

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பவை செய்யுளின் உறுப்புகள். இவை யாவும் காரணப்பெயர்கள். எழுதப்படுவதனால் "எழுந்து' என்ற பெயர் உண்டாயிற்று. "அசைத்தல்' என்பதற்குக் "கட்டுதல்' என்பது பொருள். எழுத்துக்களை இணைத்துக் கட்டி நடக்கச் செய்வதனால் "அசை' என்ற பெயர் வந்தது. சீர் என்பது தாளத்துக்குப் பெயர். வரையறையான ஓசையே (தஏவபஏங) தாளம் ஆகும். செய்யுட்களில் அந்த வரையறை அமையும்படி செய்வதனால் "சீர்' என்ற பெயர் வந்தது.
தளை என்றால் பிணைப்பது என்று பொருள்; விலங்குக்கும் பெயர். அது சீரையும் பிணைப்பதனால் "தளை' என்றார்கள். தளை என்ற சொல் "தள்' என்ற பகுதியிலிருந்து வந்தது. தளையமைந்து நிற்றலைத் தட்டல் என்று சொல்வது பழைய மரபு. வெண்டளை தட்டு நிற்கும் என்றால், வெண்டளை அமைந்து நிற்கும் என்று பொருள் கொள்ள வேண்டும். இப்போது புலவர்கள் பேச்சில், தளை தட்டுகிறது என்றால், தளை தவறுகிறது என்று பொருள் கொள்கிறோம். அடுத்து நடப்பதால் "அடி' ஆயிற்று. பாட்டு நடப்பதற்கு அடிபோல் உதவுவதால் இப்பெயர் வந்ததாகவும் கொள்ளலாம்.
"தொடை' என்பது தொடுக்கப்பெறுவது என்னும் பொருளுடையது. தொடுக்கும் மாலைக்கும் தொடை யென்று பெயர் உண்டு. அழகு பெறத் தொடுக்கும் மாலை போலச் செய்யுளில் அழகு அமைய அமைவது தொடை. தொடைகள் எட்டு: மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை, அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை இவற்றில் முதல் ஐந்தும் சிறப்பானவை. அவற்றிலும் எதுகை, மோனை என்னும் இரண்டையுமே இப்போது பாவாணர்கள் கவனித்து அமைத்து வருகிறார்கள்.
எதுகை, மோனை என்னும் இரண்டு தொடைகளையும் பற்றி ஓரளவு முதல் பாகத்தில் தெரிந்து கொண்டோம். இனி அவற்றின் வகைகளையும் பிற தொடைகளையும் பற்றிக் கவனிப்போம்.
முதலில் சொன்ன ஐந்து தொடைகளில் ஒவ்வொன்றும் எட்டு வகைப்படும். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. மோனையின் வகை எட்டாவன: 1. அடிமோனை, 2. இணைமோனை, 3. பொழிப்பு மோனை, 4. ஒரூஉ மோனை, 5. கூழை மோனை, 6. மேற்கதுவாய் மோனை, 7. கீழ்க்கதுவாய் மோனை, 8. முற்று மோனை. அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்னும் எட்டு அடைகளையும் மற்ற நான்கு தொடைகளோடு இயைந்து அவைகளிலும் ஒவ்வொன்று எவ்வெட்டு வகையாதலைக் காணலாம்.
ஒரு சீரின் முதல் எழுத்தும் மற்றொரு சீரின் முதல் எழுத்தும் ஒன்றி வருவது மோனை. மோனை என்பதற்கு முன்னிடம் என்பது பொருள். மோனையை முதல் தொடை என்று சொல்வார்கள்.
செய்யுளின் அடிதோறும் முதற் சீரின் மோனை அமைவது அடிமோனை.
"மாவும் புள்ளும் வதிவயிற் படர
மாநீர் விரிந்த பூவும் கூம்ப
மாலை தொடுத்த கோதையும் கமழ
மாலை வந்த வாடை
மாயோ னின்னுயிர்ப் புறத்திறுத் தன்றே'
இந்த நேரிசை ஆசிரியப்பாவில் அடிதோறும் மோனை வந்தது. இது அடிமோனை. அடிமோனை அமையும்படி பாட வேண்டும் என்ற வரையறை இல்லை. இப்படியே அடிதோறும் எதுகை அமைவது அடி எதுகை.
"வண்ண மேவிய மாமயில் மேல்வரும்
அண்ணல் வேற்கரத் தாறுமு கன்பதம்
நண்ணி நாளும் நயந்து பணிந்தவர்
எண்ணம் யாவும் இனிதுறும் என்பவே'
இப்பாட்டில் அடிதோறும் முதற்சீரில் எதுகை அமைந்தமையால் இது அடி எதுகை. செய்யுள் இயற்றுவார் அடி எதுகை அமையும்படி பாட வேண்டும். எல்லாப் புலவர்களுடைய பாட்டிலும் பெரும்பாலும் அடியெதுகை அமைந்திருப்பதைக் காணலாம்.
(தொடர்ந்து பாடுவோம்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.