அதிமதுரக்கவி விளையாட்டு

"இன்ன சொல் கொண்டும், இன்ன பொருள் கொண்டும் உடனே பாடுக' என்றதும் காற்றைப் போலவும், விரைந்து பாயும் அம்பு போலவும் உடனே பாடுவது ஆசுகவி. சொற்சுவை பொருட்சுவை ததும்பப் பாடுவது மதுரகவி.
அதிமதுரக்கவி விளையாட்டு
Updated on
2 min read

"இன்ன சொல் கொண்டும், இன்ன பொருள் கொண்டும் உடனே பாடுக' என்றதும் காற்றைப் போலவும், விரைந்து பாயும் அம்பு போலவும் உடனே பாடுவது ஆசுகவி. சொற்சுவை பொருட்சுவை ததும்பப் பாடுவது மதுரகவி.  எழுத்தைச் சித்திரமாய் வடித்து நிரப்புவது சித்திரக்கவி. எதையும் விரிவாகப் பாடுவது வித்தாரகவி.

தொல்காப்பியர் கவிதைக்குரியதாகக் கூறிய உவமை என்றதோர் அணி மட்டும் பின்னாளில் பல்வேறாய்க் கிளைப்பதற்குரிய அடக்கக் குறியீடாக இருந்தது. அது வடமொழி அலங்காரத்தை ஒரோவழித் (ஒரு சாரார் மாட்டு-தொல்.பெ.3) தழுவிய நிலையில் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் ஆகிய நாற்பெரும் கவிப் பெருமையைத் தழுவித் தமிழில் வளர்ந்தது. இவற்றை ஏற்புழிக்கோடலாய்ப் பெற்ற தமிழ்ப் புலவர்கள் நாற்கவியினும் வல்லவராய் இருந்தனர். அவர்களுள் கவி காளமேகம் குறிப்பிடத் தகுந்தவராவார் !

பருவத்தில் பொழியும் மழை போல் அல்லாமல்,  உடனுக்குடன் கருக்கொண்டதும் பொழியும் மேகம் போல விரைந்து பாடும் ஆற்றலால் அவர் காளமேகப் புலவர் எனப்பட்டார். இவர் நாற்கவியிலும் புலமையுடையவர் என்பதால், பொதுவாகப் பாடும் சொற்சுவை, பொருட்சுவைக்கும் கூடுதலாகப் பாடவல்ல திறனால் அவர் "அதிமதுரக்கவி' எனப்பட்டார். இவற்றை சோதித்தறிய இரண்டு பாடல்களைக் காணலாம்.  "ஈ ஏற மலை குலுங்கியது' என்பதாக உடனே ஒரு பாடல் பாடுக எனச் சிலர் கேட்டதற்குக் கீழ்க்கண்டவாறு பாடினாராம்.

"வாரணங்கள் எட்டும் மாமேரு வும்கடலும்
தாரணியும் எல்லாம் சலித்தனவாம்-நாரணனைப்
பண்வாய் இடைச்சி பருமத்தி னாலடித்த
புண்வாயில் ஈமொய்த்த போது!'

சிறிய ஈ  உட்காரப் பெரியமலை  குலுங்காது  எனத் தெரிந்தும் காளமேகத்தின் கவித்துவத்தை அளக்க சிலர் சோதித்தபோது, அதைக் காளமேகப்புலவர் எளிதாக எதிர்கொண்டு பாடியதுதான் அவரின் ஆசுகவிக் கற்பனைத் திறனை உணர்த்தியது.

வெண்ணெய்த் திருடிய கண்ணனை ஆயர்குல இடைச்சிப் பெண்  ஒருத்தி மத்தால் அடிக்க, ஏற்பட்ட புண்ணில் ஈ மொய்த்ததாம். இதனால் அண்ட சராசரமே குலுங்கியதாம். அண்ட சராசரம் என்பது, பலமிக்க யானை போன்ற எட்டுத் திசைகளை உள்ளடக்கிய கடலும் மாமேரு மலைகளும் அடங்கியதாகும். இப்பாடல் கடவுளாம் கண்ணனுள் எல்லாம் அடக்கம் எனக் குறித்துப் பாடப்பட்ட ஆசுகவியாகும். 

பாண்டியன் பிரம்பினால் சிவனை அடித்தபோது அந்த அடி, உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டதாகப் பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடல் புராணத்தில்) பாடியது போன்றதுதான் இதுவும். காளமேகப் பாடலாயினும் "ஈயேற மலை குலுங்கிற்று' என்ற வியப்பைத் தருமாறு பாடிய கூடுதலால் காளமேகம் ஆசுகவி ஆனார்.

அடுத்து, பொருளற்ற ஒரே எழுத்தின் அடுக்கிற்குப் பொருள் உணர்த்திய சொல் விளையாட்டு வித்தகம் ஒன்றால், காளமேகம் மதுரகவி ஆகிறார் என்பது ஒரு பாடலால் உணரலாம்.

"ஓகாமா வீதோநே ரொக்க டுடுடுடுடு
நாகர் குடந்தை நகர்க்கதிபர் - வாகாய்
எடுப்பர், நடமிடவர், ஏறுவர்அன் பர்க்குக்
கொடுப்பர், அணிவர் குழை'

 இதில் உள்ள ஐந்து "டு'களுக்குத் தனித்த பொருள் இல்லை,  ஆனால் பாடலின் முதல் வரியில் உள்ள  ஓ, கா, மா, வீ, தோ ஆகிய ஐந்து நெடில் எழுத்துகளுடன் தனித்தனியே "டு' சேர ஓடு, காடு,  மாடு,  வீடு,  தோடு எனச் சொற்கள் அமையும். அவற்றைக் கீழேயுள்ள வினைச்சொற்களுடன் முறையே சேர்க்க, சிவனது இயல்பை அறிந்துகொள்ளச் செய்கிறார் காளமேகம்.

சிவனின் பிச்சைப் பாத்திரம் ஓடு; அவர் நடனமிடும் இடம் காடு;  ஏறும் வாகனம் மாடு; வணங்குவார்க்கு அளிப்பது வீடு (முத்தி); காதில் அணிந்திருப்பது தோடு (குழை); இப்பாடல் வழி, "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்கிற தொல்காப்பியத்தின் படி, எழுத்தும் சொல்லும் பொருட்பயன் நல்கும் புதுமையைக் கண்டு இன்புறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com