

கவிதையை தன் பொருள் அடிப்படையில் துய்க்க, முதலில் அதன் சொல்லாட்சித் திறன்தான் நெஞ்சைக் கவ்வும். அவ்வுணர்வில் தோயத் தோயக் கண்டறியப்படுவதே கவிதைக்கான அணி இலக்கண மாண்பு. அவ்வகையில், உவமை என்ற ஒன்றிலிருந்தே எல்லாவிதமான அணிகளும் கிளைப்பதென்ற தொல்காப்பியக் குறிப்பின்படி இலக்கியப் படைப்புகள் வீறு கொள்கின்றன. இந்த அடிப்படையில் உவமைக்கு அடுத்ததாக வருவது உருவகம்.
புலன் உணர்வின் வழிக் கவிதையைத் துய்க்கும் ஓர் உளவியல் தொடர்புடைய தேடலே உருவகமாகும். மதிமுகம் - நிலவு போன்ற வட்ட வடிவமான முகம் என உவமை வழிக் கருத்தை உணர்கிறோம். ஆனால், அதனையே முகமதி எனும்போது முகமே மதி, மதியே முகம் என இவ்விரண்டும் வேறுவேறல்ல, ஒன்றே என்று நினைக்கச் செய்யும் உருவின் ஒய்யாரத்தை அகத்தே இருத்திச் சுவைக்கத் துடிக்கும் புலன் தேடலின் புதுமையைப் பொலிவிப்பதே உருவகச் சிறப்பாகும்.
அந்நிலையில் கவிஞர்களின் கவிதைகளில் காணும் பொதுவான உருவகம் பற்றியதற்கும் மேலாக உணரப்படும் ஒரு புது வகையான உருவகமும் உண்டு எனக் கூறலாம்.
""அங்கை மலரும் அடித்தளிரும் கண்வண்டும்'' - என்ற கவிதைத் தொடரில் (தண்டி, தொகை உருவகம்) கையாகிய மலர், அடியாகிய தளிர், கண்ணாகிய வண்டு என உருவகத்திற்கான "ஆகிய' என்ற உருபுச்சொல் மறைந்துள்ளது. ""அங்கை மலராக, மென் மருங்குல் கொம்பாக, கொங்கை முகையாக'' - என்ற கவிதைத் தொடரில் (தண்டி - விரி உருவகம்) உருவக உருபான "ஆக' என்ற சொல் வெளிப்படையாக உள்ளது. இங்ஙனமாக உருவக உருபு மறைந்தோ, வெளிப்படையாகவோ அமைவது பொதுவான உருவக நிலை. இவ்வாறின்றிப் பொருளை மட்டும் கூறிப் புலன் உணர் வகையில் அனுமானமாக உருவகித்துக்கொள்ளச் செய்யும் உருவகமுறை ஒன்று உள்ளதை இலக்கியங்களில் காணமுடிகிறது. அதனை "ஒட்டு உருவகம்' எனலாம். இதனையே "தொடு உருவகம்' என்றும் கூறலாம்.
இவ்வொட்டு அல்லது தொடு உருவகம் எந்த அணியலங்கார நூல்களிலும் காணப்படவில்லை. எனினும், கண்டறியப்படும் இவ்வுருவக நிலை உள்ளதால் இவ்வுருவக வரவை "இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்' என்றபடி ஏற்றுப் போற்றலாம். அதாவது மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ உருவக உருபுகள் இல்லாத நிலையில் கூறப்பட்ட பொருளால், கூறப்படாத பொருளை ஒட்டி உணருமாறோ அல்லது நினைவால் தொட்டு உணருமாறோ உள்ள இவ்வுருவக வரவைப் புது ஒய்யாரமாகக் கண்டு இன்புறுவதில் குறையேதும் இல்லை!
பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் சூழ்ச்சிக்காரச் சகுனியின் வலையில் வீழ்ந்து பட்ட துரியோதனன் பாண்டவர்களை அடிமைப்படுத்தி நாடு கடத்துகிறான். பாஞ்சாலி அவமானமாகிய சிறையில் அடைக்கப்படுகிறாள். இச்சிறைப்படுதற்குக் காரணமான துரியோதனன், துச்சாதனன் ஆகிய இருவரின் குருதியைக்கொண்டு தன் கூந்தலை முடிப்பதான அறைகூவல் (சபதம்) செய்கிறாள் பாஞ்சாலி. இந்நிகழ்வுகள் யாவும் இந்திய விடுதலைப் போராட்டப் பின்னணியாக உள்ளவையாகும்.
தாய் நாட்டைக் காக்கத் தவறிய சிற்றரசர்களைப் போலப் பாண்டவர்கள் தம்மை இழந்து நிற்கின்றனர். பாஞ்சாலி சிறைப்பட்டது போல இந்தியா சிறைப்பட்டுள்ளது. கொடுமைக்காரத் துரியோதனனின் செயல்கள் போல ஆங்கிலேயரின் அத்துமீறிய அட்டூழியங்கள் அரங்கேறுகின்றன.
வீமனும் அருச்சுனனும் காட்டும் ஆவேசம்,
வீரர்களின் விடுதலை முழக்கங்களாக உள்ளது. பாஞ்சாலியின் சபதமோ வந்தே மாதிர முழுக்கமாக உள்ளது. ஆங்கிலேயரின் நயவஞ்சக வாணிபம்தான் சூதாட்டக்களம். பாஞ்சாலியின் மானத்தை மீட்டுருவாகக் காக்கும் முயற்சியில் உதவ முன்வந்த கண்ணன் போல் பாரதநாட்டின் அடிமைத் தளையை நீக்க வந்த காந்தியை நினைப்பிக்கச் செய்வதான பாஞ்சாலி சபத எழுத்துகள் யாவும் பாரத நாடு கொள்ளை போவதைப் பார்த்து நெஞ்சு பொறுக்காத பாரதியின் குமுறல்கள் அன்றோ!
இப்பாஞ்சாலி சபத வருணனையின் கதையும் கதை தழுவிய பாத்திரப் பண்புகளும் முழுமையாக உருவகப்படுமாறு உள்ளதால் இக்கவித் தொடரை ஒட்டு உருவகமாக உணரலாம். பாஞ்சாலி சபதம் போல் குயில் பாட்டும் முழு உருவகமேயானாலும்,
""ஆன்ற தமிழ்ப் புலவீர்! கற்பனையே யாயினும்
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ''
எனக் கூறியுள்ளதால் முழு ஒட்டு உருவமாகக் கூற வாய்ப்பில்லை. வேதாந்தமாகப் பொருள் விரிக்கலாம் என்ற குறிப்பால் ஆன்மா, பரம்பொருள் பற்றியதெல்லாம் நினைவுபடுத்தப்பட்ட நிலையில், ஒட்டு உருவகம் என்ற பெயருக்கு உரியதாய்க் குயில் பாட்டைக் கருத வாய்ப்பின்றி முழுமையான முற்றுருவகம் எனக் கூறலாம்.
ஆனால், ஒட்டுமொத்த கண்ணன் பாட்டை ஒட்டு உருவத்தோடு கூறலாம். புராணப் பாங்கில் பத்து அவதாரமே எடுத்த திருமால், பாரதியாம் பிரம்மாவின் படைப்பில் புதுப்புது அவதாரம் எடுக்கிறார். இதனால், கடவுள் என்பவர் மானுடத்திற்கு அந்நியப்பட்டவர் அல்லர் என்ற ஒரே வார்ப்பில் பல அவதாரங்கள் உருவகப்பட்டதாக உணர முடிகிறது. அதனால்தான் கண்ணனை முன்னிலைப்படுத்திய அளவில் கண்ணனாகிய என்ற கருத்தில் தோழன், தாய், தந்தை, சேவகன், சீடன், அரசன், சற்குரு, குழந்தை, காதலன் என்றெல்லாம் அடுக்கிக் கூறியதோடு, கண்ணனைக் கண்ணம்மாவாக ஆக்கிக் காதலிக்கின்றார் பாரதியார்.
ஆக, இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்றபடி, கண்டறியப்பட்ட ஒட்டு உருவகத்தைப் புது வரவாக ஏற்றல் "அணியலங்கார ஒய்யாரம்' எனலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.