அரும்பு மலராகிக் காயாகிக் கனியாகி உதிர்வது இயற்கையின் நியதி. அதுபோல மனிதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முதிர்ந்து விழுவது அடுக்கும். ஆனால், அரும்புகள் சிதைவது சரியா? செங்காய்கள் அடிபட்டு வீழ்வது முறையா? முற்றும் கனியாத பழங்கள் உதிர்வது சரியா? இந்தக் கொடுமைதான் நாளும் நம் நாட்டுச் சாலைகளில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சாலை விபத்தில் எத்தனை பேர் நசுங்கி அநியாயமாக மடிகிறார்கள்.
சராசரியாக நாட்டில் மூன்று மணித்துளிக்கு ஒரு விபத்து நடக்கிறது என்னும் தகவல் அதிர்ச்சி அலைகளை எழுப்புகிறது. இக்கொடுமை நிகழாமல் இருப்பதற்குத் தகுந்த நடவடிக்கைகளில் அரசும் பொதுமக்களும் இன்னும் அதிகமாகக் கருத்துச் செலுத்த வேண்டும்.
விபத்து நேர்வதற்கு அடிப்படையான காரணங்கள் மூன்று. ஒன்று, ஓட்டுபவரின் நிலை; இரண்டு, வாகனங்களின் நிலை; மூன்று, சாலைகளின் நிலை. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதுபோல் கடுமையான தேர்வு நடத்தி ஓட்டுநர் உரிமம் வழங்கும் நிலை இங்கு இல்லை. பணம் கொடுத்தால் ஓட்டிக் காட்டாமலே உரிமம் கிடைத்துவிடுகிறது. சாலைவரி கட்டுவதற்குப் புகைவிடா வண்டிகள் என்ற அறிவிப்போடு வரும் வண்டிகளுக்குக்கூடப் புகைவெளியேற்றச் சான்றிதழ் பெற வேண்டும் என்று வற்புறுத்தப்படும் நாட்டில்தான் காவலர்களின் கண்ணெதிரே சில தானிகளும் சரக்குந்துகளும் பேருந்துகளும் சாலையைப் புகைமண்டலமாக்கிக்கொண்டு ஓடுகின்றன. விதிகள் பயணத்தை மேம்படுத்துவதற்கு உதவாமல் சிலரின் பையை நிரப்புவதற்கு வழிவகுக்கின்றன. நல்ல நிலையில் உள்ள வண்டிகளைத் தேர்ந்த ஓட்டுநர் ஓட்டும்போது கேடு நிகழ்வதற்குக் காரணம் சாலைகளின் மோசமான நிலைதான்.
இப்பொழுது நம் நாட்டில் சாலைகள் மேம்பட்டு வருகின்றன. அவற்றை இரண்டாகப் பிரித்து நடுவே தடுப்பு எழுப்பிப் போவதற்கும் வருவதற்கும் தனித்தனிப் பாதைகளை அமைத்தல், அங்கங்கே வேகத் தடைகள் எழுப்புதல், சாலையின் ஓரங்களில் வண்ணக் கோடுகளால் அடையாளம் இடுதல் போன்ற வேலைகள் நடைபெறுகின்றன. சென்னையின் சில பகுதிகளில் சாலைகளில் கோடுகளும் ரிப்ளெக்டர்களும் அமைத்திருப்பது பயணிகளுக்குப் பேருதவியாக உள்ளது. கண்களைப் பாதுகாக்க அமைந்த இமைகளிலிருந்து சில நேரங்களில் முடி கண்ணில் விழுந்து கண்ணை உறுத்துவது போலப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட வேகத்தடையின்மீது வெண்ணிறக் கோடுகளோ ரிப்ளெக்டர்களோ இல்லாமல் இருப்பதால், வேகமாக வருபவர்கள் வண்டியின் வேகத்தைக் குறைக்காமல் அதன்மீது ஏறி விபத்துக்கு ஆளாகிறார்கள். சாலையின் ஓரங்களிலும் திருப்பங்களிலும் வேகத்தடைகளின் முன்னும் பின்னும் reflector பதிப்பதும் அவற்றை அடிக்கடி புதுப்பிப்பதும் விபத்துகள் நேர்வதைத் தடுக்கும்.
ஓட்டுநர்களுக்கு உதவியாக இருக்கும் reflector ஐத் தமிழில் எப்படிக் குறிப்பது?
பேராசிரியர் எதிராஜுலு எதிரொளிப்பான் என்றும், ஞா. அருண்மொழி ஒளிரி என்றும், ஞா. மாதவன் ஒளிதிருப்பி என்றும் வழங்கலாம் என்கின்றனர். டி.வி. கிருஷ்ணசாமி பிரதிபலிப்பு, பிரதிபலிப்பான், ஒளிப்பான் என்னும் சொற்களையும், சந்திரா மனோகரன் ஒளி வில்லை, ஒளிமுகப்பு வில்லை, பளபளப்பான் என்னும் சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர்.
ப. இரா. இராச அம்சன் ஒளிதிருப்பி, சாலைத்தள ஒளிக்குறி, தடமுணர் ஒளிரி ஆகிய சொற்களையும் கா.மு. சிதம்பரம் சாலை எதிரொளிப்பான், சாலை ஒளிதிருப்பி, ஒளியுண்டுமிழி ஆகிய சொற்களைக் கருதலாம் என்கின்றனர். மன்றவாணன் ஒளிரி, ஒளிர்வில்லை, ஒளிர்பட்டை, ஒளித்தெறிப்பு ஆகிய சொற்களைத் தந்துள்ளார்.
கரப்பான், பூரான் என்று "ஆன்' விகுதி ஒருசில இடங்களில் அஃறிணைப் பொருள்களைக் குறிக்குமெனினும் பெரும்பாலும் உயர்திணை ஆண்பாலைக் குறிப்பதற்கே வரும். ஆதலின் ஆன் விகுதி யோடு முடியும் சொற்களை விடுத்துப் பிறிதொரு சொல்லை உருவாக்குவது சிறப்பு. ஒளியுண்டுமிழியும் தடமுணர் ஒளிரியும் ஆசிரியப்பாவின் இருசீர்கள் போல் அமைந்துள்ள நல்ல தமிழாக்கங்கள். எனினும் நீளமானவை வழங்குவதற்கு அரியவை.
ஒளி திருப்பி, ஒளி வில்லை, ஒளிரி மூன்றும் பொருளின் தன்மையை உணர்த்தும் எளிய சொற்கள். இம்மூன்றில் ஒளி வில்லை எளிமையானது; சிறுதுண்டினை "வில்லை' என்பது பேச்சு வழக்கு. அதனினும் ஒளிரி சுருக்கமாக உள்ளது. அதனால் ஒளிரி எனலாம். இந்தப் பளபளக்கும் பொருளினைக் குறிக்க இன்னொரு சொல்லையும் எண்ணிப் பார்க்கலாம். ஒளி தொடர்ந்து வீசுவது. மின்னல் அவ்வப்போது விட்டு விட்டு வீசுவது.
reflector எப்போதும் ஒளி வீசுவதில்லை; தன்மீது ஒளிபடும் போது மின்னுகிறது. ஆதலின் மின்னி என்பது இன்னும் பொருத்தமாகத் தோன்றுகிறது. மின்னலின் வேறானது என்பதனை அறிய இகர விகுதி பயன்படும். சாலையில் பதிக்கப்பட்டிருந்த மின்னிகளால் / ஒளிரிகளால் அங்கே வேகத்தடை இருப்பது தெரிந்தது என்று தொடரில் ஆளலாம்.
Reflector - மின்னி அல்லது ஒளிரி
அடுத்த வாரத்திற்குரிய சொல் : பிறந்த குழந்தைகளைக் கிடத்திவைக்கும் Incubator
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

