தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பறம்பின் முல்லை

கடவுளோடு மலருக்கு உள்ள தொடர்பை எப்படிப் பிரிக்க முடியாதோ அதேபோல் இலக்கியத்தோடு மலருக்கு உள்ள தொடர்பையும் பிரிக்க முடியாது.

News image
Updated On :25 பிப்ரவரி 2017, 8:54 pm

சொ. அருணன்

கடவுளோடு மலருக்கு உள்ள தொடர்பை எப்படிப் பிரிக்க முடியாதோ அதேபோல் இலக்கியத்தோடு மலருக்கு உள்ள தொடர்பையும் பிரிக்க முடியாது. காரணம், சங்க இலக்கியங்கள் எங்கும் மலர்களின் மணம் கமழும். திணைகளே பூக்களின் பெயர்களால் அமைந்தவைதானே.
அத்தகு மலர்களுள் சிறப்புடையது முல்லை மலர். இந்த முல்லை மலர் சிரிக்கும், பேசும். என்றாலும் அமைதியாகவும் இருக்குமா என்னும் கேள்வியும் எழுகிறது.
தலைவன் இளம் வயதிலேயே பொருள்தேடிப் பிரிந்து சென்று விட்டான். தனிமையில் இருக்கும் தலைவிக்குப் பேச்சுத் துணையாக இதுநாள் வரை முல்லைக்கொடி இருந்தது. தன் தலைவன் கார்காலத்திற்குள் வந்து விடுவான் என்று பேச்சுவாக்கில் தன் தோழியிடம் சொல்லி வைத்திருந்தாள் தலைவி. ஆனால், தான் வந்து விட்டதன் அறிவிப்பாய் முல்லைக்கொடியில் அரும்பு தோன்றச் செய்துவிட்டது கார்காலம். இதைக் கண்ட தலைவிக்கு வெட்கமும், தனிமைத் துயரும் தோன்ற, அதை வெளிப்படுத்த முல்லையைத் துணைக்கு அழைக்கிறாள். அந்த முல்லை சிரிக்குமாம். எப்படி? கார்காலத்தின் பற்களாய் மாறிச் சிரிக்குமாம். ""நீ பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தாயே உன் கணவன் நான் (கார்காலம்) வருவதற்குள் வந்து விடுவான் என்று... ஆனால், நான் வந்து விட்டேன் இன்னும் உன் கணவன் வரவில்லையே?'' என்று ஏளனம் செய்து தன்னுடைய பற்களாகிய முல்லையின் அரும்பு மடல்கள் விரிய மலர்ந்து சிரிக்கப் போகிறது என்கிறாள் தலைவி.

""பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுலை இலங்கெயிறாக நகுமே தோழி
நறுந்தண் காரே''

இது குறுந்தொகையில் ஒக்கூர் மாசாத்தியார் காட்டுகின்ற முல்லை. முல்லைக்கு இருக்கின்ற அரும்பினைச் சுட்டி அதை அம்மலரின் பற்கள் என்கிறார்கள் கவிஞர்கள். இது கற்பனையேயானாலும் பல் இருப்பதனால் அம்மலர் பேசும்
தன்மையுடையது எனக் கருத இடமுண்டு. இதற்கு என்ன சான்று என்று கேட்கிறீர்களா?
பறம்பிற் கோமான் பாரியின் நாட்டில் பூத்த முல்லைப் பூ தனக்குப் பேசுவதற்கு வாயிருந்தும் பேசாமல் அமைதியாய் இருந்ததாம். ஏனாம்?
முல்லை மலர் பெண்மையின் குணம் வாய்ந்தது. தான் பற்றிப் படர்வதற்குக் கொழுகொம்பை விரும்புவது. பறம்பு மலையில் வேர்விட்ட ஓரறிவு உடைய அந்த உயிர்ப்பான முல்லைக் கொடி பற்றிப் படரத் துணையில்லாத தன் துயரத்தை மற்றவர்களிடம் சொல்லலாமோ என்று எண்ணி நாணி நின்றது. அவ்வேளையில் எதிர்வருபவன் மாவண்மையுடை பாரிவள்ளல். கேட்டார்க்கும் கேளார்க்கும் வாரி வாரி வழங்குகின்ற மாரி போன்றவன். பெண்களின் தந்தை. அவனிடமா கேட்பது என்று தனது அரும்புகளாகிய பற்கள் இருப்பினும் அமைதியாக இருந்ததாம். ஆனால், வந்தவன் வள்ளலல்லவா? வாய் திறந்து கேட்பதற்கு முன்னரே அந்த முல்லைக்குத் தன் தேரைத் தந்து விட்டான். அமைதியாக இருந்து சாதித்துக் கொண்ட அந்தப் பறம்பின் முல்லை வரலாற்றிலும் அழியாப் புகழைப் பெற்று விட்டது. கபிலர் விச்சிக்கோவிடம் பாரியின் பெருமை பற்றி (புறநானூற்றில்) இப்படிப் பாடுகின்றார்.

""பூத் தலைஅறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கவெனக்
கொடுத்த பரந்தோங்கு சிறப்பின் பாரி''

"நாத்தழும்பிருப்பப் பாடாது' என்பது இருவகைப் பொருளைத் தரும். தனக்கு நாக்கு என்னும் உறுப்பு இருந்தாலும் பேசாது என்று ஒரு பொருளும், தனது தேரைக் கொடுத்தால் தன்னைப் புலவரைப் போலப் புகழ்ந்து பாடாது என்று மற்றொரு பொருளும் கொள்ளலாம்.
எப்படியோ, பறம்பு முல்லை பாரியோடு நிலைபெற்று விட்டது தமிழுக்குக் கிடைத்த கொடையல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.