வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சொல் தேடல் -36

ஒரு நாட்டின் செய்திப் பரிமாற்றத்தில் தலைமை இடம் பெறுவன செய்தித்தாளும் தொலைக்காட்சியும் ஆகும். படித்தவர்க்கு மட்டுமே பயன்படுவது செய்தித்தாள். படிக்காதவர்க்கும் பயன்படுவது தொலைக்காட்சி.

Updated On :28 நவம்பர் 2015, 7:11 pm

ஒரு நாட்டின் செய்திப் பரிமாற்றத்தில் தலைமை இடம் பெறுவன செய்தித்தாளும் தொலைக்காட்சியும் ஆகும். படித்தவர்க்கு மட்டுமே பயன்படுவது செய்தித்தாள். படிக்காதவர்க்கும் பயன்படுவது தொலைக்காட்சி.

நம் நாட்டில் சிறந்து விளங்கிய தலைவர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்தால், அவர்கள் ஏதேனும் ஓர் இதழை நடத்தியவர்களாக இருப்பர். அல்லது ஓர் இதழைத் தம் கருத்துகளைச் சுமந்துசெல்லும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களாக இருப்பர். அண்ணல் காந்தியடிகள் இந்தியன் ஒபீனியன், யங் இந்தியா, நவஜீவன், ஹரிஜன் போன்ற இதழ்களை நடத்தி நாட்டு மக்களைப் போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தியுள்ளார். மகாகவி பாரதியார் சுதேசமித்திரன், இந்தியா, சக்கரவர்த்தினி, பால பாரதா, விஜயா போன்ற இதழ்களின் வாயிலாகச் சுதந்திரக் கனலை வளர்த்துள்ளார். தமிழ்த் தென்றல் திரு.வி.க. தேசபக்தன், நவசக்தி என்னும் ஏடுகளால் நாட்டுக்கும் மொழிக்கும் தொண்டு புரிந்துள்ளார்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் வெளிவந்த இதழ்களின் நோக்கம் நாடு சுதந்திரம் பெறுவதுதான். அவற்றில் உண்மை ஒளிர்ந்தது. ஆனால், நாடு விடுதலை பெற்றபின் கட்சிகளுக்கு ஆட்சியைப் பிடிப்பதே நோக்கம் ஆயிற்று. அதனால், ஒன்றை ஒன்று குறைகூறும் நிலை உண்டாயிற்று. அடுத்தவர் மீது சேற்றை வாரி இரைக்க முற்பட்டனர். தங்கள் செல்வாக்கைச் சரியாமல் காத்துக்கொள்ளக் கட்சிகளுக்கு நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் தவிர்க்க இயலாத தேவைகள் ஆகிவிட்டன. இவ்விரண்டும் இல்லாமல் எந்தக் கட்சியும் வளர்வது முயற்கொம்பே. இதனால் அரசியல்வாதிகள் சிலர் பணத்தாலோ வேறு உதவியாலோ செல்வாக்குள்ள ஏடுகள் சிலவற்றைத் தங்களுக்கு இணக்கமாகச் செயல்படும்படி செய்துவிடுகின்றனர். இதன் விளைவு இதழ்களின் நேர்மை குலைந்துபோகிறது.

பேராசிரியர் மு.வ. தமிழறிஞர் மட்டும் அல்லர்; படைப்புத்திறனும் பெற்றவர். அதனால் வகுப்புகளில் உவமைகள் கூறிக் கருத்தை அழகாக விளக்குவார். ஒருமுறை வகுப்பில் திறனாய்வாளனுக்கு இருத்தற்குரிய நடுவுநிலைமைப் பண்பினை கீழ்வருமாறு விளக்கினார்: ""சென்னைக் கடற்கரையில் ஒரு கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது. அதனை நாளிதழ்கள் எவ்வாறு தெரிவிக்கும் என்றால், அந்தக் கட்சியைச் சார்ந்த நாளிதழ் கடல் அலைகளோ மக்கள் தலைகளோ என்னும்படி பெருங்கூட்டம் கூடியது என்று எழுதும்; எதிர்க்கட்சியின் ஏடு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை, நூறு நூற்றைம்பது பேர் வந்திருந்தனர். அதிலும் பெரும்பகுதி கடலைப் பார்க்க வந்த கூட்டம் என்று எழுதும்; நடுவுநிலையோடு இருக்கும் நாளிதழ் சுமார் இரண்டாயிரம் பேர் வந்திருந்தனர் என்று உண்மை நிலையைக் கூறும்'' என்றார். நாளிதழ், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் நடுவுநிலையோடு இருந்தால்தான் உண்மை வெற்றி பெறும். அறம் வெல்லும், பாவம் தோற்கும். இன்றைக்கு நடுவுநிலையோடு ஒரு செய்தித்தாள் இயங்குவது அரிதினும் அரிது.

இன்று சில செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் கட்சிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் விலைபோய் விடுகின்றன. அதனால் அவற்றின் செயலில் சத்தியக்கனல் அணைந்துபோகிறது. அவை உண்மையை ஒதுக்கிப் பொய்க்கு மகுடம் புனைகின்றன. காசுக்காகத் தாங்கள் ஆதரிப்போரின் பொல்லாத செயல்களை நற்செயல்களாகவும் எதிர்ப்போரின் நற்செயல்களைப் பொல்லாதனவாகவும் புனைந்துரைக்க நேர்கிறது. பொருளுக்காக உடலை விற்கும் விலைமகளிரைப் போல இவ்வூடகங்களும் தங்கள் நேர்மையை விற்கின்றன. கற்பை இழந்து இழிவடையும் விலைமகளைப் போல நேர்மையை இழந்து இதழ்கள் தாழ்வடைகின்றன. இப்படிச் செயற்படும் ஊடகத்தினைக் குறிக்கும் சொல்தான் prostitute.

prostitute என்னும் பெயர்ச்சொல் நடுவுநிலையோடு இருப்பதாகக் காட்டிக்கொண்டு, அரசாங்கத்திற்கோ தொழிலதிபர்களுக்கோ ஏற்றாற்போல் செய்திகளைத் திரித்தும் மாற்றியும் கூட்டியும் தரும் நிருபரையும், ஒலிபரப்பாளரையும் ஊடகத்தையும் குறிக்கும். இது press, prostitute என்னும் இருசொற்களின் இணைப்பால் வந்தது. இருவரும் பணத்திற்காகத் தங்களை விற்பவர்கள் என்னும் தன்மையினைக் காட்டுவது. இச்சொல்லை உருவாக்கியவர் Gerald Celente. இச்சொல் இன்னும் ஆங்கில அகரமுதலிகளில் இடம்பிடிக்கவில்லை. அதனால், நண்பர்கள் சிலர் இதன் பொருளை உணர்ந்து தமிழாக்கம் செய்ய முடியாமல் இடர்ப்பட்டுள்ளனர்.

கோ. மன்றவாணன் பரத்தமை இதழாளர், நெறிபிறழ் இதழாளர், சோர ஊடகர் என்றும்; என். ஆர். ஸத்யமூர்த்தி பரத்தமை ஊடகம், கற்பில் ஊடகம், தகவில் ஊடகம் என்றும்; சந்திரா மனோகரன் ஊடகப் பரத்தமை, ஒருபுறச்சாய்வு ஊடகச் செய்தியாளர் என்றும்; கா.மு. சிதம்பரம் அச்சுப் பரத்தை, பூவிலைப் பத்திரிகை, மன்றோர மடல் என்றும்; என். சுரேஷ் ஒத்துரையாளர் என்றும் குறிக்கலாம் என்கின்றனர். இவற்றுள் பூவிலை அழகான இலக்கியச் சொல். அது போகத்திற்காகத் தரப்படும் விலையையே குறிப்பது. மடல் கடிதத்தையே குறிக்கும். ஒத்துரையாளர் என்பது பின்பாட்டுப் பாடுபவர் என்று மட்டுமே பொருள்படும். பரத்தைக்கு ஆண்பால் பரத்தன். நண்ணேன் பரத்தநின் மார்பு (1311) என்பது குறள். அதனையொட்டி ஊடகப் பரத்தர் எனலாம். அன்றேல், மன்றோர மடல் என்னும் சொல்லையும் கருத்தில் கொண்டு ஓரம் போகு ஊடகர் என்னும் ஒருசொல் படைக்கலாம். ஒருபக்கச் சார்பினைக் குறிக்கும் சொல் ஓரம்.

Presstitute - ஊடகப் பரத்தர் (அ) ஓரம் போகு ஊடகர்

அடுத்த வாரத்திற்குரிய சொல் :Pace maker

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.