முருகன் ஒரு மாமரத் தச்சன்

தோன்றிய எந்த ஒரு பொருளும் அழிவதில்லை. அது உருமாறிய மாற்றத்தைப் பெறும், இது அறிவியல் கண்டுபிடிப்பாயினும் ஆன்மிகம் இந்த உண்மையை உறுதிப்படுத்தும் விதமாகவே புராணக் கதையில் பாத்திரங்களின்
முருகன் ஒரு மாமரத் தச்சன்
Updated on
2 min read

தோன்றிய எந்த ஒரு பொருளும் அழிவதில்லை. அது உருமாறிய மாற்றத்தைப் பெறும், இது அறிவியல் கண்டுபிடிப்பாயினும் ஆன்மிகம் இந்த உண்மையை உறுதிப்படுத்தும் விதமாகவே புராணக் கதையில் பாத்திரங்களின் வழிக் கவிஞர்கள் உணர்த்தினர்.
கந்தபுராணம் கதையில் ஆணவத்தின் உருவமான சூரபதுமன், முருகக் கடவுளை எதிர்த்து இறுதியில் சேவலும் மயிலுமாக முருகனோடு தொடர்பு கொள்கிறான் எனக் கூறுகிறார் கச்சியப்பர். பிற புராண அமைப்பில் கடவுளோடு எதிர்த்தவர்கள் அழிந்தொழிந்தாலும் கந்தபுராணத்தில் அப்படியாக இல்லாமல் சூரனே சேவலும் மயிலுமாக மாற்றம் பெறுகிறான். 
மாமரமாக மாயா ஜாலம் காட்டி எதிர்த்த சூரபதுமனாகிய ஓர் உயிர், மயிலும் சேவலுமான ஈருயிராய் வந்தது அறிவியல்படியே உண்மை எனலாம். ஒரு மாமரத்தின் கனிகள் பலவாகத் தோன்றிப் பல மாமரங்களை உருவாக்கும் உண்மைபோல ஈண்டு சூரபதுமனாம் மாமரம் சேவலும் மயிலுமானது. மேலும், இதுவே ஒட்டுமாமரப் பாங்கில் இணைத்து வளர்ந்ததாயின் ஈர் உயிர்ப்பின் ஒட்டுக்கேற்ப மயிலும் சேவலுமான ஈருயிர்த் தோற்றம் அமைந்ததைப் பொருத்தமாக உணரலாம்.
இந்த ஒட்டுநிலை போன்ற நிலையிலேயே சூரன் - பதுமன் என்ற இருவேறு உயிர்கள் சேர்ந்து சூரபதுமனாய் ஓருருக் கொண்டு முருகனை எதிர்த்துச் சேவலும் மயிலுமாய் மாறினான் சூரன். சூரன் - பதுமன் என்ற ஈருயிர்க்கு ஈருயிராய் சேவலும் மயிலுமாய் ஆயின என்பது அறிவியல் சார்ந்த தத்துவம் என்று திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் தம் கந்தர்சஷ்டிச் சொற்பொழிவில் கூறியதை நூலிலும் எழுதியுள்ளார். இப்படித் தத்துவத்தோடு கூடிய உண்மையை அசை போட்ட அருணகிரிநாதர், முருகக் கடவுளை "தச்சா' எனப் புதுப் பெயரிட்டு வழிபடுகிறார்.
"அச்சாய் இறுக்கு ஆணி காட்டி' எனத் தொடங்கும் தச்சூர்த் திருப்புகழில்,

""எக்காலும் மக்காத சூர்கொத் தரிந்த 
சினவேலா! "தச்சா'!
மயில் சேவ லாக்கிப் பிளந்த சித்தா!''

என்கிறார் அருணகிரி. மரத் தச்சர்கள் மரத்தைச் சோதித்துப் பார்த்ததும் சிற்பம் செய்ய முற்படுவர். அதுபோல பக்குவப்பட்ட சூரபதுமனைத் தண்டித்து ஆட்கொள்கிறார். ஆணவமாக இருந்தவனின் ஆணவத்தைப் போக்கியதால் அவன் சிற்பம் செய்ய உதவும் மரத்தைப் போலாகிவிட்டதால் அருணகிரி சூரனை "மக்காத' என்றார். அதனால்தான் எந்தக் கடவுளரின் வாகனத்தையும் துணை எனக் கூறாத நம் ஆன்றோர் வேலும் மயிலும் துணை என்றனர். இந்த மயில் - மேலே கூறிய "மக்காத' என்பதுக்குள் அடங்குமன்றோ!
மரத்தச்சர் மரத்தை அரிந்தும், பிளந்தும் செதுக்கியே சிற்பம் வடிப்பர். அதுபோல முருகனும் சூரனாம் மரத்தை ஆணவத்தைப் போக்கிய நேர்த்தியால் தன் வடிவேலால் பிளந்து சேவல், மயில் என்ற இரு சிற்பங்களாய்ச் செதுக்கினான். இந்தச் செயல் ஒரு சித்து வேலைப்பாடானது என்பதால் அருணகிரியார் முருகனைத் தச்சா என்றதும் சித்தா எனப் பாராட்டினார். ஏனெனில், ஒரு மரத்தில் ஒரு சிற்பமே வடிப்பது வழக்கமாயினும் முருகனாகிய தச்சனோ இரு சிற்பம் செதுக்கியது ஒருவித சித்து விளையாட்டன்றோ என வியக்கத் தூண்டுவதால் சித்தா என்றது பொருந்தும்.
இந்தச் சித்தா என்ற பெயரும் முன்னர் கூறிய ஈருயிர்க்கு ஈருயிர் என்ற அறிவியலோடு தொடர்புடைய ஆன்மிகப் பெயராகும்.
தச்சுத் தொழிலுக்கு ஆயுதம் வேண்டுவது போல முருக தச்சனுக்கு வேலே ஆயுதம். இந்த ஆயுதத்தைக் கொண்டு சூரபதுமனை மட்டுமின்றி அவனது தம்பியரையும் கொன்று ஆட்கொள்கிறார் என்பது கந்தபுராணக் கதை. அதற்கேற்பவே ""மக்காத சூர் கொத்து அரிந்த சின வேலா'' என்றார் அருணகிரி.
சூரபதுமனின் தம்பி சிங்கமுகனும் தாரகா சூரனும் முருகனது வேற்படையில் மாய்ந்தாலும் அவர்கள் முருகனின் தாய் பார்வதிக்குச் சிங்க வாகனமாகவும் முருகனுக்கு யானை வாகனமாகவும் முறையே சிங்கமுகனும் தாரகனும் மாற்றம் அடைகின்றனர்.
இவர்களின் இந்த மாற்றத்திற்கும் மேலான மாற்றத்தால் உலகியலுக்கே மெய்ப்பொருள் உண்மையை உணர்த்தும் வகையில் முருகன் மரத் தச்சனாய் செதுக்கிய சேவலும் மயிலுமே சிறப்புடையதாகும்.
சேவலின் ஒலி - விடியலை உணர்த்தும், மயிலின் தோகை விரித்த ஆட்டம், பறந்துபட்ட ஒளி விளக்கத்தை உணர்த்தும். இவற்றால் ஒலி ஒளி எனப்பட்ட இரண்டே (Sound and Light) மிக மிக இன்றியமையாதன என்பதை உலகறியச் செய்தான் முருகன் என்பது கருத்து. இவற்றைத்தான் தத்துவார்த்தமாக நாத (ஒலி) விந்து (ஒளி) என்ற குறியீட்டுச் (Technical Term) சொற்களாகக் கூறுவர்.
மேலும், இந்த ஒலியினும் ஒளியின் சிறப்பை உணர்த்தும் வகையில் முருகன் சேவலைக் கொடியாகக் கொண்டாலும் மயிலைத் தான் அமரும் வாகனமாக்கிக் கொண்டான். ஆணவம் அடங்கினால் எல்லாம் அடங்கும் என்பதை உலகிற்குக் கூறும் விதமாகவே மயில் ஆணவமாகப் பறந்து செல்லாதபடி ஓரிடத்திலேயே அடக்கி ஆட்கொண்டான் முருகன் என்பது கருத்து. மூன்று வகை மயில்களில் இது அசுர மயில். 
இருப்பினும் அசுரத் தன்மையான சேவற் கொடியோடும் மயில் வாகனத்தோடும் முருகனை வணங்குவதில் ஒரு தத்துவம் அறிவுறுத்தப்படுகிறது. அதுதான், கந்தபுராணச் சாரமாய் மரத்தச்சன் செய்த மகத்துவச் சிற்ப வார்ப்பாகும். ""தீயவை புரிந்தா ரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவர் ஆவர்'' என்கிறார் கச்சியப்பர். இதன் குறியீடே சேவலும் மயிலுமான முருகத் தோற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com