கவி பாடலாம் வாங்க - 5

இப்போது முதல் மூன்று சீர்களை மட்டும் சிறிது மாற்றிப் பாருங்கள். காதுக்கு ஓசை சரியாக வருகிறதா என்று கவனியுங்கள்.
கவி பாடலாம் வாங்க - 5

அடியும் ஓசையும் -2
இப்போது முதல் மூன்று சீர்களை மட்டும் சிறிது மாற்றிப் பாருங்கள். காதுக்கு ஓசை சரியாக வருகிறதா என்று கவனியுங்கள்.
 "தனன தனதன தான' என்பதற்கும், "தனதன தனன தான' என்பதற்கும் ஓசை வேறுபாடு தெளிவாக இருக்கிறது. இந்த வாய்ப்பாட்டை மறந்துவிட்டு வார்த்தைகளின் பொருளையும் மறந்துவிட்டுப் பாட்டில் உள்ள சீர்களை மாற்றினாலும் ஓசை வேறாகவே தோன்றும்.
 
 "மனையி னிதந்தரு நீங்கிச்
 சிறைப்பட் டிடர்தரு டாலும்'
 
 ஓசை எவ்வளவு வேறுபடுகிறது பாருங்கள். ஆனால் இந்த அடியின் முன் பகுதியைப் பின்னாகவும் பின் பகுதியை முன்னாகவும் வைத்துப் பாருங்கள்.
 
 "இடர்மிகு சிறைப்பட் டாலும்
 இதந்தரு மனையி நீங்கி'
 
 இப்போது ஓசை மாறுவதாகத் தெரியவில்லை. ஆகவே முன்ன உள்ள பாதி அடியும், பின்னுள்ள பாதி அடியும் ஒரே மாதிரி ஓசை உள்ளவை என்றும், இந்த அரையடியில் உள்ள மூன்று சீர்களும் வெவ்வேறு ஓசை உடையவை என்றும் அறிந்து கொள்ளலாம். சீர்களின் இடம் மாறினால் அடியின் ஓசையே மாறி விடுகிறது. இனி இரண்டாவது அடியைப் பார்க்கலாம்.
 
 "பதந்திரு விரண்டு மாறிப்
 பழிமிகுந் திடருற் றாலும்'
 
 இதற்கும் முன்பு போல ஓசைக்கு ஒரு வாய்ப்பாட்டைச் சொல்லிப் பார்த்தால் முதலடியின் வாய்ப்பாடாகவே இருப்பதைக் காணலாம்.
 
 தனதன தனன தான
 தனதன தனன தான
 
 திருப்புகழ்ப் பாட்டுக்களில் வரும் சந்தக்குறிப்பிலும் தனதன, தான என்றெல்லாம் இருக்கும்; அங்கே ஓசையை அளக்கும் முறை வேறு; இங்கே நாம் சொல்வது வேறு. அதையும் இதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். "தனதன தனன தான' என்ற அரையடியில் சிறிது மாற்றம் உண்டு பண்ணிப் பார்க்கலாம். "தனதன தான தான' இதில் இரண்டாவது சீரில் கொஞ்சம் மாற்றம் இருக்கிறது. அதனால் ஓசை மாறுகிறதா என்று திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாருங்கள்.
 
 "சுதந்தர தேவி நின்னைத்
 தொழுதிடல் மறக்கிலேனே'
 
 என்ற நாலாவது அடியைப் பாருங்கள். அதற்கு ஓசை வாய்ப்பாட்டை ஊட்டினால்,
 
 "தனதன தான தான
 தனதன தனன தான'
 
 என்று வரும். முதல் பகுதியில் இரண்டாவது சீராகிய தேவி என்பதற்குத் தான என்று வாய்ப்பாடு அமைக்க வேண்டும். தனன வேறு, தான வேறு; ஆனாலும் இந்த இரண்டாவது சீரில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் ஓசை மாறவில்லை. திருப்பித் திருப்பி இந்தப் பாட்டைப் படியுங்கள். பிறகு பாட்டை மறந்து
 விடுங்கள்.
 அடியில் முன் கண்ட வாய்ப்பாட்டோடு சில சீர்களில் மாறுபட்ட ஓசைகளைக் கொண்ட ஓர் அமைப்பைக் காணலாம்.
 
 தனதன தான தான
 தனதன தனன தான
 தனதன தனன தான
 தனதன தான தான
 தனதன தனன தான
 தானன தான தான
 தனதன தான தான
 தானன தான தான
 
 இதைச் சொல்லிச் சொல்லி ஓசையைக் கவனியுங்கள்.
 தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை, கம்பன் பாட்டில் உள்ள அறுசீர் விருத்தப் பகுதிகள் முதலியவற்றை அடுத்தடுத்துப் படியுங்கள். ஓசை ஒரு விதமாகக் காதுக்குப் பழக்கமான பிறகு பின்னே வரும் பயிற்சியைச் செய்து பாருங்கள்.
 
 "செய்யுளை எழுத வேண்டி
 ----- முயற்சி செய்தால்
 பையவே ஓசை ------
 பாங்கினைப் பார்த்தல் வேண்டும்
 செய்வது திருந்தச் செய்தால்
 ----- வெற்றி எய்தும்;
 மையறு கவிதை பாடும்
 ----- ---- சேரும்'
 
 இந்தப் பாட்டு ஆறு சீர் விருத்தம். "இதந்தரு' என்று ஆரம்பித்த பாட்டில் முதலில் தன தன என்று வாய்ப்பாடு போட்டோம். இது "செய்யுளை' என்று தொடங்குவதனால் "தானன' என்று போட்டுக் கொள்ள வேண்டும்.
 இந்தப் பாட்டில் சில சீர்களை விட்டு வைத்திருக்கிறேன். அவற்றை நிரப்ப முயன்று பாருங்கள். முதலில் வார்த்தைகளைப் போடுவதற்குப் பதிலாகத் தக்கையைப் போல வாய்ப்
 பாட்டைப் போட்டுப் பாடுங்கள். அர்த்தத்தைப் பற்றிச் சிறிதும் இப்போது கவலைப்பட வேண்டாம். விடுபட்ட சீர்களை வாய்ப்பாட்டால் நிரப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டு, பிறகு அந்த ஓசைக்கு ஏற்ற வார்த்தைகளை ஒவ்வொன்றாக அமைத்துப் பாருங்கள். அப்படி அமைக்கும்போது மோனை வர வேண்டிய சீராக இருந்தால் மோனை வைக்க மறந்துவிடக் கூடாது.
 முதலடிக்கு மாத்திரம் சில விடைகளைக் குறிக்கிறேன். நான்காவது சீரில் தானன என்ற ஓசையாவது
 தனதன என்ற ஓசையாவது அமையலாம். ஆனால் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்ற எட்டு எழுத்துக்களில் ஏதாவது ஒன்றை முதலாக உடைய சொல்லே வர வேண்டும்; அப்போதுதான் மோனை அமையும்.
 அந்தச் சீரில் பின்வரும் வார்த்தைகள் வந்தால் பொருளும் ஒட்டும்; மோனையும் அமையும்.
 (1) சிறப்பினின், (2) சிறப்புற, (3) திருந்த, (4) திருத்தமாய், (5) சீரிய, (6) செம்மையாய், (7) சீர்பெற, (8) திருவுற, (9) திகழ, (10) திகழ்தர.
 இன்னும் பலவற்றை இணைக்கலாம்; இவை போதும். இவற்றில் திருந்த, திகழ என்னும் இரண்டையும் இணைத்துப் பார்த்தால் ஓசை சரியாக வராது. மற்றவை சரியாக வரும். மற்ற அடிகளையும் நிறைவுறுத்திப் பாருங்கள்.
 
 (தொடர்ந்து பாடுவோம்...)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com