அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சொல் தேடல் - 7

Updated On :10 மே 2015, 1:26 pm

'அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனோடு பயணம் செய்துகொண்டிருந்த போது, எங்கள் பேச்சு "வாகீச கலாநிதி' கி.வா.ஜ.வின் சிலேடை குறித்துத் திரும்பியது. மயிலாடுதுறையில் பெருங்கதை விழாவின்போது அவர் உதிர்த்த சிலேடை இது. என் தம்பி கூட்டத்திற்கு வந்திருந்தார். ""ஐயா, என் தம்பி, பெயர் இராசாமணி, இங்கே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கிறார்'' என்று அறிமுகம் செய்துவைத்தேன். ""ஓ நீங்கள் ஞானம், அவர் விஞ்ஞானம்'' என்றார்.

இதனைக் கேட்டுச் சுவைத்த கிருஷ்ணன், தம் அனுபவம் ஒன்றைத் தெரிவித்தார். அவர் தமக்கை வீட்டுக்கு அருகில் பேசுவதற்குச் சென்ற கி.வா.ஜ.வை, தம் தமக்கை வீட்டுக்கு உணவு உண்ண அழைத்துச்சென்றார் கிருஷ்ணன். அவர் தமக்கையார் கி.வா.ஜ.வைப் பார்த்து, ""அவசரத்தில் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை, பூரி செய்து வைத்திருக்கிறேன். உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ தெரியவில்லை'' என்று தயக்கத்தோடு கூறினார். உடனே, ""பூரி ஜகந்நாதனுக்குப் பிடிக்காமல் இருக்குமா?'' என்றாராம். பூரியில் ஜகந்நாதன் உகந்தருளியிருப்பதை உள்ளத்தில் கொண்டு உதிர்த்த இந்தச் சிலேடை நயம் மிக்கது.

அருள்மிகு ஜகந்நாதர் ஆலயம் ஒடிசா மாநிலம் பூரி நகரில் நெடிது உயர்ந்து நிற்கிறது. 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதன் கருவறையில் மரத்தாலான ஜகந்நாதர், பலராமர், சுபத்திரை ஆகியோர் உருவங்கள் உள்ளன. அவ்வாலயத் திருவிழாக்களில் முதன்மையானது ஆடி மாதம் வளர்பிறை இரண்டாம் நாள் நிகழும் தேரோட்டம். அன்று தெய்வ உருவங்களைத் தேரில் எழுந்தருளச்செய்து, நூற்றுக்கணக்கான அடியார்கள் வடம்பிடித்து இழுத்துச் செல்வார்கள். அத்தேர் நிலையடிக்குத் திரும்ப நெடுநாள் ஆகும். அப்பெருந்தேர் செல்லும்போது கூட்ட நெரிசலால் விபத்து நேரிடுவது உண்டு. ஒரு சிலர் எதிர்பாராமல் தேர்க்காலில் சிக்கி நசுங்குவதும் உண்டு. ஒரு சில நேரங்களில், பக்திப் பரவசத்தில் ஒரு சிலர் ஓடிவரும் அத்தேர்முன் தாவிப் பாய்வதும் உண்டு. அப்போது வேகமாக ஓடிவரும் அத்தேரினைச் சடக்கென நிறுத்த முடியாமையால் சக்கரத்தில் அரைபட்டு மடிவர். இது பற்றிய குறிப்பு 14ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஒருவரால் எழுதப்பட்ட பயண நூல் ஒன்றில் காணப்படுகிறது.

இந் நிகழ்ச்சியையொட்டி, எதிர் நின்றால் நசுக்கிவிடக்கூடியதும் தடுக்க முடியாததுமான பெரிய வாகனத்தையும் ஆற்றலையும் இயக்கத்தையும் குறிக்க Juggernaut  என்னும் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஜகந்நாதன் என்பது "புவிக்கு நாயகன்' என்று பொருள் தரும் வடசொல். அது வெள்ளைநாவில் புகுந்து வெளியேறியபோது ஜாகர்நாட் (Juggernaut ) என்று உருமாறிவிட்டது. இதனை,

கா. மு. சிதம்பரம் - ஊழிப்பெருவிசை

சந்திரா மனோகரன் - சுயபலி

ப. இரா. இராச அம்சன் - தேவு எழுந்தருள் ஊர்தி, பூரி ஜெகந்நாதரின் பெரிய தேர்

என். ஆர். ஸத்யமூர்த்தி - எதிரிலாப் பெருந்திறன், தடை தகர் பெருந்திறன்

கோ. மன்றவாணன் - தனிப்பேராற்றல் (உலகப்பன் - சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு)

வெ, ஆனந்த கிருஷ்ணன் - மக்கட்பலி போற்றும் பண்பு - என்று தமிழாக்கம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

Juggernaut  என்பதன் கருத்தினை உள்ளத்திற்கொண்டு அதனைப் "பூரித்திருத்தேர்' என்று தமிழாக்கம் செய்யலாம் என்றும், அவ்வாகனம் அல்லது பேரியக்கத்தின் முன் நின்றால் நசுங்கிப் போய்விடுவோம், ஏனெனில் அஃது ஒரு பூரித் திருத்தேர் என்று கையாளலாம் என்றும் கருதியிருந்தேன். நண்பர்களின் கருத்தை அறிந்தபின் "உலகப்பன் பெருந்தேர்' என்று தமிழாக்கம் செய்வது பொருத்தம் என்று தோன்றுகிறது. ஏனெனில், முதன்மை உலகப்பருக்குத்தானே தவிர, பூரிக்கு அன்று.

Juggernaut  - உலகப்பன் பெருந்தேர்

அடுத்த வாரத்திற்குரிய சொல்  Eustress  ( யூஸ்டிரஸ் )

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.