அலர் தூற்றுவ முல்லை

சிறுமியர், உப்பங்கழிப் பக்கம் ஓடி விளையாடியபடி இருக்கின்றனர். விளையாடுமிடத்தில் ஒரு பகுதியிலிருந்து தாங்க முடியாத புலால் நாற்றம் வீசுகின்றது.
அலர் தூற்றுவ முல்லை
Updated on
2 min read

சிறுமியர், உப்பங்கழிப் பக்கம் ஓடி விளையாடியபடி இருக்கின்றனர். விளையாடுமிடத்தில் ஒரு பகுதியிலிருந்து தாங்க முடியாத புலால் நாற்றம் வீசுகின்றது. சிறுமியர் சிலர் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர்; ஒருத்தி மட்டும் பொறுக்க முடியாமல், உடல் குழைந்து நடுங்கி, வாயில் நீர் ஊற,  காலையில் உண்ட உணவை வாந்தி எடுத்துவிடுகிறாள். 

ஒருத்தி, "இதைப் பாருங்கடி!' எனக் கண்களால் மற்ற சிறுமிகளுக்குச் ஜாடை காட்டுகிறாள். எல்லாச் சிறுமியரும் கூடி முதல் சிறுமியைப் பார்த்து, அவள் செய்ததைச் சொல்லிச் சொல்லி நகைக்கின்றனர்.

உப்பங்கழி (நெய்தல் நிலம்) தாழை மலர்களும், ஆம்பல், குவளை மலர்களும் (மருத நிலம்), மலர் சொரியும் முல்லைக் கொடிகளும் (முல்லை நிலம்) நெருங்கியுள்ள இடத்தில் இப்படிப்பட்ட ஒரு காட்சியைத் தான் கண்டதாகக் கூறுகிறார் திருவிளையாடற் புராண ஆசிரியரான பரஞ்சோதியார். எல்லா நிலத்துப் பூக்களும் உள்ள இடத்தில் இயற்கையாக நிகழும் ஒரு செயலை, விளையாடும் இளம் சிறுமிகளின் கும்மாளம் போல சுவைபட வருணிக்கிறார்.

"ஆறு சூழ்கழிப் புலால் பொறாது அசைந்து கூன் கைதை
சோறு கால்வன ஆம்பல்வாய் திறப்பன துணிந்து
கூறு வாரெனக் குவளைகண் காட்டிடக் கூடித்
தூறு வாரெனச் சிரித்து அலர் தூற்றுவ முல்லை' 

ஆறாக ஓடுகின்ற உப்பங்கழியின் புலால் நாற்றத்தைப் பொறுக்கமாட்டாமல் சோர்ந்து, உடல் நடுங்கி வளைந்த நெய்தல் நிலத்துத் தாழை மலர்கள் மகரந்தமாகிய சோற்றைக் கக்கும்; அதைக் கண்டு துணிந்து அவை வாந்தி செய்கின்றதெனக் கூறுவார் போல (அலர் தூற்றுவதுபோல) ஆம்பல் மலர்கள் வாயைத் திறக்கும். இந்தச் செய்தியைக் கண்களால் ஜாடை காட்டி, மற்றவர்களுக்கு அறிவிப்பதுபோல, கருங்குவளை மலர்கள் நிற்கின்றனவாம். அவற்றுடன் சேர்ந்துகொண்டு கூடித் தாமும் பழிப்பவர்கள் போல நகைத்த வண்ணம் முல்லை மலர்கள் தமது பழைய மலர்களை உதிர்க்கின்றனவாம்! 
வியப்பான கற்பனை! திணை மயக்கம் எனும் உத்தியைக் கையாண்டு மதுரையின் இயற்கை வளங்களை வண்ணமய ஓவியங்களாக அழகுபட அகக்கண்ணில் விரிக்கும் சொல்லோவியங்கள்!

திணை மயக்கம்:

திணை மயக்கம் ஓர் இலக்கிய உத்தியாகப் பெரும்பாலும் அகவிலக்கியங்களில் காணப்படுகின்றது. முதல், கரு, உரி ஆகிய மூன்றும் அகத்திணைப் பாடலுக்குரிய பொருள்கள். இவற்றுள் முதற்பொருள் நிலம் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை), பொழுது (கார்காலம், கூதிர் காலம், வேனிற்காலம், வைகறை, விடியல், நண்பகல், மாலை, நள்ளிரவு) என இரண்டினைக் கொண்டது. கருப்பொருள்களாவன: தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, தொழில், யாழ் என்பன.
உரிப்பொருள்களாவன: புணர்தல் (குறிஞ்சி), இருத்தல்(முல்லை), ஊடல்(மருதம்), இரங்கல் (நெய்தல்), பிரிதல் (பாலை). இவற்றுள் பொழுதும் கருப்பொருளும் மயங்கி அமைய இயலும் என்பர். அவ்வத் திணைகளுக்குரிய கருப்பொருள்கள் அந்தந்தத் திணைகளுக்கே உரியதாக அமையின் சிறப்பாக இருக்கும். அவ்வாறு அமையாவிடினும், அவை அமைந்த நிலத்திற்குரியனவாகவே கருதப்பட வேண்டும் என்பது நியதி.  
ஒரு நிலத்திற்கே உரியதான பூக்கள் மற்ற நிலங்களிலும் பூக்க வாய்ப்புண்டு. நெய்தற் பூ மருத நிலத்திலும் பூக்கலாம்;  குறிஞ்சிக்குரிய பறவை வேறு நிலத்திலும் பறக்கலாம். இவ்வாறு வரும்பொழுது, அந்தந்தப் பூவையும் புள்ளையும் அவை உள்ள வேறு நிலங்களுடன் பொருத்திப் பொருள் உணர்ந்து
கொள்ள வேண்டும். காலமும் அவ்வாறே. குறிஞ்சிநிலப் பொழுதான யாமம் என்னும் சிறுபொழுதும்  முல்லை நிலத்தின் பெரும்பொழுதான கார்காலமும் மற்ற நிலங்களிலும் வரும் வாய்ப்புகள் உள்ளனவே! இதுவே திணை மயக்கம் எனப்படும்.
திணை என்பது உரிப்பொருளைக்கொண்டே முடிவு செய்யப்படுவதால், உரிப்பொருள் மயங்குவது இல்லை என்பது ஒரு கூற்று. ஆனால், நம்பியகப்பொருளில் ஐந்திணைக்குரிய எல்லாப் பொருள்களும் (முதல், கரு, உரி) மயங்கி வரலாம் எனக் கூறுவார். இதற்கான சான்றுகளாக சங்க இலக்கியங்களிலிருந்து பல பாடல்களையும் மேற்கோள்களாகக் காட்டியுள்ளார். 
பரஞ்சோதி முனிவர் தாமியற்றிய திருவிளையாடற் புராணத்தின் மதுரைக் காண்டத்தில், "திணை மயக்கம்' என்னும் தனித் தலைப்பிலேயே அழகான ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளார். முதலாவதாக, திருவிளையாடற் புராணம் அக இலக்கிய வகையைச் சார்ந்த இலக்கியம் அன்று; அடுத்து, திருவிளையாடல் புராணப் பாடல்கள் முற்றுமாகக் கருப்பொருளைச் சார்ந்தே படைக்கப்பட்ட - திணை மயக்கமாக இருப்பது மிகவும் வியப்பைத் தருகின்றது. திணைகள் இவ்வாறு மயங்கினாலும் இலக்கியச் சுவை மிகுந்து காணப்படுவதனால் இவை சொற்கோலமாகின்றன. 
முதல் காண்டமாகிய மதுரைக் காண்டத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதிக்குப் பின்பு நாட்டின் வளம் விவரிக்கப்படுகின்றது. பொருநை நதியின் சிறப்பு, அந் நதியின் வெள்ளம், உழவின் சிறப்பு, பயிர்களை விளைவிக்கும் முறை முதலியனவற்றைப் பரஞ்சோதி முனிவர் அழகாக விளக்குகிறார்.
அடுத்து, பாண்டிய நாட்டின் இயற்கை வளங்களை அழகும் சுவையும் மிளிர எடுத்துரைக்கும்போது, திணை மயக்கம் என்ற உத்தியைக் கையாண்டு, மதுரையின் இயற்கை வளத்தைப் போற்றித் தொடங்குகிறார். இப்பாடலே மிக்க வியப்பை விளைவிப்பது.

"இன் தடம் புனல் வேலிசூழ் இந்நில வரைப்பில்
குன்றம் முல்லை தண்பணை நெய்தல் 
குலத்தினை நான்கும்
மன்ற உள்ள மற்றவை நிற்க மயங்கிய மரபின்
ஒன்றோடு ஒன்று போய் மயங்கிய 
திணை வகை உரைப்பாம்' 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com