பசுமை நிறைந்த நினைவுகள்!

இன்று (24.6.2018) கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் ஊரெங்கும் கொண்டாடப்படும் இந்த நாளிலே அவருடனான என் சந்திப்புகள் பசுமையாக நினைவில் நிழலாடுகின்றன.
பசுமை நிறைந்த நினைவுகள்!

இன்று (24.6.2018) கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் ஊரெங்கும் கொண்டாடப்படும் இந்த நாளிலே அவருடனான என் சந்திப்புகள் பசுமையாக நினைவில் நிழலாடுகின்றன.
 1962 டிசம்பர் 11-ஆம் நாளன்று பாரதியின் 81-ஆவது பிறந்த நாள் விழா தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. அதுபோது நான் தொகுத்து வெளியிட்ட "தமிழகம் தந்த மகாகவி' என்ற நூலைக் கண்ட நாளிலிருந்தே கவிஞர் உள்ளத்தில் நான் தனித்ததோர் இடம்பெற்று விட்டேன்.
 தமிழ்ப் பதிப்புலகின் முன்னோடிகளுள் முன்னவரான சின்ன அண்ணாமலையின் வழிகாட்டுதலின்பேரில் 1961, ஏப்ரல் 13-ஆம் நாள் பதிப்பாளன் என்கிற அந்தஸ்தை நான் பெற்றேன். அவர் வழியில், பாரதி பற்றிய கட்டுரைகளைக் கொண்ட நூலை அழகாகப் பதிப்பித்து வெளியிட்டிருந்தேன்.
 மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்பு சின்ன அண்ணாமலை மீண்டும் "தமிழ்ப் பண்ணை' நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம், "தமிழ்ப் பண்ணை' வழியாகக் கவிஞர் கண்ணதாசனின் நூல்களை வெளியிட விரும்பினார்.
 கவிஞரும் மகிழ்ச்சியுடன் தம் நூல்களை வெளியிட ஒப்புக் கொண்டார். ""தான் தொகுத்து வைத்திருந்த கவிஞருடைய நூல்களை சின்ன அண்ணாமலையிடம் கொடுத்து, வெளியிடும்படி சொன்னபோது, "மகாகவி பாரதியார்' (தமிழகம் தந்த மகாகவி)- கட்டுரைத் தொகுப்பைக் குறிப்பிட்டு, "இந்த மாதிரி இந்தப் புத்தகத்தைத் தயாரிக்க வேண்டும்'' என்று கவிஞர் திரு விசுவநாதனைக் குறிப்பிட்டுச் சொன்னார்''
 இன்ன விதமாகப் பிற்காலத்தில் கவிஞர் சொல்லச் சொல்ல எழுதிய இராம. கண்ணப்பன் தமது "அர்த்தமுள்ள அனுபவங்கள்' என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
 என்னுடைய முதல் முயற்சி நூலான "தமிழகம் தந்த மகாகவி' தொகுப்பைக்கொண்டே என்னுடைய பாரதி பதிப்புப் பணிகளில் மனத்தைப் பறிகொடுத்த கவியரசர் பேரில் நான் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் மேலும் கூடின.
 1977-இல் கவிஞர் "கீதா சமாஜம்' என்கிற பெயரில் தொடங்கிய புத்தக நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். "கீதா சமாஜ'த்தில் பணிக்குச் சேர்ந்து விட்டதால், கவிஞருடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.
 எனது சொந்த பாரதி நூல்கள் பதிப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டபோதிலும், புதிய பணி பொறுப்பில் கவனம் செலுத்தி, கவிஞருடைய நன்மதிப்பைப் பெற்றேன். அன்று முதற்கொண்டு நாளாக நாளாக என்னிடத்தே கவிஞருக்குப் பற்றும் பாசமும் மிகுந்து வரக்கண்டேன்.
 1978 செப்டம்பர் 11-ஆம் நாள் "தமிழருக்கு' என்னும் தலைப்பில் பாரதியாரின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பை வெளியிட்டேன். இந்நூலுக்குக் கவிஞரின் அணிந்துரையை வேண்டிப் பெற்றேன்.
 என் பதிப்பு முறை கவிஞர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது என்பதை அவர் வழங்கிய அணிந்துரையிலிருந்தே- "சபாஷ் பாண்டியா!' என்ற அடைமொழியோடு பாராட்டியதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
 "மகாகவி பாரதியாரின் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் மூழ்கித் திளைத்தவர் நண்பர் சீனி.விசுவநாதன். ஐம்பது வருஷத்துக்கு முந்திய பதிப்பில் இருந்து இன்றைய பதிப்பு வரை அவருக்குத் தெரியுமாதலால், எவ்வெவற்றை எப்படி வரிசைப்படுத்துவது என்பதை அவர் மிக அழகாகச் செய்கிறார். மற்ற பதிப்பாளர்களும் வியாபார ரீதியாக பாரதி நூல்களை வெளியிட்டுள்ளார்களேயன்றி, உணர்ச்சிபூர்வமாகத் தொகுக்கவில்லை. ஆனால், சீனி.விசுவநாதனின் தொகுப்புகள் அழகானவை; சுத்தமானவை. பாரதியின் நூல்களை அழகாக வெளியிட வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கே அதிகம் உண்டு. இந்தத் தொகுப்பைப் பார்த்தபோது அந்த ஆசை இன்னும் அதிகமாயிற்று. "ஒரு நல்ல பதிப்பு'க்கு அதுதான் அடையாளம். பாரதியே இன்றிருந்து இந்தத் தொகுப்பைப் பார்த்தால், "சபாஷ் பாண்டியா!' என்று தட்டிக் கொடுத்து, ஒரு மாலையும் போடுவார். வாழ்க அவரது சேவை.''
 கவிஞரின் உள்ளத்தினின்றும் கனிந்த இந்தப் பாராட்டுரையானது பாரதி பதிப்புப் பணிகளில் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ளும் பான்மையில் அமைந்துவிட்டது. ஆக, கீதா சமாஜத்தில் பணியாற்றிக்கொண்டே பாரதி நூல் பதிப்புப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தேன்.
 1979-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாரதிக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் பொருட்டாக, வானவில் பிரசுர உரிமையாளர் டி.வி.எஸ்.மணியுடன் சேர்ந்து "பாரதியார் கவிதைகள்' தொகுதியை மலிவுப் பதிப்பாக வெளியிடுவதற்கான முயற்சியில் நான் ஈடுபட்டேன்.
 கிட்டத்தட்ட நூலும் அச்சாகிவிட்டது. இந்நிலையில், எனக்கொரு யோசனை தோன்றியது. தமிழக அரசின் அருங்காட்சியகத்தில், பாரதியின் தம்பி சி.விசுவநாதன் அரசிடம் ஒப்படைத்த பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் இருப்பதைக் கண்டேன்.
 கண்டவுடன், புதிய பதிப்பில் சிறப்பு அம்சமாக, அருங்காட்சியக இயக்குநரின் முன் அனுமதி பெற்று, பாரதியின் கையெழுத்து வடிவிலான சில பாடல்களை நூலின் முன் பகுதியில் இணைப்பாகப் பிரசுரம் செய்வதில் ஈடுபட்டேன்; மாதிரிக்காகச் சில பாடல்களின் நகல்களையும் பெற்றேன். குறிப்பிட்ட நாளில் நூலை பிரசுரம் செய்யவும் முடிவாயிற்று.
 இந்நிலையில், பாரதியின் கையெழுத்து வடிவிலான பாடல்களைப் போன்றே, அரசவைக் கவிஞரான கண்ணதாசனிடமும் அவர் கைப்பட எழுதிய பாராட்டுக் கவிதை ஒன்றைக் கேட்டுப் பெற்று, கவிதைகள் தொகுதியில் சேர்த்துப் பதிப்பிக்க டி.வி.எஸ்.மணி பெரிதும் ஆசைப்பட்டார்.
 கவிஞருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த காரணத்தால், பாராட்டுரையைக் கவிஞர் கைப்பட எழுதியதைப் பெற என்னால் முடியும் என்று டி.வி.எஸ்.மணி தன் நம்பிக்கையைத் தெரிவித்தார்.
 டி.வி.எஸ்.மணியின் ஆசை அதீத ஆசை என்பதாக எனக்குப் பட்டது. அதனால் அவரிடம், "உங்கள் ஆசை காரிய சாத்தியமானதாக எனக்குத் தோன்றவில்லை. கவிஞர் தம் கைப்பட எதையும் எழுதுவதில்லை'' என்றேன்.
 ""முயற்சி செய்து பார்க்கவும். கவிஞர் கைப்பட எழுதிய பாராட்டுரைக் கவிதையினால் நூலின் சிறப்பு கூடும்'' என்று வாதாடினார்.
 ""நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால், கால தாமதமாகும்'' என்றேன்.
 ""கால தாமதமாவதைப் பற்றிக் கவலை இல்லை. கவிஞரின் கையெழுத்தில் பாராட்டுக் கவிதை இடம்பெற வேண்டும். அதுவே என் ஆசை'' என்றார்.
 நானும் ஒரு நாள் தயங்கித் தயங்கி கவிஞரிடம் விஷயத்தைச் சொன்னேன்.
 "அதற்கென்ன எழுதித் தந்துவிடுகிறேன். அச்சான பிரதிகளைக் கொண்டு வந்து தாருங்கள்'' என்றார். கவிஞரிடம் நான் கண்ட நல்ல குணம், அவர் எதையும் "இல்லை' என்று மறுத்தது கிடையாது. கவிஞர் கேட்டபடியே அச்சான பிரதிகளை நான் சேர்ப்பித்தேன்.
 கவிஞருக்கு இருந்த சில முக்கியமான பொறுப்புகள் காரணமாக, அவர் கைப்பட எழுதிய கவிதையைப் பெறுவதில் காலதாமதமாயிற்று.
 இரண்டு மாதங்கள் உருண்டோடின. ஒரு கட்டத்தில் கவிஞர் என்னிடம் "வழக்கம் போல் நான் சொல்லச் சொல்ல கண்ணப்பன் எழுதித் தருவதைப் போட்டு விடுங்கள்'' என்றுகூடச் சொல்லி விட்டார்.
 கவிஞர் இப்படிச் சொல்லிவிட்டாரே என்று என் மனத்திற்குள் வருத்தம். இருந்தாலும் கடைசி முயற்சியாக "எங்களுக்காகக் கேட்கவில்லை; பாரதிக்காக உங்களைத் திரும்பத் திரும்பத் தொந்தரவு செய்ய வேண்டி வருகிறது'' என்றேன், நான். "பாரதி' என்று நான் சொன்னதுதான் தாமதம்!
 "அப்படியா, சரி. அடுத்த வாரம் தந்து விடுகிறேன்'' என்றார் கவிஞர்.
 ஒரு வாரம் கழித்து, கவிஞரைக் கண்டேன். நான் சென்ற சமயம் கவிஞர் ஓய்வாக இருந்தார். என்னைக் கண்டதும் "இன்றே கவிதையைத் தந்துவிடுகிறேன். எழுதுவதற்கு நல்ல ஆர்ட் பேப்பரும், "ஸ்கெச்' பேனாவும் வாங்கி வந்துவிடுங்கள்'' என்றார். இரண்டையும் ஓடோடிச் சென்று வாங்கி வந்து கவிஞரிடம் ஒப்படைத்தேன். நான் "கீதா சமாஜ்' அலுவலகத்தில் காத்திருந்தேன். ஒரு மணி நேரம் கழிந்தது. கவிஞரிடமிருந்து அழைப்பு வரவில்லை. எனவே, வீட்டினுள்ளே சென்று கவிஞரின் அறைக்குள்ளே நான் எட்டிப் பார்த்தேன். கவிஞர் சற்றே கண்ணயர்ந்திருந்தார். நான் சத்தம் செய்யாமல் வெளியே வந்துவிட்டேன். உணவருந்த வீட்டிற்குச் செல்வதாக அவரின் உதவியாளர் வசந்தனிடம் சொல்லிவிட்டு, நான் வீட்டிற்கு வந்து உணவருந்திக் கொண்டிருந்தேன்.
 அப்போது வசந்தன் என் வீட்டிற்கு வந்து, கவிஞர் என்னைக் கையோடு அழைத்துவரச் சொன்னதாகச் சொன்னார். நானும் அவருடன் பரபரப்புடன் சென்றேன்.
 என்னைக் கண்டதும் எடுத்த எடுப்பிலேயே "என்ன, கோபமா?'' என்று கேட்டார்.
 எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கு நான் "உண்மையிலேயே நீங்கள்தான் என் மேல் கோபப்பட வேண்டும். அடிக்கடி தொந்தரவு செய்ததற்காக'' என்றேன்.
 "அப்படியானால் எதற்கு வீட்டிற்குச் சென்றீர்கள்?'' என்று கேட்டார்.
 ""சாப்பிட'' என்றேன். அப்போதுதான் அவர் மனம் சமாதானமடைந்திருந்தது. தம் கையிலிருந்த தாளை நீட்டி "கவிதையைப் பிடியுங்கள்'' என்று சொல்லிப் பாராட்டுரை கொண்ட கவிதையை வழங்கினார்.
 மகிழ்ச்சியால் உள்ளம் துள்ள, இருகரம் நீட்டிக் கவிதை அடங்கிய அந்தத் தாளைப் பெற்றுக் கொண்டேன். கவிஞர் தம் கைப்பட எழுதிய கவிதையுடன் "பாரதியார் கவிதைகள்' தொகுதி 24.1.1980-இல் நூலாக்கம் பெற்றது.
 கவிஞரின் கைப்பட எழுதிப் பாராட்டு பெற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுள் எனக்கென்று பாரதி இலக்கியத்தில் தனித்ததொரு சிறப்பினைத் தேடித்தந்தவர் கவிஞர். குறிப்பிட்ட சிலருக்கே அறிமுகமாகியிருந்த என்னை "குமுதம்' 24.4.1980-ஆம் தேதியிட்ட இதழிலே- "இந்த வாரம் சந்தித்தேன்' என்ற பகுதியில் முகவரியுடன் எழுதி, பலருக்கும் எனது பாரதிப் பணிகளைத் தெரியப்படுத்திய கவிஞரின் அன்பு உள்ளத்தை- பண்பு உள்ளத்தை என் நெஞ்சம் என்றுமே மறவாது.
 இன்று: கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com