வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திருவிலாத் திருத்தம்

'திரு'வால் நேர்ந்த தீங்கு' கட்டுரை பாட்டின் திருந்திய வடிவத்தைக் காண மேற்கொண்ட முயற்சி. பாடத் திருத்தம் செய்வது பாவமன்று;

Updated On :8 ஏப்ரல் 2017, 9:00 pm

'திரு'வால் நேர்ந்த தீங்கு' கட்டுரை பாட்டின் திருந்திய வடிவத்தைக் காண மேற்கொண்ட முயற்சி. பாடத் திருத்தம் செய்வது பாவமன்று; பொற்சிலையில் படிந்த புழுதியைப் போக்குவது. பதிப்பாசிரியர்கள் இலக்கணத்திற்கு ஏற்பச் செம்மையான பாடங்களைத் தம் நுண்ணறிவால் கண்டு தருவதுண்டு. அருணைவடிவேலு முதலியார் அப்படித் திருவாசகத்தில் சிவபுராணம் (அடி. 20), திருச்சதகம் (பா.76), நீத்தல் விண்ணப்பம்(பா. 26), குலாப்பத்து (பா. 3) முதலிய பதிகங்களில் செய்துள்ள திருத்தங்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றை நூலில் விரிவாகக் காண்க.
கால்பந்து ஆடத் தெரியாதவர்தான் பந்தை விடுத்து எதிரியின் காலைக் காயப்படுத்துவார். எனவே, ஆள் மறுப்பை விடுத்துக் கருத்து மறுப்புக்கு மட்டும் விடை காணலாம்.
திருவாசகத்தில் உள்ள தரவுக் கொச்சகக் கலிப்பாக்கள் மொத்தம் 141. திருச்சதகம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருத்தோள்நோக்கம், கண்டப்பத்து, திருவேசறவு, குலாப்பத்து, அச்சோப் பதிகம் ஆகிய பகுதிகளும் அடைக்கலப்பத்தில் இரு பாக்களும் இவ்வகைப் பாவில் அமைந்தன. இவற்றுள் தளைதட்டும் ஏழு பாக்களில் ஒன்று "ஆமாறு' என்னும் பாட்டு.
திருவாசகத்தில் உள்ள தரவுக் கொச்சகக் கலிப்பாக்களில் ஒன்றுகூட முழுவதும் கலித்தளை பெற்று வரவில்லை. "பிறவிதனை அறமாற்றி' (கண்டப்பத்து,6) என்னும் பாவில்தான் மிகுதியாகக் கலித்தளை காணப்படுகிறது. பதினைந்து சந்திகளில் மூன்று வெண்சீர்வெண்டளை; எஞ்சிய பன்னிரண்டும் கலித்தளை. ""நோயுற்று மூத்துநான் நுந்துகன்றாய்'' (திருக்கோத்தும்பீ,10) என்னும் பாவில் ஓரிடத்தில் கூடக் கலித்தளை வரவில்லை. பெரும்பாலான பாக்களில் கலித்தளையும் வெண்சீர் வெண்டளையுமே வருகின்றன.

நா/டகத்/தால் - உன்/னடி/யார்
கூ/விளங்/காய் - கூ/விளங்/காய்.
காய் முன் நேர் - வெண்சீர் வெண்டளை.
வீ/டகத்/தே - புகுந்/திடு/வான்
கூ/விளங்/காய் - கரு/விளங்/காய்.
காய் முன் நிரை - கலித்தளை.
ஆ/டகச்/சீர் மணிக் /குன் /றே
கூ/விளங்/காய் - புளி/ மாங்/ காய்.
காய் முன் நிரை கலித்தளை.
ஊ/டகத்/தே - நின்/றுரு/க
கூ/விளங்/காய் - கூ/விளங்/காய்.
காய் முன் நேர் வெண்சீர் வெண்டளை.

என்று பாட்டின் நான்கடியில் முதலிரு சீர்கள் ஒரே தளையில் அமையவில்லை. அவற்றிடையே எதுகையோ மோனையோ அமையவில்லை.
இவற்றை நோக்கின், ""கோமான்நின் கோயில்தூ கேன்மெழுகேன் கூத்தாடேன்'' என்று அமையும் அடியில் வெண்டளை வருதலால் ஓசை கெடுகிறது என்பதும், அடிதொறும் முதலிரண்டு சீர்களும் முதற்சீரின் எதுகை மோனைத் தொடை அமைந்து சிறப்பிப்பது போல, தளையும் ஓசையும் ஒருமையுற விளங்குதல் மிகு சிறப்பாகும் என்பதும் வலிமையற்றுப் போகின்றன.
"திரு'வை நீக்கினால் "கோயில்' என்பது அரண்மனையைக் குறிக்கும் என்பது வியப்பளிக்கிறது! சிவன் உறைவிடம் என்பதை முன்னுள்ள கோமான்நின் என்னும் சீரே காட்டுகிறதே! ""கோயிற் பிணாப் பிள்ளைகாள்'' என்பதில் வரும் கோயில் அரண்மனையையா குறிக்கிறது?
திருத்தமே கூடாது என்பதுபோல் தொடங்கிய, "திரு'வை நீக்குதல் தீங்கு என்னும் கட்டுரை, "கோமான்நின் திருக்கோயில் தூய்மெழுகேன் கூத்தாடேன்' என்று திருத்தியமைத்து, ""தூய்மெழுகேன் என்று தொகுத்துணர்த்திய சீரினை ஏடெழுதியோர் விரித்து, "தூகேன்மெழுகேன்' என்று நாலசைச்சீராக்கி விட்டனர் என்று அமைய வேண்டும்'' என்கிறது. தூய்மெழுகேன் என்பது தொகுத்தல் விகாரம்; அதனைத் தூகேன் மெழுகேன் என்று விரித்து நாலசைச் சீராக்குவது விரித்தல் விகாரம். எவ்வகையில் பார்த்தாலும் இத்திருத்தம் திருவிலாத் (விகாரத்) திருத்தமே.
இந்தத் திருத்தம் எதற்கு? ஐஞ்சீர் அடியாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே என்பர் சிலர். அதில் ஓரளவு நியாயம் உண்டு. இவ்வகைப் பாட்டில் ஐஞ்சீரடி அருகி வரலாம் என்கிறது தொல்காப்பியம். இதனை, ""உளஎன மொழிப'' (செய். 369) என்று பிறர் கருத்தாகக் குறிப்பதும், யாப்பருங்கலக்காரிகை விதிக்கு மாறாக அமைந்தவற்றிற்கு விலக்குத் தரும் ஒழிபியலில் தெரிவிப்பதும் அப்படி வருதல் சிறப்பில்லை என்பதனைக் காட்டும். ஆதலின் ""கோமான்நின் கோயில்தூ கேன்மெழுகேன் கூத்தாடேன்'' என்று நாற்சீர் அடியாய்க் கொள்வதே சிறப்பு. திருவிலாத் திருத்தமே திருநிறை திருத்தம் என்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.