

மோனை, எதுகை என்ற இரண்டு தொடைகளின் இலக்கணத்தையும் அவற்றின் வகைகளையும் அறிந்தோம். இனிப் பிற தொடைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
இயைபுத் தொடை: இறுதியில் உள்ள எழுத்தாவது சொல்லாவது ஒன்றிவரத் தொடுப்பது இயைபுத் தொடை. அடிதோறும் இப்படி வருவது அடி இயைபுத் தொடை.
"இந்திய நாட்டினை இணைத்தவன் காந்தியே
சொந்தநா டென்று சொன்னவன் காந்தியே
சுதந்தரம் பெறும்வகை துணிந்தவன் காந்தியே
இதம்பெறு மன்புரு வேயக் காந்தியே'
இந்த அகவற்பாவில் அடிதோறும் ஈற்றுச்சீர் இணைந்து வந்தமையால் இது அடி இயைபு. எதுகை, மோனைகளுக்குக் கூறிய இணை முதலிய வகைகள் இயைபு, முரண், அளபெடை என்ற மூன்று தொடைகளிலும் உண்டு. மற்றத் தொடைகளுக்கு முதற் சீரிலிருந்து பார்க்க வேண்டும். இயைபுக்குக் கடைசிச் சீரிலிருந்து பார்க்க வேண்டும்.
"மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே
மற்றதன் அயலே முத்துறழ் மணலே
நிழலே இனியதன் அயலது கடலே
மாதர் நகிலே வல்லே இயலே
வில்லே நுதலே வேற்கண் கயலே
பல்லே தளவம் பாலே சொல்லே
புயலே குழலே மயிலே இயலே
அதனால்
இவ்வயின் இவ்வுரு இயங்கலின்
எவ்வயி னோரும் இழப்பர்தந் நிறையே'
இந்த ஆசிரியப்பாவில் முதல் ஏழு அடிகளிலும் முறையே இணை இயைபு, பொழிப்பு இயைபு, ஒரூஉ இயைபு, கூழை இயைபு, மேற்கதுவாய் இயைபு, கீழ்க் கதுவாய் இணைபு, முற்று இயைபு என்னும் ஏழும் வந்தன. முதல் இரண்டு சீர்களில் மோனை வந்தால் இணைமோனை என்று பெயர் பெறும். பிற தொடைகளும் அப்படியே பெயர் பெறும். ஆனால், இயைபுக்கு மாத்திரம் இறுதியிலிருந்து நோக்கி வகை கூற வேண்டும். பின் இரண்டு சீரில் இணைந்து வந்தால்தான் இணையியைபு என்று சொல்ல வேண்டும். மற்றவையும் இப்படியே பார்த்து வகை தெரிந்துகொள்ள வேண்டும்.
முரண் தொடை: முரண் என்பது விரோதம் அல்லது மாறுபாடு. சொல்லால் முரணாவது சொல் முரண்; பொருளால் மாறுபடுவது பொருள் முரண். "காட்டாவைக் காட்டினான்' என்பதில் காட்டா, காட்டி என்பவை ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டதுபோலச் சொல்லளவில் தோன்றுகின்றன. பொருளை நோக்கினால் சொற்களே வேறு; ஒரே பகுதியில் தோன்றியவை அல்ல. காட்டா என்பது காட்டுப் பசு என்ற பொருளையுடையது. இது சொல் முரண்.
மேடு-பள்ளம், இருள்-ஒளி, செல்வம்-வறுமை: இவை பொருள் முரண். சொல்லாலோ பொருளாலோ முரண்படும் சொற்கள் தொடர்ந்து வருவது முரண் தொடை. மற்றத் தொடைகளைப் போலவே இதுவும் அடிமுரண், இணை முரண், பொழிப்பு முரண் ஒரூஉ முரண், கூழைமுரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண் என எட்டு வகைப்படும்.
அடிதோறும் முதற் சீரில் முரண் வந்தால் அடி முரண் ஆகும்.
"இருள்பரந் தன்ன மாநீர் மருங்கின்
நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறை
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
பொன்னின் அன்ன துண்டா திறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மடமகள்
பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே'
இருள்-நிலவு, இரும்பு-பொன், சிறு-பெரு என்பன ஒன்றுக்கொன்று முரணாக இருத்தல் காண்க. அடி தோறும் முதற் சீரில் வந்தமையால் இது அடி முரண் என்று பெயர் பெறும்.
மற்ற வகைகளுக்கு உதாரம்:
"சீறடிப் பேரெழில் கொடிபோல் ஒல்குபு
சுருங்கிய நுசுப்பிற் பெருகுவடம் தாங்கிக்
குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து
சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன்
வெள்வளைத் தோளும் சேயரிக் கருங்கணும்
இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும்
துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்தெனை முனியாது
என்றும் இன்னணம் ஆகுமதி
பொன்றிகழ் நெடுவேற் போர்வல் லோயே'
இந்தப் பாட்டில் முதல் ஏழு அடிகளிலும் முறையே இணை முரண், பொழிப்பு முரண், ஒரூஉ முரண், கூழை முரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண் என்பன வந்தன.
துவர்வாய்-தீஞ்சொல் என்பன சொல் முரண்; துவர்வாய் என்பது துவர்க்கும் வாய் என்ற பொருளைத் தோற்றச் செய்தது; ஆனால் அதன் இயல்பான பொருள் பவழம் போன்ற வாய் என்பது. தீஞ்சொல்-இனிய சொல். துவர்ப்பும் இனிமையும் முரண்பட்டன.
(தொடர்ந்து பாடுவோம்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.