அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சொல் தேடல் - 6

சமுதாயம் நல்லவர்களும் தீயவர்களும் நிறைந்த கலந்த கட்டியாய் இருக்கிறது. எக்காலத்திலும் இராமர்களே நிறைந்த அயோத்தியாகவோ இராவணர்களே மலிந்த இலங்கையாகவோ இருந்ததும் இல்லை; இருக்கப்போவதும் இல்லை.

Updated On :2 மே 2015, 9:05 pm

சமுதாயம் நல்லவர்களும் தீயவர்களும் நிறைந்த கலந்த கட்டியாய் இருக்கிறது. எக்காலத்திலும் இராமர்களே நிறைந்த அயோத்தியாகவோ இராவணர்களே மலிந்த இலங்கையாகவோ இருந்ததும் இல்லை; இருக்கப்போவதும் இல்லை. களைகளே இல்லாத கழனியை எங்கேனும் கண்டதுண்டா? பாண்டவர்கள் மிகுந்திருந்தால் நல்ல சமுதாயம்; கெüரவர்கள் மிகுந்திருந்தால் பொல்லாத சமுதாயம். "எவ்வழி ஆடவர் நல்லர், அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்கிறார் புலமைப் பெருமாட்டி ஒளவையார்.

திருக்குறளின் "கயமை' அதிகாரம் கயவர்களின் புன்மைகளைத் தோலுரித்துக் காட்டுகிறது. உலகத்தில் உவமையாகக் காட்டும் பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேற்றுமைகள்தான் அதிகமிருக்கும், ஒற்றுமை ஒன்றிரண்டுதான் இருக்கும். ஆனால், மக்களுக்கும் கயவர்களுக்கும் இடையே ஒற்றுமை அதிகம். வேற்றுமை ஒன்றே ஒன்றுதான். வடிவத்தில் கயவர்கள் மக்களைப் போலவே முழுவதும் இருக்கிறார்கள்; ஆனால் குணத்தில்தான் வேறுபாடு. "மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில்' (1071) என்கிறார் திருவள்ளுவர்.

அந்தப் புல்லுருவிகள் பொதுச்சொத்துக்கு உரிமை கொண்டாடுவார்கள்; அடாத பழியை அடுத்தவன் மேல் வீசி மகிழ்வார்கள். நல்லவர்களின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி நாணி உருக்குலையச் செய்வார்கள். அவதூறுகளைப் பரப்புவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. அந்தக் கயவர்களால் நல்லவர்களும், எளியவர்களும் படும் துன்பங்கள் எண்ணிலடங்கா. ஒரு சிலர் அந்தக் கயவர்களின் கொடுமை தாங்காமல் உயிரைக்கூட விட்டிருக்கிறார்கள்.

சூழ்நிலையால் தவறு செய்தவர்களைப் பற்றிய தகவல்களையும் தடயங்களையும் திரட்டி வைத்துக்கொண்டு, தங்கள் விருப்பங்களை நிறைவேற்றாவிட்டால் வெளியிடுவதாக மருட்டித் தங்கள் விருப்பம்போல் ஆட்டிவைப்பதை ஆங்கிலத்தில் "பிளாக் மெயில்' என்று குறிப்பர்.

ந.சு. சண்முகம் என்பவர் ""பிளாக்மெயில் என்பது பலவீனத்தைச் சொல்லிப் பணியவைப்பது'' என்று குறித்து, இதற்கு என்ன தமிழாக்கம்? என்றும், இதற்கான தமிழ்ச்சொல்லைப் பிரசுரித்தால் சாதாரண மக்களிடமும் தமிழ் சென்று சேரும் என்றும் எழுதியிருந்தார். இதனால் இச்சொல் நெருக்கடி, மிரட்டுதல், அச்சுறுத்தல் என்பதனினும் ஆழமான பொருளைக் குறிப்பது என்று அவர் கருதுவது தெரிகிறது. அவரது கருத்து சரியானதே. இதில் ஒருவன் மறைவாகச் செய்த தவறு, அதனைக் காட்டி மருட்டி ஆதாயம் தேட முனையும் மற்றொருவனின் கயமை இரண்டும் உள்ளன.

ப. இரா. இராசஅம்சன் "வன்பறி' என்னும் நல்ல சொல்லைத் தந்துள்ளார். அது நேரடியாக மேற்காட்டியுள்ள பொருளைத் தாராது. அது வலிமையால் பறிப்பதைக் காட்டுமேயன்றி வஞ்சகமாகப் பறிப்பதைக் காட்டாது. இப்பொருளில் அதனைப் பலமுறை பயன்படுத்தி ஏற்ற வேண்டும்.

சோ. முத்துமாணிக்கம் "மறை காப்பு மிரட்டல்' என்பதையும், கோ. மன்றவாணன் "கள்ள மிரட்டல்' என்பதையும், இரா. மோகனரங்கம் "மந்தணக் கொள்ளை' என்பதையும் தக்க சொல்லாகப் பரிந்துரைத்துள்ளனர். இவை இவ்விரண்டு பொருள்களையும் காட்டுவனவாக உள்ளன.

ஒருவன் அந்தரங்கத்தை அறிந்து, அதனைப் பிறர் அறியாமல் மறைத்துவைக்கப் பொருள்கேட்டு அச்சுறுத்துவதால் இதனை "அந்தரங்க அச்சுறுத்தல்' என்று குறிக்கலாம். இத்தொகைச்சொல் அந்தரங்கத்தைச் சொல்லி அச்சுறுத்துவது என்றும், அந்தரங்கமாக (தனிமையில்) அச்சுறுத்துவது என்றும் இருபொருளைத் தரும். "அந்தரங்கம்' என்பது அனைவருக்கும் புரியக்கூடிய வடசொல். இல்லையெனில், "கமுக்க மருட்டல்' என்று தமிழாக்கம் செய்யலாம்.

Blackmail  - அந்தரங்க அச்சுறுத்தல் (அ) கமுக்க மருட்டல்.

அடுத்த வாரத்திற்குரிய சொல் } ஜாகர்நெட் - Juggernaut

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.