சென்ற மாதம் 5-10-2015 தனித்தன்மையுடைய நாள். அதனைத் தலைகீழாக ஒவ்வொரு எண்ணாகப் படித்தாலும் அதே நாள்தான் வரும். இதனை Palindrome என்று குறித்திருந்தனர். இதனைப் படித்தபோது எனக்குச் சிறுவயதில் வகுப்புத் தோழர்களோடு விகடகவி, தேரு வருதே, தேளு மீளுதே என்று எழுதித் தலைகீழாகப் படித்து மகிழ்ந்த சொல் விளையாட்டும் 2112, 4224 போன்று மகிழுந்துகளுக்கு அமைந்துள்ள கவர்ச்சி எண்களும் நினைவுக்கு வந்தன. கா.மு. சிதம்பரம் தமது மடலில் குழலழகு, மானமா என்னும் அழகான இரு சொற்களைக் குறித்துள்ளார்.
ஆங்கிலத்தில் இப்படி அமைந்த சொற்களும் சொற்றொடர்களும் பற்பல. Rotator, tenet போன்ற பொருள்களின் பெயர்களும் dad, mam, nun முதலான பொதுப்பெயர்களும் Anna, Arora, Bob, Natan, Nission போன்ற ஆட்களின் பெயர்களும், Notton (இங்கிலாந்து) Semmes (அலபாமா) Allagalla (இலங்கை) Ruppur (வங்க தேசம்) ஆகிய இடங்களின் பெயர்களும் இவ்வகையில் அமைந்தன. ஆங்கிலத்தில் மலையாளத்தை Malayalam என்று எழுதினாலும், கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகத்தை Mahamaham என்று எழுதினாலும் அவை Palindrome ஆகிவிடும். புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் ஒருவரின் பெயர் ROBERT TREBOR. இதனைத் திருப்பிப் படித்தாலும் அப்பெயர்தான் வரும்.
முனைவர் எஸ்.ஜெயபாரதி Palindrome குறித்து எழுதியுள்ள கட்டுரையில், நெப்போலியன் சொன்னதாக வழங்கும் சுவையான எடுத்துக்காட்டு ஒன்றைக் குறித்துள்ளார். போரில் தோல்வி கண்ட நெப்போலியனைப் பகைவர்கள் முதலில் எல்பா என்னும் தீவுக்கு நாடுகடத்தினார்கள். அங்கிருந்து தப்பிய போதிலும் அவனால் முன்போல் எழுந்திருக்க முடியவில்லை. மீண்டும் பகைவர்களிடம் சிக்கிக்கொண்டான். அவனைச் செயிண்ட் ஹெலெனா தீவுக்கு நாடுகடத்தினார்கள். அங்கேயே அவன் வாழ்வு முடிந்தது. இலக்கிய வரலாற்றாசிரியர்கள் "ABLE WAS I ERE I SAW ELBA' என்று அவன் கூறினான் என்பர். இதனை மறுமுனையிலிருந்து படித்துப் பாருங்கள். அதே தொடர்தான் வரும்.
÷தமிழில் சொற்களும் தொடர்களும் மட்டுமின்றிப் பாடல்களும் அமைந்துள்ளன என்பது பெருமைக் குரியதாகும். திருஞானசம்பந்தர் சீகாழி குறித்துப் பாடியுள்ள பதிகங்களுள் ஒன்று இவ்வகையில் அமைந்துள்ளது. பாம்பன் சுவாமிகளும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் இவ்வகைப் பாடல்களைப் புனைந்துள்ள வல்லாளர்கள். இத்தகைய பாடலை "மாலைமாற்று' என்று அணியிலக்கணம் குறிக்கிறது. இது சித்திரக்கவி. பாடலை முதலிலிருந்து ஒவ்வோர் எழுத்தாகக் கடைசிவரை படித்தாலும், கடைசியிலிருந்து ஒவ்வோர் எழுத்தாக முதல்வரை படித்தாலும் மாறாமல் பாடல் அமைந்திருப்பது "மாலைமாற்று' என்பதன் இலக்கணம்.
இதற்கேற்ப Palindrome என்பதை எத்திசையிலிருந்து படித்தாலும் ஒரேவகையாக இருக்கும் எண், சொல், தொடர், பாடல் என்று வரையறுத்துக் கூறலாம். இதற்குரிய வேர் Palin dromes என்னும் கிரேக்கச் சொல்லாகும். அச்சொல்லிற்கு மீண்டும் பின்புறமாக ஓடுவது என்பது பொருள்.
÷இது சொற்சிலம்பம்தான். சொற்சிலம்பம் என்பது சிலேடை, யமகம் போன்றவற்றையும் குறிப்பது; விரிந்த பொருளுடையது. சொற்சதுரம் என்பதும் அத்தகையதே. எனவே, நேரடியாகப் பொருள்தரும் வேறு சொல்லைத் தேடலாம். என்.ஆர். ஸத்யமூர்த்தி குறித்துள்ள மாலைமாற்று, இருவழியாட்டம், முன்பின் ஆட்டம் என்னும் சொற்கள் கருதற்குரியன. ஆட்டம் என்னும் சொல் விளையாட்டையே பொதுவாகக் குறிக்கும். எழுத்துகள் முன்னும் பின்னும் ஓடுவதால் இருவழியோட்டம், முன்பின்னோட்டம் என்று மாற்றிக்கொள்ளலாம். ப.இரா. இராசஅம்சன் இருவழி ஒக்கும் சொல், முன்பின் ஒப்புச்சொல் என்பவற்றைத் தந்துள்ளார். கோ.மன்றவாணன் மாலைமாற்று, இருதலைச் சொல், சொல்சுழற்சி போன்றவற்றைக் குறித்துள்ளனர். இருதலை என்பது நல்ல சொல்லாட்சி.
கா.மு.சிதம்பரம் துடி(உடுக்கை) எப்பக்கத்திலிருந்து நோக்கினும் ஒருதன்மையாக இருப்பது போன்று இச்சொல் இருத்தலின் இதனைத் துடிமொழி என்றோ, இருமுனையும் சூலத்தோடு கூடியதாய் இடைப்பகுதி சிறுத்திருக்கும் வச்சிராயுதம் போன்று இருத்தலின் வச்சிரச்சொல் என்றோ கூறலாம் என்கிறார். இவ்விரு சொற்களும் கற்பனைநயம்மிக்கன. எனினும், மாலைமாற்று இவற்றினும் அழகானது. அதனைப் பலரும் குறித்துள்ளனர். ஆதலின் மாலைமாற்று என்பதே பொருத்தம்.
÷சித்திரக்கவி பற்றிய "கோமூத்திரி' என்னும் நூற்பா உரை, ""அவ்வெழுத்து மடக்கு அலங்காரத்துட் படுவன சில மிறைக்கவியாமாறு உணர்த்துதல் நுதலிற்று'' என்று தொடங்குகிறது. இதனால் இஃது எழுத்து மடக்கு அலங்காரம் என்பதனுள் அடக்கும் என்பது தெரிகிறது. ஆதலின் அதனையொட்டி இருதலைச் சொல், இருவழியோட்டம் என்பதனினும் இருதலை மடக்கு என்று குறிக்கலாம். இது சொல், தொடர், பாட்டு, எண் எல்லாம் மடங்கி வருதலைக் குறிப்பதாக அமையும்.
Palindrome - மாலை மாற்று (அ) இருதலை மடக்கு
அடுத்த வாரத்திற்குரிய சொல் : கதைகளிலும் திரைப்படத்திலும் வரும் Villain
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

