கொம்பை வெட்டிக் காலை நடு!
பிறவியிலேயே கண்பார்வை இழந்தவராய் பிறந்திருந்தும் தமிழ்ப் புலமை நிரம்பியவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார். இவருடைய பாடல்கள் சொற்சுவையும் பொருள் நயமும் உடையவை. ஒருமுறை இவர் சந்திரவாணன் மீது கோவை பாடிக்கொண்டிருந்தார்.


பிறவியிலேயே கண்பார்வை இழந்தவராய் பிறந்திருந்தும் தமிழ்ப் புலமை நிரம்பியவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார். இவருடைய பாடல்கள் சொற்சுவையும் பொருள் நயமும் உடையவை. ஒருமுறை இவர் சந்திரவாணன் மீது கோவை பாடிக்கொண்டிருந்தார்.
மாலே நிகராகுஞ் சந்திரவாணன் வரையிடத்தே
பாலேரியாயத் தேன்மாரி பெய்யநற்
பாகுகற்கண்டாலே
யெருவிட முப்பழச் சேற்றின அமுதவயன்
மேலே முளைத் தகரும்
போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே!
இந்தச் செய்யுளை கவிஞர் தன் மாணவனுக்குச் சொல்லி அவரை ஏட்டில் எழுதப் பணித்தார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த திருப்பனைங்காட்டைச் சேர்ந்த அம்மைச்சி என்னும் மங்கை ""கவிராயருக்குக் கண்தான் கெட்டது - மதியும் கெட்டதோ? கரும்பு சேற்றில் முளைக்காது என்பது தெரியவில்லையே'' எனச் சொன்னார். இதனைச் செவிமடுத்த புலவர் அம்மங்கையின் கூற்றை ஆய்ந்து சரி எனப்படத் தன் மாணவனிடம் "கொம்பை வெட்டி காலை நடு' என்றார். மாணவரும் அதனைத் தெரிந்து கொண்டு சேற்றின என்பதனைச் சாற்றின என மாற்றம் செய்து படித்தார். கேட்டுக் கொண்டிருந்த புலவர்கள் யாவரும் களிப்பெய்தனர்.
திருமாலுக்கு நிகரான சந்திரவாணன் வாழுமிடத்தே ஏரிகளிலெல்லாம் பாலாகப் பாய்ந்து செழிக்க மாரி தேனாகப் பொழிகிறது. கற்கண்டால் வயல்களுக்கு எருவிட்ட அந்நிலத்தில் முப்பழங்களாலான சாற்றில் விளைந்த கரும்பின் சுவையை ஒத்திருக்கிறது இம்மங்கையின்
மேனியெங்கும் எனச் சுவைபடப் பாடல்
அமைந்ததற்கு புலவர்கள் யாவரும் கவிராயரை வாழ்த்தினர்.
இப்படி ஓர் அருமையான பாடலைப் பாடிய கவிராயர் பாடலைக் கேட்க வந்த மங்கை சொன்ன திருத்தத்தையும் ஏற்றுச் செயல்பட்டது அவரது பணிவைக் காட்டுகிறது.
-புலவர் ப.சோமசுந்தரவேலாயுதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...