பொதுவாக, தெற்குப்பக்கம் தோன்றி, வடக்குப்பக்கமாக நகரும் மாலை வெள்ளி, 2013-ஆம் ஆண்டில் வடக்குப்பக்கம் தோன்றி தெற்குப்பக்கம் நகர்ந்துள்ளது - அதாவது, திசை திரிந்து தெற்கு ஏகியுள்ளது. எனவே, வானம் பொய்க்கும் என்ற சங்ககால மக்களின் நம்பிக்கை அந்த ஆண்டு மெய்யாகியிருக்கிறதா?
2013-இல் தென்மேற்குப் பருவக்காற்று குடகு நாட்டிலும், அதனையும் தாண்டி தமிழகத்திலும் மிகுதியாகவே மழையைக் கொட்டியது. அதனால் மலைத்தலைய காவிரி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. இது நடந்தது 2013 - ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அப்போது வெள்ளி வடக்குப் பக்கம் வெகுதொலைவிற்கு நகர்ந்துள்ளதைக் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...