பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அங்கவை, சங்கவை - புரியாத புதிர்!

அங்கவை, சங்கவை எனும் பெயர் கொண்டவர்கள் யாரென்று கேட்டால், வள்ளல் பாரியின் பெண்கள் என்று பலரும் கூறுவர்.

News image
Updated On :21 மே 2016, 7:10 pm

அங்கவை, சங்கவை எனும் பெயர் கொண்டவர்கள் யாரென்று கேட்டால், வள்ளல் பாரியின் பெண்கள் என்று பலரும் கூறுவர். உண்மையில் பாரியின் பெண்களுடைய பெயர்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ""அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்'' என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலின்(112) அடியில் பாரி மகளிர் என்றே குறிக்கப்பட்டுள்ளது.
 ÷பாரியின் மக்களின் பெயரில் அறியப்படும் பாடல் இதுவொன்றே. மகளிர் என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஒருவருக்கு மேற்பட்ட பெண் மக்கள் பாரிக்கு இருந்தனர் என்று அறியப்படுகிறது. மற்றெந்த நேரடிச் செய்தியும் இவர்களைப் பற்றி அறியக் கிடைக்கவில்லை. இப்படியிருக்க, பாரியின் பெண்களுடைய பெயர்களென்று முற்கூறப்பட்ட பெயர்கள் அறியப்பட்டது எப்படி?
 ÷ 1937-ஆம் ஆண்டு தமிழறிஞர் இரா.இராகவையங்காரால் யாக்கப்பட்ட 753 வெண்பாக்களாலான "பாரிகாதை' என்றொரு நூல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் நூலாக வெளிவந்தது. அதன் முன்னுரையில், மாம்பாக்கம் திருச்சிற்றம்பல நாவலர் என்பார் பாடிய அண்ணாமலைச் சதகத்தில், பாரியின் மகள்களுடைய பெயர்கள் முற்கூறப்பட்டவாறு சுட்டப்பட்டுள்ளனவென்று குறிப்பிட்டுள்ளார். அச்சதகத்தில் பாரி சிங்கள நாட்டையாளும் மன்னன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 "சிங்கள மெனுந்தேய முழுதாளு மன்னன்
 சிறந்தபேர்ப் பாரி சாளன்
 செய்தவப் பயனாற் பிறந்தநற் குணமான
 சிறுமி யங்கவை சங்கவை
 மங்கையர்க ளிருவரை வளர்த்தெடுத் தெளவையார்
 மாமுகக் கணபதி கையான்
 மணவோலை யெழுதிமூ மன்னரைக் கோவலூர்
 வரவழைத் தறுகி டற்குத்
 தங்கிப் பனந்துண்ட மரமாகி யேபழந்
 தரநதிப் பெண்ணை நெய்பால்
 தான்வரப் பாடியப் பெண்களைத் தெய்விகத்
 தலைவன் மணம் புரியவே'
 
 இப்பாடலில், ஒளவையார் இயற்கையை மீறிய ஆற்றலுடையவராகக் காட்டப்பட்டுள்ளார். கணபதியை வரவழைத்து மூவேந்தர்க்கும் ஓலை எழுதச் சொன்னாராம். அவர், பாடலியற்ற அதைக் கேட்டுப் பனைமரத்துத் துண்டமொன்று வளர்ந்து மரமாகிப் பழம் கொடுத்ததாம். அவ்வாறே பெண்ணையாற்றில் நீருக்குப் பதிலாக நெய்யும் பாலும் ஓடச்செய்தாராம். இவற்றைப் பார்த்து வியந்த திருக்கோவலூரை ஆண்ட தெய்வீகன் என்னும் மன்னன் அவ்விருவரையும் மணந்தாராம்.
 ÷ குடவாயில் பாலசுப்பிரமணியனார் எழுதிய "கபிலக்கல்' (2000) என்ற நூலில், 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவலூர்ப் புராணத்தில் கபிலச் சருக்கம் எனும் பகுதியில் பாரியைப் பற்றியும் அங்கவை சங்கவை எனும் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். மேலும், 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த "தமிழ் நாவலர் சரிதை' என்ற நூலில் ஒளவையார் பாடியனவாகவுள்ள வெண்பாக்கள் ஒன்பதனுள் அங்கவை (பாரிமகள், அங்கவையைக் கொள்ள - வெண்பா 4) என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணாமலைச் சதகத்தில் குறிக்கப்பட்டதைவிடக் கூடுதலாக இந்நூலில், ஒளவையார் வருணனை நோக்கிப் ""பொன்னை மழையாகப் பொழி''(9) என்று ஆணையிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. நம்பகத்தன்மையற்ற பல செய்திகள் இதன்கண் உள்ளன. பாரி சிங்கள நாட்டு மன்னன் எனக்கூறும் சதகத்தின் மற்றைய
 செய்திகள் உண்மையாக இருக்குமா என்ற ஐயம் எழுகிறது!
 ÷சதகம், சரிதை, புராணம் ஆகிய மூன்றும் ஏறக்குறைய ஒத்த செய்திகளையே தருகின்றன. சதகத்தின் காலம் இன்னதென்று தெரியவில்லை. இம்மூன்றனுள் எது காலத்தால் முந்தியதென்ற சரியான காலக்கணிப்புச் செய்ய வேண்டியதும், எதிலிருந்து எது கடன் பெற்றதென்று ஆய்வு செய்வதும் அறிஞர்தம் கடமையாகும். எது எப்படியாயினும், மூன்று நூல்களும் தரும் செய்திகள், பாரி ஆட்சி செய்த பின் பன்னூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவை. வெண்பா யாப்பும், விநாயகர் வணக்கமும் சங்க இலக்கிய நூல்களில் பயின்றுவரவில்லை. வெண்பா கலிப்பாட்டில் கலந்து வந்துள்ளதேயன்றித் தனித்தெங்கும் பயன்படுத்தப்படவில்லை.
 ÷ ஆகவே, இவற்றில் உண்மையிருக்கும் வாய்ப்பில்லை. தமிழ் நாவலர் சரிதையின் கதையை அடிப்படையாகக் கொண்டு நீலச் சிற்றாடை என்றொரு நாடகம் மிகப் பிற்காலத்தில் எழுதப்பட்டு, தமிழ்நாடு அரசின் ஐந்தாம் வகுப்புப் பாடநூலில் (1993) இடம்பெற்றது. அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் இப்பெயர்கள் பயன்படுத்தப் பெற்றதால், அதனைப் பயன்படுத்தியவர்கள் சர்ச்சைக்கு ஆளாயினர். இப்பெயர்கள் உண்மையில் பாரிமகளிருடன் தொடர்பற்றவை எனினும், தவறாகச் சித்திரிக்கப்பட்டால் கண்டிக்கத்தக்கதே.
 ÷ இராம. ஆநிரைக்காவலன் என்பவர் எழுதிய புறநானூறும் கபிலர் கல்வெட்டும் என்ற நூலில் (2002), இந்நூலாசிரியரும் பாரிமகளிரை இப்பெயர்களாலேயே குறிப்பிட்டுள்ளார். ஆகவே, உண்மையை அறிந்து போற்றுவோம்.
 -கி. சிவா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.